டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம், 4 X 400 மீட்டர் ரிலேவில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனையை படைத்தார் அமெரிக்கா வீராங்கனை அலிசன் ஃபெலிக்ஸ். இது இவர் கலந்து கொண்ட ஐந்தாவது ஒலிம்பிக் போட்டியாகும்.
இதற்கு முன்பு லிசன் ஃபெலிக்ஸ் 2004ம் ஆண்டு நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டத்தில் கலந்துக் கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றார்.
பின்னர், 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் 4x400 மீட்டர் ரிலேவில் தங்கமும், 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் வென்றார். அதேபோல் லண்டனில் 2012ம் ஆண்டு 200 மீட்டர், 4x100 மீட்டர் இரண்டு பிரிவிலும் தங்கம் வென்று அசத்தி உலக சாதனைப் படைத்தார் அலிசன் ஃபெலிக்ஸ்.
மீண்டும் 2016ல் ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் 400 மீட்டர் பிரிவில் வெள்ளியும், இரண்டு ரிலேக்களில் தங்கப் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக டோக்கியோவில் கலந்து கொண்டு, வெள்ளி மற்றும் தங்கப் பதக்கம் வென்று அலசன் ஃபெலிக்ஸ் அசத்தியுள்ளார்.
அதேபோல் ஐந்து ஒலிம்பிக் போட்டியில் 11 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதில் 7 தங்கம், 3 வெள்ளி 1 வெண்கலப் பதக்கங்கள் ஆகும். 35 வயதாகும் இவர் பெண் விளையாட்டு வீரர்களுக்கு முன்உதாரணமாக இருக்கிறார்.
இப்படி பல சாதனைகளைப் படைத்தாலும், ஆணாதிக்க சமூகம் எப்போதும் பெண்களை தங்களுக்குச் சற்று குறைந்தவர்களாகவே எண்ணும். அலசன் ஃபெலிக்ஸ் ரியோ ஒலிம்பிக் போட்டி முடிந்து 2018ம் ஆண்டு கர்ப்பமானார். அப்போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக இவரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
பின்னர் சிசேரியன் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பின்னர் இவருக்குக் குழந்தை பிறந்தது. அப்போது இவருக்கு ஸ்பான்சர் செய்து வந்த நைக் நிறுவனம் அலசன் ஃபெலிக்ஸ் சோர்வடைந்து இருந்ததால் அவரின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்தது. இதனால் மனமுடைந்த இவர் நைக்கின் ஸ்பான்ஸர் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து அலசன் ஃபெலிக்ஸ் தனக்குச் சொந்தமாக பிராண்ட் காலணியை உருவாக்கினார். இந்த காலணியை அணிந்துதான் டோக்கியோவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று தன்னை புறக்கணித்தவர்கள் முன்பு நான் எப்போதும் தங்க மகள் என்பதை தன் வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
இவரின் இந்த வெற்றியைத் தொடர்ந்து நைக் உள்ளிட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்கள் பெண் விளையாட்டு வீரர்களுக்கான ஒப்பந்தத்தை மாற்றி அமைத்துள்ளது. இப்படி தன் வெற்றியால் பெண் விளையாட்டு வீரர்களுக்கான சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இவர் வெறும் விளையாட்டுவீரர் மட்டுமல்ல. பெண்களின் உரிமைகளுக்காகத் தனது விளையாட்டுக் களத்தையே, போராட்டக் களமாக மாற்றி அதில் வென்று சாதித்து காட்டியவர்.