19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இந்திய அணியும் இலங்கை அணியும் மோதிய இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், குவைத், நேபாளம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்றிருந்தன.
இந்த எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இந்திய அணி இடம்பெற்றிருந்த பிரிவில் ஆஃப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன.
லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிப்பெறும். இந்திய அணியை பொறுத்தவரைக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே தோற்றிருந்தது. ஐக்கிய அரபு அமீரகம், ஆஃப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கெதிரான போட்டியை வென்றிருந்தது. இந்தப் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதிக்கு முன்னேறின. இன்னொரு பிரிவில் வங்கதேசமும் இலங்கையும் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதியில் இந்திய அணி வங்கதேசத்துடன் மோதியிருந்தது. அந்தப் போட்டியை 103 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான இன்னொரு அரையிறுதியில் இலங்கை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மோதின. டாஸை வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்திருந்தது. இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் அத்தனை பேருமே ரொம்பவே சுமாராகத்தான் ஆடியிருந்தனர். சொற்ப ரன்களில் அவுட் ஆகியிருந்தனர். இடையில் மழை குறுக்கிட்டதால் போட்டியும் 38 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலங்கை அணி 38 ஓவர்களில் 106 ரன்களையெடுத்து 9 விக்கெட்டுகளை இழ்ந்திருந்தது. இந்திய அணியின் சார்பில் விக்கி 3 விக்கெட்டுகளை கௌசல் தாம்பே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். ராஜவர்தன், ரவிக்குமார், ராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.
சேஸிங்கை தொடங்கிய இந்திய அணி 21.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியிருந்தது. ஓப்பனிங் வீரரான ரகுவன்ஸி 67 பந்துகளில் 56 ரன்களையும் ஒன் டவுனில் இறங்கிய ஷேக் ரஷீத் 49 பந்துகளில் 31 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆசியக்கோப்பையை வென்றது.
இந்திய அணியின் ஓப்பனரான ஹர்னூர் சிங் இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியிருந்தார்.
இந்திய அணியின் இந்த ஆசியக்கோப்பை வெற்றி அடுத்து வரவிருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான சிறப்பான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.