விளையாட்டு

“சன்ரைசர்ஸை வீழ்த்தி மும்பை வெற்றி.. ஆனாலும் எந்த பயனும் இல்லை” : ப்ளே ஆஃப்ஸிற்கு தகுதிப்பெற்ற கொல்கத்தா!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான முக்கியமான போட்டியில் மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றிருக்கிறது.

“சன்ரைசர்ஸை வீழ்த்தி மும்பை வெற்றி.. ஆனாலும் எந்த பயனும் இல்லை” : ப்ளே ஆஃப்ஸிற்கு தகுதிப்பெற்ற கொல்கத்தா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான முக்கியமான போட்டி நேற்று நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால், இது அவர்கள் எதிர்பார்த்த வெற்றியில்லை.

சன்ரைசர்ஸுக்கு எதிரான இந்த போட்டியில் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெறும் என்ற சூழலே நிலவியது. எல்லாரும் எதிர்பார்த்ததை போலவே மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

குறைந்தபட்சம் 250 ரன்களை எடுத்தால்தான் வெற்றிப்பெற சிறு வாய்ப்பாவது கிடைக்கும் என்ற மனநிலையுடனேயே மும்பை அணி களமிறங்கியது. ரோஹித் சர்மாவும் இஷன் கிஷனும் ஓப்பனர்களாக களமிறங்கினர். ஒவ்வொரு பந்தையும் பவுண்டரியும் சிக்சருமாக அடிப்பதிலேயே கவனம் செலுத்தினார். குறிப்பாக, இஷன் கிஷன் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக்கினார்.

தொடர்ந்து பவுண்டரிக்களாக அடித்து நொறுக்கினார். கடந்த போட்டியில்தான் மெதுவாக ஃபார்முக்கு திரும்பியிருந்த இஷன் கிஷன் இந்த போட்டியில் சரவெடியாக அடித்து வெளுத்தது ஆச்சர்யத்தை கிளப்பியது. மொத்தமாக 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களை வெளுத்தடுத்தார். 32 பந்துகளில் 84 ரன்கள் அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 262.5. உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

இஷன் கிஷன் விட்டு சென்ற அதிரடியை சூர்யகுமார் யாதவ் தொடர்ந்தார். சூர்யகுமார் யாதவ் இந்த இரண்டாம் பாதி சீசனில் 6 போட்டிகளில் 62 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், நேற்று அட்டகாசமாக ஆடினார். 40 பந்துகளில் 82 ரன்களை அடித்திருந்தார்.

இவர்கள் இருவரும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருப்பதால், இவர்களின் ஃபார்ம் அவுட் அனைவரையும் வருத்தமுற செய்தது. ஒரு வழியாக கடைசியில் இருவரும் ஃபார்முக்கு வந்ததில் அனைத்து ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

இஷன் கிஷன் மற்றும் சூர்யகுமாரின் அதிரடியால் மும்பை அணி 235 ரன்களை சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணியை 64 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கினால் மும்பை அணிக்கு ப்ளே ஆஃப்ஸ் செல்லும் வாய்ப்பு இருந்தது. சன்ரைசர்ஸ் இந்த சீசனில் மோசமாக ஆடி வருவதால் மும்பை அணிக்கு கொஞ்சம் நம்பிக்கையிருந்தது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக சன்ரைசர்ஸ் அணி நேற்று கொஞ்சம் சிறப்பாகவே பேட்டிங் ஆடியது. பவர்ப்ளே முடிவிலேயே 70 ரன்களை அந்த அணி எடுத்துவிட்டது. அப்போதே மும்பை அணி ப்ளே ஆஃப்ஸுக்கு செல்ல முடியாது என்பது உறுதியாகிவிட்டது. ஜேசன் ராய் 34, அபிஷேக் சர்மா 33 என அதிரடியான தொடக்கம் கொடுத்திருந்தனர். இவர்களுக்கு பிறகு மனீஷ் பாண்டே நிலைத்து நின்று அரைசதத்தை அடித்தார். மனீஷ் பாண்டே 41 பந்துகளில் 69 ரன்களை எடுத்தார். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 193-8 என்ற ஸ்கோரை எட்டியது.

மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனாலும் அவர்கள் ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெற இந்த வெற்றி போதுமானதாக இல்லை. மும்பை அணி பெரிய வெற்றியை பெற தவறியதால் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப்ஸிற்கு தகுதிப்பெற்றிருக்கிறது.

banner

Related Stories

Related Stories