இந்திய ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதன் மூலம் ஹாக்கியில் சாதித்துள்ளது இந்தியா.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், “1983, 2007, 2011 உலகக்கோப்பை வெற்றிகளை மறப்போம். ஹாக்கியில் இந்த பதக்கம் எந்த ஒரு உலகக்கோப்பையை விடவும் பெரியது” என்று பதிவிட்டுள்ளார்.
கவுதம் கம்பீரின் இந்த கருத்து ரசிகர்களிடமும் நெட்டிசன்களிடமும் கடும் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது. சமீபகாலமாக கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீது எரிச்சலைக் காட்டி வருகிறார்.
2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தான் சிறப்பாக ஆடியதை பொருட்படுத்தாமல் அனைவரும் தோனியைக் கொண்டாடுவது குறித்து ஏற்கனவே பலமுறை புழுங்கியுள்ளார் கம்பீர்.
சமீபத்தில் தோனியின் பிறந்தநாளன்று, தான் 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடியபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் கம்பீர்.
இந்நிலையில், 2011 கிரிக்கெட் உலகக்கோப்பையை விட இந்திய ஹாக்கி அணியின் இன்றைய வெற்றி பெரிது எனப் பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சாதனைகளை கொண்டாடும்போது ஒன்றை ஏன் மட்டம் தட்ட வேண்டும் எனப் பலரும் கம்பீரை விமர்சித்துள்ளனர்.
கம்பீரின் பதிவுக்கு நெட்டிசன் ஒருவர், “2007, 2011 உலகக்கோப்பை ஆட்டங்களில் நீங்கள் ஒரு ஹீரோ. ஆனாலும் இப்படி சொல்கிறீர்களே ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொருவர், “இது அரசியல்வாதியின் ட்வீட் போல் உள்ளதே தவிர விளையாட்டு வீரரின் கருத்து போல் தெரியவில்லை. மற்ற சாதனைகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.