இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்திருந்த நிலையில் கோலி திடீரென இப்படி ஒரு முடிவை அறிவித்திருக்கிறார்.
விராட் கோலி கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பிறகு, ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகியிருந்தார். இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் மோசமான தோல்வியை அடைந்ததை தொடர்ந்து பிசிசிஐ தாமாக முன் வந்து கோலியை ஓடிஐ போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்தும் விலக்கியிருந்தது. கோலிக்கு பதில் ரோஹித் சர்மா இந்திய அணியின் புதிய லிமிட்டெட் ஓவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். கோலி டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என இழந்திருந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்தும் கோலி விலகியிருக்கிறார்.
'முழுமையான உழைப்போடும் ஈடுபாட்டோடும் அணியை கடந்த 7 ஆண்டுகளாக வழிநடத்தியிருக்கிறேன். நான் எப்போதும் எதிலும் என்னுடைய 120% அளிக்க வேண்டும் என நினைப்பேன். அதை செய்ய முடியாத சமயத்தில் அதை ஏற்றுக்கொண்டு செய்ய துணிவது சரியான விஷயமில்லை' இப்படி அறிக்கை வெளியிட்டிருக்கும் விராட் கோலி பிசிசிஐ மற்றும் தோனிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்திருக்கிறார்.
விராட் கோலி ஓடிஐ போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்ட போதே பிசிசிஐக்கும் கோலிக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தது. பிசிசிஐயும் கங்குலியும் பேசியவற்றிற்கு மாறாக விராட் கோலியே வெளிப்படையாக சில விஷயங்களை பேசியிருந்தார். அப்போதே கோலி டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவார் என கணிக்கப்பட்டது. பிசிசிஐ விராட் கோலியின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவதாக அவர் நினைக்கும் போது டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக மட்டும் இருந்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அதனாலயே விராட் கோலியே தாமாக முன்வந்து கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டார் என பேசப்படுகிறது.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரைக்கும் இந்திய அணியின் சிறந்த கேப்டன் விராட் கோலியே. முந்தைய கேப்டன்கள் பெற்றுக்கொடுத்த வெற்றியை விட கோலி அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். வெற்றிகளை விட அவர் அணிக்கு பழக்கிய அந்த போர்க்குணம் அதுதான் ரொம்பவே முக்கியம். 2014 தொடரில் அடிலெய்ட் போட்டியில் விராட் கோலி முதன் முதலாக கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டார். அந்த போட்டியில் மிகப்பெரிய இலக்கை நோக்கி விராட் கோலி சேஸிங்கை முன்னெடுத்திருப்பார். வெற்றி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், ஒருபோதும் ட்ராவுக்காக ஆடக்கூடாது என அக்ரசிவ் மனநிலையை அணிக்கு முதல் போட்டியிலேயே உண்டாக்கினார். அவர் விதைத்த அந்த விதைதான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கூட இந்திய அணி மாபெரும் சாதனைகளை செய்ய காரணமாக இருந்தது. கோலி விதைத்த அந்த போர்க்குணத்திற்காக அவர் என்றைக்குமே நினைவுக்கூறப்படுவார்.