நேற்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் வருண் சக்கரவர்த்தியிடம் தமிழில் பேசியது வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் 2021 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
நேற்று கொல்கத்தா - டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா 19.5 ஓவரில் 136 ரன்கள் எடுத்து வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குச் சென்றது.
இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர்கள் தினேஷ் கார்த்திக் - வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தமிழில் பேசிக்கொண்டது இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் பேசக்கூடியவர். கொல்கத்தா அணியில் இப்போது வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி ஆகிய தமிழக வீரர்கள் விளையாடுவதால் அவர்களுடன் தமிழிலேயே பேசுகிறார்.
நேற்றைய ஆட்டத்திலும், தினேஷ் கார்த்திக் வருண் சக்கரவர்த்தியிடம் தமிழிலேயே பேசினார். ஷ்ரேயாஸ் பேட்டிங் செய்தபோது பந்துவீச்சு ஆலோசனை கூறினார்.
15வது ஓவரின்போது, வருண் சக்ரவர்த்தியிடம் பேசிய தினேஷ் கார்த்திக், “நீ எப்படி போடுவேன்னு அவனுக்கு தெரியல.. நீ நல்லா போடுற.. அப்படியே போடு.. உள்ளே போடு” என்று கூறினார்.
மீண்டும் 17வது ஓவரின்போது வருணிடம் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக், “எந்தப் பக்கம் அடிக்கிறதுனே தெரியல அவனுக்கு, குச்சிலேயே போடு, இந்த மாதிரி பால் என்னனே தெரியாம போல்டாகிருக்கான்” எனப் பேசினார்.
அப்போது ஆங்கிலத்தில் வர்ணனை செய்துகொண்டிருந்த ஹர்ஷா போக்லே, “இந்த சேனல் ஆங்கில வர்ணனை சேனல்தான். ஆனால் மைதானத்தில் தமிழில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்” என கிண்டலாக குறிப்பிட்டார்.