துபாயில் T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதனால் சமூக வலைதளங்களில் இந்திய வீரர்களை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வியடைந்தபோது இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமியை, அவரது மதத்தைக் குறிப்பிட்டு கடும் விமர்சனம் செய்தனர்.
இதையடுத்து முகமது ஷமிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் 9 மாத குழந்தைக்குக் கொலை மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல்துறையை டெல்லி மாநில மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் குழந்தைகளின் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசத்தையும் மேற்கொள்ள முடியாது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டெல்லி காவல்துறைக்கு அனுப்பியுள்ள நோட்டிஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.