விளையாட்டு

உச்சக்கட்ட ஃபார்மிலிருந்தும் ஓரங்கட்டப்படும் ருத்துராஜ் கெய்க்வாட்: காரணம் என்ன?

உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தபோது தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து ருத்துராஜ் கெய்க்வாட் இந்திய அணி ஓரங்கட்டியுள்ளது.

உச்சக்கட்ட ஃபார்மிலிருந்தும் ஓரங்கட்டப்படும் ருத்துராஜ் கெய்க்வாட்: காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட நிலையில் இன்று கடைசி ஓடிஐ போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக ஆடி வருகிறது.

தொடரே கையைவிட்டு சென்றுவிட்டதால் பென்ச்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு ப்ளேயிங் லெவனில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ், பிரசித் கிருஷ்ணா, தீபக் சஹார் ஆகியோர் அணிக்குள் வந்திருக்கின்றனர். ஆனால், ருத்துராஜ் கெய்க்வாட் மட்டும் இன்னமும் பென்ச்சிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த தென்னாப்பிரிக்க தொடர் மட்டுமில்லை. இதற்கு முன்பு உள்ளூரில் நடந்த நியுசிலாந்து தொடரிலும் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு அணியில் இடம் கிடைத்திருந்தது. ஆனால், ஒரு போட்டியில் கூட ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்திருக்கவில்லை. பென்ச்சிலேயேதான் உட்காந்திருந்தார். கடந்த நான்கைந்து மாதத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் செய்திருக்கும் சாதனைகள் ரொம்பவே பெரிது.

உச்சக்கட்ட ஃபார்மிலிருந்தும் ஓரங்கட்டப்படும் ருத்துராஜ் கெய்க்வாட்: காரணம் என்ன?

2021 ஐ.பி.எல் தொடரில் 16 போட்டிகளில் ஆடி 635 ரன்களை எடுத்திருந்தார். ஆரஞ்சு தொப்பியையும் வென்றிருந்தார். சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு மிக முக்கிய காரணமே ருத்துராஜ் கெய்க்வாட்தான்.

இந்த ஐ.பி.எல் தொடருக்கு பிறகு நடந்த சையத் முஷ்தாக் அலி டி20 தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக 5 போட்டிகளில் 3 அரைசதங்களை அடித்திருந்தார். ஒரு போட்டியில் 44 ரன்களை எடுத்திருந்தார். ஒரு போட்டியில் மட்டுமே சொதப்பியிருந்தார். மொத்தமாக 5 போட்டிகளில் 259 ரன்களை எடுத்திருந்தார்.

இதன்பிறகு நடந்த விஜய் ஹசாரே தொடரில் 5 போட்டிகளில் 4 சதங்களை அடித்திருந்தார். இந்த 4 சதங்களில் இரண்டு 150+ ஸ்கோரும் அடங்கும். ஒரே ஒரு போட்டியில் மட்டும் 21 ரன்களை எடுத்திருந்தார். மொத்தமாக 5 போட்டிகளில் 603 ரன்களை எடுத்திருந்தார்.

ஐ.பி.எல், உள்ளூர் கிரிக்கெட் இரண்டையும் சேர்த்து கடந்த நான்கைந்து மாதங்களில் ருத்துராஜ் கெய்க்வாட் அளவுக்கு வேறெந்த இந்திய வீரரும் ஸ்கோர் செய்திருக்கவில்லை. அப்படியான உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் ஒரு வீரரை இரண்டு தொடர்களாக (3 T20, 3 ODI) பென்ச்சில் மட்டுமே வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.

உச்சக்கட்ட ஃபார்மிலிருந்தும் ஓரங்கட்டப்படும் ருத்துராஜ் கெய்க்வாட்: காரணம் என்ன?

ரோஹித், ராகுல், தவான் என பெரிய தலைகள் இருப்பதால் ருத்துராஜுக்கு ஓப்பனிங் ஸ்பாட்டில் இடம் இல்லை என சொன்னால் ஒத்துக்கொள்ளலாம். எவ்வளவோ திறமைகள் இருந்தும் சூப்பர் ஸ்டார் வீரர்களின் இடத்தை பிடிக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் வீரர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். இந்தியா மட்டுமில்லை. உலகம் முழுவதுமே இதுதான் நிலைமை. ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் ஆகிய முதல் தர வேகப்பந்து வீச்சாளர்களை தாண்டி அணியில் இடம்பிடிக்க முடியாமல் மைக்கேல் நீசர் எனும் வேகப்பந்து வீச்சாளர் கடுமையாக போராடி வந்தார்.

உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளியவர். ஆனாலும், தேசிய அணியில் ஒரு போட்டியில் ஆடுவதற்காக தவம் கிடக்க வேண்டியிருந்தது. 17 டெஸ்ட் போட்டிகளாக பென்ச்சில் உட்கார வைக்கப்பட்ட பிறகு கடைசியாக இந்த ஆஷஸில்தான் மைக்கேல் நீசருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. அதுவும் ஹேசல்வுட்டிற்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் மட்டுமே. இதே விஷயத்தை ருத்துராஜோடும் பொருத்தி பார்க்கலாம்.

பெரிய ஸ்டார் வீரர்கள் இருப்பதால் ருத்துராஜுக்கு இடம் கிடைக்கவில்லை என சப்பை கட்டு கட்டலாம். சரிதான், ஆனால் முக்கியமான போட்டிகளுக்கு அந்த காரணத்தை ஏற்றுக்கொள்ளலாம். தொடரை வென்றுவிட்டோ அல்லது தோற்றுவிட்டோ ஆறுதலாக ஆடப்படும் கடைசி போட்டியில் கூட ஆட தகுதியற்றவரா ருத்துராஜ் கெய்க்வாட்??

நியுசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் இந்தியா வென்று தொடரையும் வென்றுவிட்டது. இந்த இரண்டு போட்டிகளிலும் ரோஹித் மற்றும் ராகுலே ஓப்பனர்களாக இறங்கினார்கள். ஒருவர் கேப்டன், இன்னொருவர் துணை கேப்டன்.

முதல் இரண்டு போட்டிகளிலேயே தொடரை வென்றுவிட்டதால் அடுத்த மூன்றாவது போட்டியில் ராகுல் ஓய்வெடுக்கிறார். இந்த சமயத்தில் ரோஹித்தோடு ருத்துராஜை ஓப்பனிங் இறக்கியிருக்க முடியும். ஆனால், அந்த சமயத்தில் அரைகுறை ஃபார்மோடு இருந்த இஷன் கிஷனையே ரோஹித் தன்னோடு ஓப்பனிங் இறங்க தேர்வு செய்தார். ருத்துராஜ் பென்ச்சிலேயே இருந்தார்.

இப்போது இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திலும் அதேதான் நிகழ்ந்திருக்கிறது. ரோஹித் இல்லாததால் கேப்டன் என்கிற முறையில் தானே ஓப்பனிங் இறங்கப்போவதாக ராகுல் அறிவித்துக் கொண்டார். இதனால் அனுபவமற்ற மிடில் ஆர்டர் கடுமையாக சொதப்பி தொடரையும் இழந்தாயிற்று.

இப்போது மூன்றாவது போட்டி நடக்கிறது. ப்ளேயிங் லெவனில் 4 மாற்றங்கள். ஆனாலும் ருத்துராஜுக்கு இடமில்லை. தவானுக்கு ஓய்வளித்துவிட்டு ருத்துராஜை ராகுலால் தன்னோடு ஓப்பனிங் இறக்கியிருக்க முடியும் அல்லது கடந்த 2 போட்டிகளிலும் செய்த தவறை திருத்தும் பொருட்டு ராகுல் மிடில் ஆர்டருக்கு இறங்கி ருத்துராஜை ஓப்பனராக்கியிருக்க முடியும். ஆனால், இந்த இரண்டையுமே ராகுல் செய்யவில்லை.

இங்கே கேப்டன்களான ரோஹித் மற்றும் ராகுல் மட்டுமில்லை. பயிற்சியாளர் டிராவிட்டையுமே விமர்சித்துதான் ஆக வேண்டும். ரவி சாஸ்திரிக்கு பிறகான பயிற்சியாளர் தேடுதலில் பிசிசிஐ இறங்கிய போது ஒரு செய்தி வெளியாகியிருந்தது. 'இந்திய அணி இப்போது ஒரு Transition Period' இல் இருக்கிறது. இந்த சமயத்தில் ஒரு கறாரான ஆளுமைமிக்க பயிற்சியாளரே இந்திய அணிக்கு தேவை. அதாவது, கேப்டன்கள் வைத்ததுதான் சட்டம் என்றில்லாமல் அணிக்குள் தனது அதிகாரத்தை படரவிட்டு அடுத்த சில ஆண்டுகளுக்கான இந்திய அணியை உருவாக்கும் வகையிலான பயிற்சியாளரே தேவை.' என பிசிசிஐ விரும்பியதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

உச்சக்கட்ட ஃபார்மிலிருந்தும் ஓரங்கட்டப்படும் ருத்துராஜ் கெய்க்வாட்: காரணம் என்ன?

பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியிருந்த அனில் கும்ப்ளேவிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதும் இதன் தொடர்ச்சிதான். கடைசியில் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் ஆக்கப்பட்டார். ஹெட்மாஸ்டர் போன்று முடிவுகளை எடுக்க டிராவிட்டும் சரியான நபராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே நடந்ததாக தெரியவில்லை. ராகுல் நினைத்ததை ராகுல் செய்கிறார். ரோஹித் நினைத்ததை ரோஹித் செய்கிறார்.

விளைவு, அடிக்கடி காயமடைந்து ஏமாற்றமளிக்கும் ரோஹித் சர்மாவிற்கு ஒரு பேக் அப் ஆப்சனாக ருத்துராஜை கருதி அவருக்கு கிடைக்கிற சமயங்களில் வாய்ப்பளித்து மெருகேற்றும் வாய்ப்பை அடுத்தடுத்த இரண்டு தொடர்களில் இந்திய அணி கோட்டை விட்டிருக்கிறது. இதனால் ருத்துராஜுக்கு பெரிய பின்னடைவில்லை. காத்திருக்க அவர் எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறார்.

இரண்டரை சீசனாக பென்ச்சிலேயே வைக்கப்பட்டு இவரிடம் ஸ்பார்க்கே இல்லை என கேப்டனால் விமர்சிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு அதன்பிறகு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி ரன்களை குவித்து அந்த அணியை அவமானங்களிலிருந்து மீட்டு சாம்பியனாக்கியவர். இந்திய அணிக்காகவும் சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்க அவர் தயாராகத்தான் இருப்பார். ஆனால், இப்படியே நீண்ட காலம் அவரை ஒதுக்கிவிட முடியாது. முன்னாள் வீரர் மற்றும் கமெண்டேட்டர் நாஸிர் ஹுசைன் அடிக்கடி ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்வார். அது 'நல்ல திறமையாளர்களை நீங்கள் எல்லா பொழுதும் எல்லா நேரமும் அடக்கி வைத்துவிட முடியாது'.

அதேதான் You can't keep away and control a Player like Ruturaj for every time!!!!

banner

Related Stories

Related Stories