இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்நிலையில், இன்று மதியம் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனான விராட் கோலி பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். இதில், பிசிசிஐ குறித்து வெளிப்படையாகச் சில விஷயங்களைப் பேசியுள்ளார்.
இந்திய அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகப்போவதாக விராட் கோலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் ODI மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர்ந்து செயல்படுவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் டிசம்பர் 8ஆம் தேதி தென்னாப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணியை பிசிசிஐ அறிவித்தது. இதனுடன், இனி இந்தியாவின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக ரோஹித் சர்மாவே செயல்படுவார் என்றும் போகிற போக்கில் அறிவித்திருந்தனர். அதில், விராட் கோலி குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெற்றிருக்கவில்லை. இதுவே விராட் கோலிக்கு நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அவமானமாக கருதப்பட்டது.
இந்நிலையில் இந்த முடிவு வெளியாகி 24 மணி நேரம் கழித்து பிசிசிஐயின் செயலாளரான சவுரவ் கங்குலி இது குறித்து பேசினார். விராட் கோலி டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். கேப்டன்சியை விட்டுக்கொடுக்காதீர்கள் எனக் கூறினேன். ஆனாலும் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கு இரண்டு கேப்டன்கள் என்பது செட் ஆகாது. அதனால்தான் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என கங்குலி பேசியிருந்தார்.
இந்த சர்ச்சைகள் குறித்து விராட் கோலி இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார். 'நான் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது அதை பிசிசிஐ தரப்பில் முழுமனதோடு ஏற்றுக்கொண்டார்கள். யாரும் என்னிடம் வந்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்கவில்லை' என கோலி கூறியிருக்கிறார்.
கோலியின் இந்த ஸ்டேட்மெண்ட் உண்மையெனில், 'கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்காதீர்கள்' என கங்குலி கோலியிடம் பேசியதாகக் குறிப்பிட்டது வடிகட்டிய பொய்.
மேலும் பேசிய கோலி 'கேப்டன்சி விஷயத்தில் பிசிசிஐக்கும் எனக்கும் சரியான தகவல் பரிமாற்றம் நிகழவே இல்லை. ODI போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து என்னை நீக்குவதாக வெளியான அறிவிப்பிற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்புதான் என்னை தொடர்பு கொண்டார்கள். தேர்வாளர் குழு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக சொன்னார்கள். OK..Fine என நான் கூறிவிட்டேன்'
இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றி சதவீதத்தை வைத்திருக்கும் கேப்டன் விராட் கோலியே. அப்படி ஒரு வீரரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்போவதாக எடுத்த முடிவை வெறும் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவே பிசிசிஐ அவரிடம் தெரிவித்திருக்கிறது. எனில் வீரர்களுக்கு பிசிசிஐ கொடுக்கும் மரியாதை என்ன?
'உலகக்கோப்பையை வெல்லவில்லை என்பது பிரச்சனையாக இருக்கலாம், புரிகிறது. ரோஹித் சர்மா நல்ல கேப்டன். ரோஹித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டின் கனவுகளையும் எண்ணங்களையும் நிறைவேற்ற என்னால் முடிந்த அளவுக்கு முயற்சிப்பேன். இந்திய அணியை பின்னிழுக்கும் வகையிலான செயலை ஒரு காலத்திலும் செய்யமாட்டேன்' என்பதையும் விராட் கோலி பேசியுள்ளார்.
பிசிசிஐ மீதும் கங்குலி மீதும் சரமாரியான கேள்விகள் எழும் வகையில் விராட் கோலி மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். விராட் கோலியின் இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிசிசிஐ விரைவில் விளக்கமளிக்கக்கூடும். அதிலாவது, ஒளிவு மறைவின்றி பிசிசிஐ உண்மையை பேச வேண்டும்.