விளையாட்டு

T20 உலகக்கோப்பை - ஓமனை வீழ்த்திய வங்கதேசம்.. பரபரப்பான கட்டத்தில் தகுதிச்சுற்று போட்டிகள் !

வங்கதேசம் மற்றும் ஓமனுக்கு இடையிலான இரண்டாவது போட்டியில் வங்கதேசம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

T20 உலகக்கோப்பை - ஓமனை வீழ்த்திய வங்கதேசம்.. பரபரப்பான கட்டத்தில் தகுதிச்சுற்று போட்டிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டி.20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், நேற்று க்ரூப் B பிரிவில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. ஸ்காட்லாந்து அணிக்கும் பப்புவா நியு கினியா அணிக்கும் நடைபெற்ற முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேசம் மற்றும் ஓமனுக்கு இடையிலான இரண்டாவது போட்டியில் வங்கதேசம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஸ்காட்லாந்து vs பப்புவா நியு கினியா போட்டியில் ஸ்காட்லாந்து அணியே முதலில் பேட் செய்திருந்தது. பவர்ப்ளேயின் முடிவில் அந்த அணி 37-2 என தடுமாறினாலும், அதன்பிறகு மேத்யூ க்ராஸ் மற்றும் ரிச்சி பெர்ரிங்டன் கூட்டணியால் மீள தொடங்கியது. இருவரும் முதலில் கொஞ்சம் பொறுமையாக நின்று 100 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி செட்டில் ஆகிவிட்டு அதன்பிறகு பவுண்டரிகளை குறி வைத்தனர். மேத்யூ க்ராஸ் 36 பந்துகளில் 45 ரன்களை அடித்து அவுட் ஆக, ரிச்சி பெர்ரிங்டன் தொடர்ந்து நின்று ஆடி அரைசதத்தை கடந்தார். நல்ல வேகத்தில் சென்றுகொண்டிருந்த ஸ்காட்லாந்தின் ரன்ரேட்டை பப்புவா டெத் ஓவர்களில் சிறப்பாக வீசி கட்டுப்படுத்தியது. பெர்ரிங்டனும் சாபர் பந்துவீச்சில் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 165 ரன்களை எடுத்தது.

166 ரன்கள் டார்கெட்டோடு களமிறங்கிய பப்புவா நியு கினியா அணியில் ஒரு வீரரை தவிர யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. நார்மன் வனா மட்டுமே 37 பந்துகளில் 47 ரன்களை அடித்தார். இதனால் பப்புவா நியு கினியா அணி 19.3 ஓவர்களில் 148 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஸ்காட்லாந்து அணி ஏற்கனவே முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 2 போட்டிகளில் ஆடி இரண்டிலுமே வென்றிருக்கிறது. இதன்மூலம் அந்த அணிக்கான அடுத்தச்சுற்று வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

இரண்டாவதாக வங்கதேசம் மற்றும் ஓமன் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. ஓமன் அணி முதல் போட்டியில் பப்புவா நியு கினியா அணியை வீழ்த்தியிருந்தது. ஆனால், வங்கதேசம் முதல் போட்டியில் ஸ்காட்லாந்திடம் தோற்றிருந்தது. இதனால் வங்கதேசம் இந்த போட்டியை வெல்லாவிடில் தொடரை விட்டே வெளியேறும் என்ற இக்கட்டான சூழலில் களமிறங்கியது. வங்கதேச அணியே முதலில் பேட் செய்தது.

ஓப்பனரான முகமது நைமும் ஷகிப்-அல்-ஹசனுமே பொறுப்போடு நின்று ஆடினர். மற்ற வீரர்கள் அனைவரும் சீக்கிரமே வெளியேறினர். தொடக்கமே சுமாராகத்தான் இருந்தது. பவர்ப்ளே 6 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. நைம் மற்றும் ஷகிப்-அல்-ஹசன் இருவரின் ஆட்டமும்தான் வங்கதேசத்தை காப்பாற்றியது. நைம் 50 பந்துகளில் 64 ரன்களை எடுத்திருந்தார். ஷகிப்-அல்-ஹசன் 29 பந்துகளில் 42 ரன்களை எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி ஆல் அவுட் ஆகியிருந்த போதும் இவர்கள் இருவரின் ஆட்டத்தால் 153 ரன்களை வங்கதேச அணி எட்டியிருந்தது.

ஓமனுக்கு 154 ரன்கள் டார்கெட். இந்த போட்டியை வென்றால் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிப்பெற்று விட முடியும் என்கிற உத்வேகத்துடன் களமிறங்கியது. வங்கதேசத்தை விட நன்றாகவே பேட்டிங்கை தொடங்கினர். பவர்ப்ளேயில் மட்டும் 47 ரன்களை எடுத்திருந்தனர். இன்னொரு பக்கம் வங்கதேச வீரர்கள் கடுமையாக சொதப்பினர். இரண்டாவது ஓவரில் முஷ்டபிஷுர் ரஹ்மான் ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும் பேட்ஸ்மேனின் காலில் பந்தை வீச முற்பட்டு 5 ஒயிடுகளோடு 11 பந்துகளை வீசியிருந்தார். மிக எளிதாக கைக்கு வந்த கேட்ச்சுகளை வங்கதேச வீரர்கள் ட்ராப் செய்திருந்தனர். ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டனர். ஓமன் அணியை கைப்பிடித்து சூப்பர் 12 சுற்றுக்கு வழியனுப்பி வைக்கும் அளவுக்கே வங்கதேசத்தின் பெர்ஃபார்மென்ஸ் இருந்தது. ஆனால், தொடக்க விக்கெட்டுகளை தட்டுத்தடுமாறி வீழ்த்திய பிறகு வங்கதேசம் ஆட்டத்திற்குள் வந்தது.

குறிப்பாக, ஓமன் அணியின் முக்கிய வீரரான ஜதீந்தர் சிங் 40 ரன்களில் ஷகிப்-அல்-ஹசன் பந்தில் வெளியேறிய பிறகு ஆட்டம் மொத்தமும் வங்கதேசத்தின் கைக்குள் வந்தது. ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேசம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முஷ்டபிஷுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளையும் ஷகிப்-அல்-ஹசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

வங்கதேசத்தின் இந்த வெற்றியின் மூலம் க்ரூப் B போட்டிகள் பரபரப்பாகியுள்ளது. நாளை வங்கதேசம் vs பப்புவா நியு கினியா, ஸ்காட்லாந்து vs ஓமன் அணிகள் மோதவிருக்கின்றனர். பப்புவா நியு கினியாவை தவிர மற்ற மூன்று அணிகளுக்கும் இது கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியாகும். எந்த இரண்டு அணிகள் வெற்றிவாகை சூடுகிறதோ அவர்கள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறலாம். ரன்ரேட்டுகள் அடிப்படையில் இந்த தகுதி வாய்ப்புகள் இன்னும் சுவாரஸ்யமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.

banner

Related Stories

Related Stories