இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கேப்டவுனில் நடந்த இந்த போட்டியை தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. போட்டியை மட்டுமல்லாமல் 2-1 என தொடரையும் வென்றுள்ளது. வலிமையான இந்திய அணி வீழ்ச்சிப்பாதையில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியை எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது வேறு.
மூன்றாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 101-2 என்ற நிலையில் இருந்தது. தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னமும் 111 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் இன்றைய நாள் ஆட்டம் தொடங்கியது.111 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாயினும் நேற்றைய நாள் முடிவில் டீன் எல்கரின் விக்கெட்டோடு இந்தியா முடித்திருந்தது. அதே பாசிட்டிவிட்டியோடு வந்து தென்னாப்பிரிக்க அணியை இன்று சிரமப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்க அணி எளிதில் ரன்களக் சேர்த்து வென்றுவிட்டது. இந்திய பௌலர்களால் மேற்கொண்டு ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது. அதுவும் போட்டி ஏறக்குறைய தென்னாப்பிரிக்காவின் கைக்குள் சென்ற பிறகே நிகழ்ந்தது.
கீகன் பீட்டர்சன் மிகச்சிறப்பாக ஆடி அரைசதத்தை கடந்திருந்தார்..முதல் இன்னிங்ஸிலும் இவர் ஆடிய ஆட்டம்தான் தென்னாப்பிரிக்க அணியை கரை சேர்த்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இவரே மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடியிருந்தார். 82 ரன்களை எடுத்திருந்தார். போட்டியை மொத்தமாக தென்னாப்பிரிக்கா பக்கமாக திருப்பிவிட்டார். பீட்டர்சன் 59 ரன்களில் இருந்த போது பும்ரா பந்தில் ஸ்லிப்பில் நின்ற புஜாராவுக்கு ஒரு கேட்ச்சை கொடுத்தார். ஆனால், அந்த கேட்ச்சை புஜாரா கோட்டைவிட்டிருந்தார். அவர் கேட்ச்சை மட்டும் விடவில்லை. மேட்ச்சையே விட்டிருந்தார். அந்த கேட்ச்சை மட்டும் புஜாரா சரியாக பிடித்திருந்தால் ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமாக சென்றிருக்கும். இந்தியாவிற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். பீட்டர்சன் அவுட் ஆன பிறகு வாண்-டர்-டஸனும் பவுமாவும் எளிதாக அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றுவிட்டனர். தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தொடரையும் 2-1 என வென்றது. பீட்டர்சனுக்கே ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்திய பௌலர்கள் தங்களால் இயன்றவரை சிறப்பாகவே வீசியிருந்தனர். ஆனால், இந்திய பேட்டிங் லைன் அப். அதுதான் இங்கே பிரச்சனை. செட்டாகாத ஓப்பனிங் கூட்டணி முழுமையான ஃபார்மில் இல்லாத மிடில் ஆர்டர் என அத்தனையும் சொதப்பல் ரகமே. அந்த பேட்டிங் சொதப்பலுக்கு கிடைத்த அடிதான் இந்த தொடர் தோல்வி. தவறுகளிலிருந்து பாடம் கற்குமா இந்திய அணி?