விளையாட்டு

போராடி தோற்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி.. பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பதக்கம் உறுதி!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியிருக்கிறது.

போராடி தோற்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி.. பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பதக்கம் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பிரிட்டன் அணியுடன் மோதியது. இதில் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியிருக்கிறது.

இந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இவ்வளவு தூரம் பயணிக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. கடந்த ரியோ ஒலிம்பிக்கில் கடைசி இடம்பெற்றிருந்தனர். அதேமாதிரியாகவே இந்த ஒலிம்பிக்கிலும் ஆடுவார்கள் என்றே நம்பப்பட்டது. அதற்கேற்றார் போலவே முதல் மூன்று போட்டிகளையும் வரிசையாக தோற்றிருந்தார்கள். ஆனால், இதன்பிறகுதாம் விஸ்வரூபமே எடுத்தார்கள்.

அயர்லாந்து மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கெதிரான போட்டிகளில் வரிசையாக அடுத்தடுத்து வென்றனர். இதன்மூலம் காலிறுதி வாய்ப்பு கிட்டியது. காலிறுதியில் பலமிக்க ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்து அதிர்ச்சியளித்தனர். அரையிறுதியில் அர்ஜெண்டினாவுடன் போராடி தோற்றிருந்தனர். பிரிட்டனுடனான இன்றைய போட்டியில் கூட கடைசி நொடி வரை போராடினார்.

இந்த போட்டியில் முதல் இரண்டு கோல்களை பிரிட்டன் அணியே அடித்திருந்தது. பின்னிலையில் இருந்த இந்திய அணி விடாப்பிடியாக போராடி தொடர்ந்து 3 கோல்களை அடித்து லீட் எடுத்து அசத்தியிருந்தது. இந்திய அணியின் பெனால்டி நம்பிக்கையான குர்ஜித் கவுர் இரண்டு பெனால்டி வாய்ப்புகளில் துல்லியமாக வலுவாக வலைக்குள் பந்தை அடித்து மிரட்டியிருந்தார். இதன்பிறகு, வந்தனா கட்டாரியா ஒரு ஃபீல்ட் கோலை அடித்தார்.

'தலித்துகள் அதிகமாக இருப்பாதாலயே இந்திய அணி தோற்கிறது' என கூச்சலிட்டு சில ஆதிக்க மூடர்கள் உத்திரப்பிரதேசத்தில் உள்ள வந்தனாவின் வீட்டு முன்பு வெடி வெடித்திருந்தனர். ஆனால், இன்று அந்த வந்தானா கட்டாரியாதான் முக்கியமான சமயத்தில் இந்தியாவிற்கு கோலை அடித்து கொடுத்தார். சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் வந்தனா ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய அணி வெல்ல வைத்திருந்தார். அந்த வெற்றியே இந்திய அணியை அரையிறுதி தகுதிப்பெற வைத்தது.தேசத்தின் மகளாக அவரை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கும் போது ஆதிக்கவாதிகள் மட்டும் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.

3-3 என ஆட்டம் சமநிலையிலேயே சென்று கொண்டிருந்தது. கடைசி பாதியில் பிரிட்டன் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 4-3 என பிரிட்டன் பக்கம் சென்றது. இதன்பிறகு, எவ்வளவு முயன்றும் இந்திய அணிக்கு ஒரு கோல் கூட கிடைக்கவில்லை.

இவ்வளவு தூரம் வந்துவிட்டு பதக்கம் வெல்லாமல் போனதால் இந்திய வீராங்கனைகள் கண்ணீர் சிந்தினர். ஆனால், அவர்கள் அப்படி வருத்தப்பட தேவையே இல்லை. தங்களால் இயன்றதை விட உயிரை கொடுத்து ஆடியிருக்கின்றனர். தங்களை ஒரு பொருட்டாக நினைக்காத அணியையெல்லாம் ஓட விட்டிருக்கிறார்கள். இதுவே மிகப்பெரிய பெருமைதான். இதே உத்வேகத்தோடு தொடர்ந்து ஆடினால் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் நிச்சயம்.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories