மகளிர் உலகக்கோப்பை தொடரில் வியாழக்கிழமை நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புக்கு இந்த வெற்றி மிகவும் முக்கியம்.
இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே யாரும் எதிர்பாராத வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்தது நியூசிலாந்து. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ரன்கள் எடுக்க, 256 ரன்கள் எடுத்து 3 ரன்களில் தோற்றது. இருந்தாலும் வங்கதேச அணியுடனான போட்டியை எளிதாக வென்று வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது. மழையின் காரணமாக அந்தப் போட்டி 27 ஓவர்களாகக் குறைக்கப்பட, 9 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இத்தொடரை நடத்தும் நியூசிலாந்து.
இந்திய அணியோ பாகிஸ்தானை வென்று உலகக் கோப்பையை நம்பிக்கையோடு தொடங்கியிருக்கிறது. முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. ஆனால், 137 ரன்களில் ஆட்டமிழந்து படுதோல்வியடைந்தது பாகிஸ்தான்.
இந்நிலையில், வியாழக்கிழமை ஹாமில்டனில் இந்த இரு அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும். அதேசமயம் நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகும்.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக தொடக்கத்தில் தடுமாறியது. ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா இருவரும் நல்லதொரு பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டு வெளியேற, மிடில் ஆர்டர் அப்படியே சரிந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் எழுந்ததால், 170-180 ரன்கள் வருவதே கேள்விக்குறியானது. ஆனால், ஸ்னே ராணா - பூஜா வஸ்திராக்கர் இருவரும் எழாவது விக்கெட்டுக்கு ஒரு அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதனால், இந்திய அணி நல்ல ஸ்கோரை எடுத்தது. பந்துவீச்சிலும் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானை சுருட்டினர். ராஜேஷ்வரி கெய்க்வாட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இந்திய அணியில் இப்போது இருக்கும் ஒரு பெரிய பிரச்னை ஷஃபாலி வெர்மாவின் ஃபார்ம். தொடர்ந்து சுமாராக விளையாடிவரும் அவர், பாகிஸ்தானுக்கு எதிராகவும் டக் அவுட் ஆனார். தொடக்கத்தில் ஸ்மிரிதி மந்தனா சிறப்பாக விளையாடிவரும் நிலையில், அவரோடு சேர்ந்த ஷஃபாலி நல்ல தொடக்கம் தரவேண்டும். ஒருவேளை கேப்டன் மிதாலி ராஜ் மாற்றம் செய்ய நினைத்தால், இன்னொரு இளம் வீராங்கனை யஷ்திகா பாடியாவை ஆடவைக்கலாம்.
பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்த பூஜா வஸ்திராக்கர், காலில் காயம் ஏற்பட்டதால் பந்துவீசவில்லை. இந்தப் போட்டியில் அவர் முழுமையாக குணமடைந்து ஆடுவது இந்திய அணிக்கு அவசியம்.
நியூசிலாந்து அணியில் கேப்டன் சோபி டிவைன், ஏமி சேத்தர்வெய்ட், அமேலியா கேர், ஜெஸ் கேர் என முன்னணி வீராங்கனைகள் அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். வங்கதேசத்துக்கு எதிராக அற்புதமான கம்பேக் கொடுத்து முதல் போட்டியின் தோல்வியிலிருந்து மீண்டிருக்கின்றனர்.
உலகக் கோப்பைக்கு முன்பு நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், நியூசிலாந்து 4 போட்டிகளில் வென்று அசத்தியிருந்தது. அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும்.