விளையாட்டு

முதல்முறையாக ராகுல் தலைமையில் களம் காணும் இந்திய அணி : பலம் - பலவீனம் என்ன?

தென்னாப்ரிக்கா உடனான ஒருநாள் தொடர் போட்டியில் முதல்முறையாக ராகுல் தலைமையில் இந்திய அணி களம் காணுகிறது.

முதல்முறையாக ராகுல் தலைமையில் களம் காணும் இந்திய அணி : பலம் - பலவீனம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா-தென்னாப்ரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை கட்டாயம் கைப்பற்ற வேண்டிய முனைப்பில் களம் காண்கிறது.

தென்னாப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 1-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை தவறவிட்ட நிலையில், இரு அணிகளிடையேயான ஒருநாள் போட்டி தொடர் நாளை தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை நண்பகல் 2 மணிக்கு போலந்து பார்க் மைதானத்தில் தொடங்குகிறது. ஒருநாள் அணிக்கு ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் காயத்தால் அவதிப்படும் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தொடரை தவறவிட்ட இந்திய அணி, ஒருநாள் தொடரை வெல்ல வேண்டிய வேட்கையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கே.எல்.ராகுல் தலைமையில் இந்தியா களமிறங்குகிறது என்பதை தாண்டி, அனைத்து வகை போட்டியிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி மீண்டும் ஒரு சக வீரராக அணியில் விளையாட இருப்பது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் அனுபவ வீரர்களான ஷிகர் தவான், அஸ்வின், சஹால் போன்ற வீரர்கள் வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பான பங்களிப்பை அளிக்கும் முயற்சியில் உள்ளனர். ஆகையால், ஒருநாள் தொடரை வெல்ல எல்லா வகையிலும் இந்திய அணி தன்னுடைய முழு பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தென்னாப்ரிக்க அணியை பொறுத்தவரை டெஸ்ட் தொடரை வென்று, சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணி என்ற வரலாற்றை மீண்டும் எழுதியுள்ளது. ஆகையால், அந்த அணி ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் முழுமையாக ஆயத்தமாகி வருகிறது. கீகன் பீட்டர்சன், மார்கோ ஜான்சென், காகிசோ ரபாடா என டெஸ்ட் போட்டியில் ஜொலித்த வீரர்கள் ஒருநாள் தொடரிலும் அதே உத்வேகத்துடன் உள்ளனர்.

இவ்விரு அணிகளும் இதுவரை 84 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதில் 35ல் இந்தியாவும், 46 ல் தென்னாப்ரிக்காவும் வெற்றி கண்டுள்ளன.

போட்டி நடைபெறக்கூடிய போலாந்து பார்க் மைதானத்தை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு எனவும் கருத்து கூறப்பட்டுள்ளது. இதுவரை இந்த மைதானத்தில் 13 போட்டிகள் நடைபெற்றுள்ளதில் முதலில் பேட்டிங் செய்த அணியே 7முறை வெற்றி கண்டுள்ளது. போலாந்து பார்க் மைதானத்தில் இந்தியா, தென்னாப்ரிக்காவை முதல் முறையாக எதிர்கொள்வது இப்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, 2022 ஆம் ஆண்டு பிறந்த பின் இந்தியா விளையாடும் முதல் ஒருநாள் தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories