விளையாட்டு

முதல் வெற்றிக்கு குறிவைக்கும் இந்தியா... தாவீதாக முன்நிற்கும் ஆஃப்கானிஸ்தான்... என்ன நடக்க போகிறது?

அரையிறுதிக்கு தகுதிப்பெற இந்திய அணிக்கு ஒரு சிறிய வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் இந்திய அணி இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும்.

முதல் வெற்றிக்கு குறிவைக்கும் இந்தியா... தாவீதாக முன்நிற்கும் ஆஃப்கானிஸ்தான்... என்ன நடக்க போகிறது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டி20 உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் இந்திய அணியும் ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதவிருக்கின்றன. ஆஃப்கானிஸ்தான் அணி ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டை வென்றிருக்கிறது. இந்திய அணி ஆடிய இரண்டு போட்டிகளையும் தோற்றுள்ளது. அரையிறுதிக்கு தகுதிப்பெற இந்திய அணிக்கு ஒரு சிறிய வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் இந்திய அணி இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும்.

டாஸ்:

இந்திய அணி இந்த போட்டியில் வெல்ல வேண்டுமாயின் முதலில் டாஸை வெல்ல வேண்டும். டாஸை வெல்வதும் தோற்பதும் கேப்டன் கோலியின் கையில் இல்லை. ஆனால், கடந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணி தோற்றதற்கு டாஸ் தோல்வியும் முக்கிய காரணமாக இருந்தது. இந்த உலகக்கோப்பையில் டார்கெட்டை சேஸ் செய்யும் அணிகளே அதிகம் வெல்கின்றன. இன்றைய போட்டி நடைபெறும் அபிதாபி மைதானத்தில் இதுவரை 10 போட்டிகள் நடைபெற்றுள்ளது. பத்தில் ஏழு போட்டிகளில் டார்கெட்டை சேஸ் செய்த அணிகளே வென்றுள்ளது. அதனால் இந்திய அணி டாஸை வென்று ஸ்கோரை சேஸ் செய்வதே சரியான விஷயமாக இருக்கும்.

பேட்டிங் ஆர்டர்:

ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஓப்பனர்கள். நம்பர் 3 இல் விராட் கோலி. நம்பர் 4 இல் இஷன் கிஷன்/சூரியகுமார் யாதவ் இதுதான் இந்திய அணியின் இயல்பான பேட்டிங் ஆர்டர். ஆனால், இதை கடந்த போட்டியில் அப்படியே தலைகீழாக்கி வைத்திருந்தனர். இஷன் கிஷனும் ராகுலும் ஓப்பனர்களாக வந்தனர். ரோஹித் நம்பர் 3 யிலும் கோலி நம்பர் 4 லும் வந்தார். இப்படி பேட்டிங் ஆர்டரை களைத்து போட்டது பெரும் பின்னடைவை கொடுத்தது. யாரும் பெரிதாக சோபிக்கவே இல்லை. அதனால் இந்த போட்டியில் மீண்டும் இயல்பான பேட்டிங் ஆர்டருக்கே திரும்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், எந்த வரிசையில் வீரர்கள் இறங்கினாலும் பெர்ஃபார்ம் செய்ய வேண்டும். இந்திய அணியின் டாப் ஆர்டர் சொதப்பினால் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் சொதப்புகின்றனர். கடந்த இரண்டு போட்டியின் தோல்விக்கும் டாப் ஆர்டரின் சொதப்பலே மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. எனவே இந்த போட்டியில் ராகுல், ரோஹித், கோலி என டாப் ஆர்டர் கட்டாயம் பெர்ஃபார்ம் செய்தே ஆக வேண்டும்.

முதல் வெற்றிக்கு குறிவைக்கும் இந்தியா... தாவீதாக முன்நிற்கும் ஆஃப்கானிஸ்தான்... என்ன நடக்க போகிறது?

பௌலிங்:

பந்துவீச்சை பொறுத்த வரைக்கும் கடந்த இரண்டு போட்டியையும் சேர்த்தே இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறது. அதுவும் பும்ரா மட்டுமே அந்த 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஹர்திக் பாண்ட்யா பந்து வீச தொடங்கியிருப்பது நல்ல விஷயம். ஆனால், மற்ற பௌலர்கள் யாரும் பெர்ஃபார்ம் செய்யாமல் இருப்பது பின்னடைவே. ஹர்திக் பாண்ட்யா முழுமையாக நான்கு ஓவர்களை வீசுவாராயின் ஒரு வேகப்பந்து வீச்சாளரை குறைத்துவிட்டு இந்திய அணி கூடுதலாக ஒரு ஸ்பின்னரை முயற்சிக்கலாம். அந்த ஸ்பின்னராக அஷ்வின் இருக்கலாம். கூடுதல் ஸ்பின்னர் இல்லை என்றாலும் வருண் சக்கரவர்த்திக்கு பதில் வேறு ஸ்பின்னரை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது. வருணுக்கு பதில் அஷ்வினையோ அல்லது ராகுல் சஹாரையோ கூட முயற்சிக்கலாம். எது எப்படியோ இந்திய அணியின் பௌலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியே ஆக வேண்டும்.

ஆஃப்கானிஸ்தான் சிறிய அணிதானே அதை எளிதாக வீழ்த்திவிடலாம் என்கிற எண்ணம் இந்தியாவிற்கு வந்துவிடவே கூடாது. அது கோலியாத்து தாவீது கதையாக மாறிவிடும். இந்த உலகக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் பயங்கரமாக ஆடி வருகிறது. ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டை வென்றுள்ளது. அதில் ஒரு போட்டியில் ஸ்காட்லாந்தை 60 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியுள்ளது. நமீபியாவை 98 ரன்களுக்குள் சுருட்டியுள்ளது. பந்துவீச்சுதான் அவர்களின் பலமே. ரஷீத்கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி என மூன்று ஸ்பின்னர்களை சமாளிப்பதுதான் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும்.

இந்திய அணி இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும். தோல்வியடைந்தால் இந்த தொடரைவிட்டு இந்திய அணி வெளியேறிவிடும். என்ன செய்யப்போகிறார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories