விளையாட்டு

IPL 2022: வினோதமாக தோற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்.. ஜாஸ் பட்லரின் அதிரடி வீண்!

ராஜஸ்தான் அணி ஸ்கோரை அற்புதமாக டிஃபண்ட் செய்கிறது. ஆனால், ட்ரெண்ட்படி வெல்ல வேண்டிய சேஸிங்கில் தோற்கிறது. வினோதம்தான்!

IPL 2022: வினோதமாக தோற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்.. ஜாஸ் பட்லரின் அதிரடி வீண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. முதலில் பேட் செய்தால் மட்டுமே வெல்வேன் என அடம்பிடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த போட்டியையும் சேஸ் செய்து இழந்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியே முதலில் பேட்டிங் செய்தது. குஜராத் அணியின் தமிழக வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு விஜய் சங்கர் சேர்க்கப்பட்டிருந்தார். முதல் இரண்டு போட்டிகளிலுமே ஓரளவுக்கு நன்றாக செயல்பட்டு ஸ்பார்க் காட்டியிருந்த சாய் சுதர்சனை அதற்குள் பென்ச்சில் வைத்தது ஏன் என புரியவில்லை. குஜராத்தின் பேட்டிங் தொடங்கியது. டாப் ஆர்டரில் அந்த அணிக்கு சுப்மன் கில்தான் மிகப்பெரிய பலம். அவர் மட்டுமே நின்று பெரிய இன்னிங்ஸ்களை ஆடுகிறார். ஆனால், இந்த போட்டியில் அவரும் கடுமையாக சொதப்பினார். பார்ட் டைமரான ரியான் பராக்கின் பந்தில் வெறும் 13 ரன்களில் அவர் அவுட் ஆனார். மேத்யூ வேட் 12 ரன்களில் ரன் அவுட் ஆக, விஜய் சங்கர் குல்தீப் சென்னின் பந்தில் எட்ஜ்ஜாகி சாம்சனிடம் கேட்ச் ஆகியிருந்தார். இளம் வீரரான குல்தீப் சென் 145+ கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக லைன் & லெந்த்தை மிஸ் செய்யாமல் வீசி ஆச்சர்யப்படுத்தினார்.

6.4 ஓவர்களிலேயே 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை குஜராத் இழந்திருந்தது. டாப் ஆர்டர் மொத்தமும் காலி. மிடில் ஆர்டர் வீரர்களாக உருமாறியிருக்கும் ஃபினிஷர்களே ஆட்டத்தை மேற்கொண்டு நகர்த்தி செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த சமயத்தில்தான் ஹர்திக் பாண்ட்யாவும் அபினவ் மனோகரும் கூட்டணி சேர்ந்தனர். இருவருமே நிலைமையை புரிந்து கொண்டு பொறுப்பாக ஆடினார். 10 வது ஓவர் வரை மெதுவாக விக்கெட்களை இழக்காமல் ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்தனர். இதன்பிறகு, இருவருமே வேகத்தை கூட்ட தொடங்கினர். 11-15 இந்த 5 ஓவர்களில் மட்டும் 58 ரன்கள் வந்திருந்தது. ஜேம்ஸ் நீஷம், குல்தீப், சஹால், அஷ்வின் என அத்தனை பேரின் ஓவர்களிலுமே பவுண்டரிக்களை அடித்திருந்தனர். 16-20 இந்த 5 ஓவர்களில் இன்னும் அதிகமாக 62 ரன்கள் வந்திருந்தது. இந்த டெத் ஓவர்களில் டேவிட் மில்லரும் அசரடித்தார். குல்தீப் சென் வீசிய ஒரே ஓவரில் 20 ரன்களை அடித்திருந்தார். ஒரே ஓவரில் 3 பவுண்டரிக்கள் ஒரு சிக்சர். கடைசி ஓவரில் ஹர்திக் பாண்ட்யா பட்டையை கிளப்பினார். கடைசி பந்தில் பவுண்டரியோடு ஆட்டத்தை முடித்து வைத்தார். ஹர்திக் 87 ரன்களிலும் மில்லர் 31 ரன்களிலும் நாட் அவுட்டாக இருந்தனர். அபினவ் 43 ரன்களை எடுத்திருந்தார்.

ராஜஸ்தானுக்கு டார்கெட் 193. ராஜஸ்தான் இதுவரை வென்றிருக்கும் 3 போட்டிகளையுமே ஸ்கோரை டிஃபண்ட் செய்துதான் வென்றிருக்கிறது. இந்த போட்டியில் மிகப்பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. சேஸ் செய்யும் அணிகளே தொடர்ந்து வெல்வதால் இந்த முறை ராஜஸ்தான் சேஸ் செய்தும் போட்டியை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணி ஏகத்துக்கும் சொதப்பி தோல்வியடைந்திருக்கிறது.

பவர்ப்ளேயில் மட்டுமே ராஜஸ்தான் அணி குஜராத்திற்கு கொஞ்சமேனும் சவால் அளித்தது. அதற்கு காரணம் ஜாஸ் பட்லர். ஷமி வீசிய முதல் ஓவரிலிருந்தே பவுண்டரிக்களை சிதறடித்திருந்தார். ஷமியும் யஷ் தயாளும் வீசியிருந்த முதல் 2 ஓவர்களில் மட்டுமே 28 ரன்களை பட்லர் எடுத்திருந்தார். தயாள் மீண்டும் வீசிய நான்காவது ஓவரில் மட்டும் 18 ரன்களை அடித்திருந்தார். ஆனால், பட்லரின் ஆட்டன் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பவர்ப்ளேயின் கடைசி பந்தில் ஒரு ஸ்லோ யார்க்கரில் பட்லரை ஃபெர்குசன் வீழ்த்தியிருந்தார். அரைசதத்தை கடந்த நிலையில் பட்லர் வெளியேறினார். இடையில் படிக்கலும் அஷ்வினும் தங்களின் விக்கெட்டுகளை இழந்திருந்தனர்.

அஷ்வின் நம்பர் 3 இல் வந்து ஆச்சர்யமளித்திருந்தார். ஜெய்ஸ்வால் மாதிரியான ரீட்டெய்ன் செய்யப்பட்ட இளம் வீரர்களை பென்ச்சில் வைத்துவிட்டு அஷ்வினை நம்பர் 3 யில் இறக்கியது அதிர்ச்சியளிக்கக்கூடிய முடிவாகவே இருந்தது.

பவர்ப்ளேக்கு பிறகு கேப்டன் சாம்சனை அட்டகாசமான முறையில் ஹர்திக் பாண்ட்யா டைரக்ட் ஹிட்டில் வீழ்த்தியிருப்பார். அங்கேயே போட்டி முடிந்துவிட்டது. இதன்பிறகு, ஹெட்மயர் கொஞ்சன் அதிரடி காட்டியிருந்தாலும் அவராலும் போட்டியை வென்று கொடுக்க முடியவில்லை. 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. குஜராத் அணியில் அறிமுக வீரர் யாஷ் தயாள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஸ்கோரை டிஃபண்ட் செய்ய முடியாமல் பல அணிகளும் தோற்கின்றன. ஆனால், ராஜஸ்தான் அணி ஸ்கோரை அற்புதமாக டிஃபண்ட் செய்கிறது. ஆனால், ட்ரெண்ட்படி வெல்ல வேண்டிய சேஸிங்கில் தோற்கிறது. வினோதம்தான்!

banner

Related Stories

Related Stories