இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியை இந்தியா வென்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டியை தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பாக வென்று தொடரை 1-1 என சமனாக்கியிருக்கிறது.
சென்ச்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியை இந்தியா வென்றிருந்தது. சென்ச்சூரியனில் அதற்கு முன் எந்த ஆசிய அணியுமே தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதில்லை. அந்த சாதனையை முதல் முதலாக இந்தியா செய்து தொடரை சிறப்பாக தொடங்கியிருந்தது. இரண்டாவது போட்டி ஜோஹனஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் ஆடிய போட்டிகளில் இந்திய அணி இதுவரை தோற்றதே இல்லை. முதல் முறையாக இந்த போட்டியிலேயே தோல்வியை தழுவியிருக்கிறது.
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்திருந்தது. 118-2 என்ற நிலையிலிருந்த தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு மேலும் 122 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் டீன் எல்கரும் வாண்டர் டஸனும் க்ரீஸில் இருந்தனர். பலத்த மழை காரணமாக முதல் இரண்டு செஷனுமே தடைப்பட்டது. மூன்றாவது செஷனும் மழையால் தடைப்பட்டுவிடும் என கணிக்கப்பட்ட நிலையில் திடீரென மழை நின்று வானம் தெளிந்து சர்ப்ரைஸ் கொடுத்தது. கடைசி செஷன் ஆட்டம் மட்டும் தொடங்கியது.
ஐந்தாவது நாளிலும் மழை பாதிப்பு இருக்கும் என்பதால் இந்த ஒரே செஷனில் போட்டியை முடித்துவிட வேண்டும் என்பதே இரண்டு அணிகளின் எண்ணமாகவும் இருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவின் எண்ணமே பலித்தது. மேலும் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து கேப்டன் டீன் எல்கரின் அட்டகாசமான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
மழை பெய்திருந்ததால் பிட்ச்சில் இந்திய பௌலர்களுக்கு வித்தை காட்ட ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பந்தும் மூவ் ஆகவே செய்தது. ஆனால், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பாக சமாளித்திருந்தனர். ஃபுல் லெந்த் பந்துகளையும் ஷார்ட் பிட்ச் பந்துகளையும் அட்டாக் செய்து பவுண்டரி ஆக்கி ஸ்கோரையும் வேகமாக உயர்த்தினர். டீன் எல்கரும் இந்திய பௌலர்களும் உரசல் போக்கையே கடைபிடித்தனர். ஆனால், இந்திய பௌலர்கள் இந்த அக்ரசனை பந்துவீச்சில் வெளிக்காட்டவில்லை. வழக்கமான கேப்டனான விராட் கோலி இல்லாமல் ராகுல் கேப்டனாக இருந்ததால் அவரும் இந்த மாதிரியான அழுத்தமான சூழலில் கேப்டன்சி செய்ய தடுமாறியிருந்தார். இதெல்லாம் தென்னாப்பிரிக்க அணிக்கு சாதகமாகவே அவர்கள் நினைத்ததை போன்று நேற்றே ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார்கள். கேப்டன் டீன் எல்கர் 96 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
இந்த தோல்விக்கு இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய பௌலர்களின் சொதப்பலும் ஒரு காரணமாக இருந்தாலும், முக்கிய காரணம் இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலே. முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கும் இரண்டாம் இன்னிங்ஸில் 266 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆகியிருந்தனர். இந்த சொதப்பலே தோல்விக்கு முதல் முக்கிய காரணம். தொடரின் முடிவை தீர்மானிக்கப்போகும் அடுத்த போட்டியிலாவது பேட்டிங்கில் இந்தியா பெரிதாக பெர்ஃபார்ம் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.