ஐ.பி.எல் முடிந்த பிறகு அக்டோபர் மூன்றாம் வாரத்திலிருந்து டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக இருக்கிறது. இந்த உலகக்கோப்பையில் ஆடப்போகும் அணியை ஒவ்வொரு நாடும் வரிசையாக அறிவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய தேர்வாளர்கள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை இன்று அறிவிக்கவிருக்கின்றனர். எந்தெந்த வீரர்கள் உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
ஒரு அணி சார்பில் 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இந்திய அணியில் ஒவ்வொரு இடத்திற்குமே அதிக போட்டிகள் இருப்பதால் தேர்வாளர்களுக்கு 15 பேரை தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கூடுதல் சிரமமே உண்டாகியிருக்கிறது.
ரோஹித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், பிரித்திவி ஷா, இஷன் கிஷன் என கடந்த ஒன்றிரண்டு தொடர்களிலேயே 5 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஓப்பனிங் இறங்கியிருக்கின்றனர். இவர்களில் இரண்டு பேரை முதன்மை ஓப்பனர்களாக தேர்ந்தெடுத்து ஒருவரை பேக் அப் வீரராக வைக்க வேண்டியிருக்கும். 5 வீரர்களுமே ஃபார்மில் இருப்பது தேர்வாளர்களுக்கு தலைவலியை கொடுக்கும். கே.எல்.ராகுலும் இஷன் கிஷனும் மிடில் ஆர்டரிலும் ஆட முடியும் என்பதால் அவர்களை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாகவும் கருதலாம். ஆனால், ஏற்கனவே மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் வரிசைக்கட்டி நிற்பதால் ஓப்பனர்கள் தேர்வு என்பது கூடுதல் விவாதங்களுக்கு உட்படும்.
ஸ்பின்னர்களை பொறுத்தவரை கோலியின் செல்லப்பிள்ளையாக இருக்கும் சஹாலுக்கு ஒரு வாய்ப்பு நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகது. ஆனால், சஹாலை விட சமீபமாக ராகுல் சஹார் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால் ராகுல் சஹார் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. சஹால், சஹார் இருவருமே அணியில் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஐ.பி.எல் முடிந்த நான்கே நாட்களில் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்குவதால் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. அவருக்கு பதில் இன்னொரு தமிழக ஆஃப் அஷ்வின் தேர்ந்தெடுக்கப்படலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அவர் நீண்ட காலமாக இந்திய அணியில் லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டில் ஆடாமல் இருப்பதால் அதற்கான வாய்ப்பும் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது.
தமிழக வீரர் நடராஜன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஒரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் என்கிற ஒரே தகுதியே அவருக்கு அணியில் இடத்தை பெற்று கொடுத்துவிடும். அவருக்கு போட்டியாக இருக்கும் இளம் வீரரான சேத்தன் சர்காரியா திறமையானவராக இருந்தாலும் நடராஜன் அளவுக்கு அவர் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை. அதனால் நடராஜனின் ரூட் க்ளியர். இன்னொரு தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தியும் அணியில் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவருடைய புதிர்மிக்க சுழற்பந்து வீச்சு இந்திய அணிக்கு பலமாக இருக்கும் என்பதால் நிச்சயமாக அவரை பற்றி விவாதித்திருப்பார்கள்.
இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் பௌலிங் இரண்டிலும் கலக்கி வரும் ஷர்துல் தாகூரும் அணிக்குள் சர்ப்ரைஸாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யா பந்துவீச தடுமாறுகிறார் என்பதால் ஷர்துலின் தேர்வு அணிக்கு பலத்தை கொடுக்கும்.
புவனேஷ்வர்குமார், பும்ரா, ஷமி என வேகப்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம்பெறுவார்கள்.
இன்று மாலைக்குள் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் எதிர்பார்க்காத சில சர்ப்ரைஸ்கள் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.