ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா, தனது பெற்றோரை விமானத்தில் அழைத்துச் சென்று கனவை நிஜமாக்கியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்தார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்தியாவிற்காக தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை ஒட்டுமொத்த இந்திய மக்களும் கொண்டாடி வருகின்றனர். இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள நீரஜ் சோப்ராவுக்கு அரசும், பல்வேறு அமைப்புகளும் பரிசுத்தொகைகளை அறிவித்துள்ளன.
நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்ற தினத்தை தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நீரஜ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவொன்றை இட்டுள்ளார். அந்தப் பதிவில், “எனது பெற்றோரை முதன்முறையாக விமானத்தில் அழைத்துச் செல்கிறேன். என்னுடைய ஒரு கனவு இன்று நனவானது” எனத் தெரிவித்துள்ளார்.
‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா தனது பெற்றோருடன் விமானத்தில் பயணிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.