30.08.2021 இந்த நாள் இந்தியாவின் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக பதிவாக போகிறது. ஆம், பாராலிம்பிக்ஸில் இந்தியா ஒரு மணி நேரத்தில் நான்கு பதக்கங்களை வென்றிருக்கிறது. குறிப்பாக, துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லேகாரா தங்கம் வென்றிருக்கிறார். உலக அரங்கில் இந்திய வீராங்கனை ஒருவர் தங்கம் வெல்ல வேண்டும் என்பது இந்தியாவின் நூற்றாண்டு ஏக்கம். அது இன்றைக்கு அவனி மூலம் நிறைவடைந்துள்ளது.
அவனி லேகாரா 19 வயதே ஆகும் இளம் வீராங்கனை. சிறுவயதில் நடந்த ஒரு கார் விபத்தில் முதுகெலும்பில் பலத்த அடிபட்டதால் இடுப்புக்கு கீழே செயல்பட முடியாமல் போனது. ஆனால், அவனி சோர்ந்து விடவில்லை. விளையாட்டில் ஆர்வமாக ஈடுபட தொடங்கினார். அபினவ் பிந்த்ராவின் சுயசரிதையை வாசித்த அவனி துப்பாக்கிச் சுடுதலில் பங்கேற்க விரும்பினார். குடும்பத்தினரின் முழு ஆதரவோடு பயிற்சிகளில் இறங்கினார். எந்த தடையும் இல்லாமல் அவனியின் தோட்டாக்கள் சீறி பாய்ந்தது. அவை அடைந்தது உலக அரங்கான பாராலிம்பிக்ஸ். டோக்கியோவில் இன்று காலை அவனி பங்கேற்ற போட்டி தொடங்கியது.
10 மீ ஏர் ரைபிள் பிரிவில் பல சீனியர் வீராங்கனைகளோடு அவனியும் போட்டி போட்டார். முதலில் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றது. முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெறலாம் என்ற நிலையில், அவனி 7 வது இடம்பிடித்தார். இறுதிப்போட்டி தொடங்கியது. அதில் இன்னும் சிறப்பாக ஆடியவர் உலக ரெக்கார்டை சமன் செய்து தங்கம் வென்றார். இந்திய வீராங்கனை ஒரு ஒலிம்பிக்-பாராலிம்பிக்ஸில் இதற்கு முன் தங்கமே வென்றதில்லை. அந்த ஏக்கத்தை அவனி போக்கி வரலாற்று வெற்றியை சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
அடுத்ததாக F 46 ஈட்டி எறிதல் போட்டிகள் நடந்தது. இதில் இந்திய வீரர்கள் மூன்று பேர் பங்கேற்றிருந்தனர். அதில், தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார் இருவரும் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றிருந்தனர். தேவேந்திர ஜஜாரியாவுக்கு வயது 40. சிறுவயதிலேயே ஒரு மின் விபத்தில் ஒரு கையை இழந்தவர். 2004 பாராலிம்பிக்ஸிலும் பங்கேற்றிருந்தார். அதில் உலக ரெக்கார்டோடு தங்கம் வென்றிருந்தார். அதன்பிறகு பாராலிம்பிக்ஸில் F46 ஈட்டி எறிதல் நீக்கப்பட்டது. மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து 2016 இல் கொண்டு வரப்பட்டது. அதிலும் ஒரு உலக ரெக்கார்டோடு தங்கம் வென்றிருந்தார்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் தங்கல் வெல்லும் முனைப்போடு களமிறங்கியவர் வெள்ளி வென்றிருக்கிறார். இதுவும் ஒரு வரலாற்று வெற்றிதான். ஹாட்ரிக் ஒலிம்பிக்ஸ் பங்களிப்போடு ஹாட்ரிக் பதக்கத்தை இதற்கு முன் யாரும் வென்றதில்லை. இதே போட்டியில் சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலம் வென்றிருந்தார். இவரும் 2016 பாராலிம்பிக்ஸிற்கு தகுதிப்பெற்றிருந்தார். ஆனால், ஒரு 52 விநாடிகள் தாமதமாக ரிப்போர்ட் செய்தார் என்பதற்காக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளானவர் அதிலிருந்து மீண்டு வந்து இப்போது டோக்கியோவில் சிறப்பாக செயல்பட்டு வெண்கலம் வென்றிருக்கிறார்.
F56 வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். இவர் ஹரியானாவை சேர்ந்தவர். ஹரியானாக்காரர் விளையாட்டில் ஆர்வமாக இருப்பதிலும் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்வதிலும் எந்த ஆச்சர்யமுமில்லை. டோக்கியோவின் இன்றைய விடியல் இந்தியாவுக்கானதாக அமைந்தது. ரியோ பாராலிம்பிக்ஸில் இந்தியா மொத்தமே நான்கு பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. ஆனால், டோக்கியோவில் ஒரு மணி நேரத்தில் நான்கு பதக்கங்கள். இத்தோடு ஒட்டுமொத்தமாக 7 பதக்கங்களை இந்தியா வென்றிருக்கிறது. இந்திய வரலாற்றில் இந்த ஒரு மணி நேரத்திற்கென ஒரு தனி கௌரவம் எப்போதும் உண்டு.