பாராலிம்பிக்ஸில் பார்வையற்ற வீரர் வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டி இருப்பார். ஓடுதளத்தில் ஓடும்போது சரியான கோட்டில் ஓடுவதற்காக இருவரது கைகளையும் கயிற்றால் இணைத்திருப்பார்கள்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் பார்வையற்ற மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற அரையிறுதிக்கு முந்தைய சுற்றில் கேப்வெர்ட் நாட்டை சேர்ந்த கேலே நிட்ரியா என்ற 32 வயது வீராங்கனைக்கு மேனுவல் அண்டோனியோ என்பவர் வழிகாட்டியாக இருந்துள்ளார்.
கேலே நிட்ரியா, தனது வழிகாட்டியான மேனுவல் அண்டோனியோ துணையுடன் 4வது இடம் பிடித்தார். அரையிறுதிச் சுற்று வாய்ப்பை தவறவிட்ட கேலேவுக்கு, மைதானத்திலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அவரது வழிகாட்டி மேனுவல்.
ஓடுதளத்தில் கேலேவின் கைப்பிடித்து அழைத்துச் சென்ற மேனுவல், மண்டியிட்டு, “Will You Marry Me?" எனக் கேட்டு தனது காதலை கேலே நிட்ரியாவிடம் தெரிவித்தார்.
கேலே நிட்ரியா காதலை ஏற்றுக்கொண்டதும், மேனுவல் மோதிரம் அணிவித்ததால் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீருடன் கட்டி அணைத்தார் கேலே. இந்தக் காதல் காட்சியை கண்ட அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பாராலிம்பிக்ஸில் வழிகாட்டியாக வந்தவரே வீராங்கனைக்கு வாழ்க்கைத் துணைவராகியிருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.