விளையாட்டின் போது ஒரு நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான, உணர்ச்சியான நிகழ்வுகள் எப்போதும் நடைபெறுவது வழக்கம். அப்படி ஒரு சம்பவம் டோக்கியோ ஒலிம்பிக்கில் நடைபெற்றுள்ளது. அப்படி இந்த நிகழ்வுதான் ஒலிம்பிக் ரசிகர்களின் பேசுபொருளாக மாறியுள்ளது.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கத்தார் நாட்டைச் சேர்ந்த முதாஸ் பார்ஷிம், இத்தாலியின் கியான்மார்க்கோ தம்பேரி, பெலாரஸ் வீரர் மாக்சிம் நெடாசேகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் முதாஸ் பார்ஷிம் மற்றும் கியான்மார்கோ இருவரும் 2.37 மீட்டர் உயரத்தைத் தாண்டினர். மற்றவர்கள் யாரும் இந்த உயரத்தைத் தாண்ட முடியவில்லை. மேலும் இவர்கள் இருவரும் சம புள்ளிகளை பெற்றிருந்தனர்.
இதனால் இவர்கள் இருவருக்கு மட்டும் சற்று உயரத்தை அதிகரித்து (2.39) வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இருந்தபோதும் இருவரும் மூன்று முறை முயற்சி செய்தும் தாண்டமுடியவில்லை. மேலும் இருவருமே மூன்று தவறுகளைச் செய்தனர்.
இதையடுத்து போட்டியின் நடுவர்கள் இவர்களுக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுப்பதாக முடிவு செய்து அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது கத்தார் வீரர் முகமது பார்ஷிம் நடுவர்களிடம், 'இரண்டு பேருக்கும் தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா' எனக் கேட்டார்.
இதற்கு நடுவர்கள் தங்கத்தைப் பகிர்ந்து அளிக்கச் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இரண்டு வீரர்களும் கட்டிப்பிடித்துக் கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து பார்ஷிம் கூறுகையில், "நான் அவரைப் பார்த்தேன், அவரும் என்னைப் பார்த்தார், இருவருக்குமே தெரிந்தது, ஆட்டம் முடிந்துவிட்டது. எதற்காக இன்னொரு ஜம்ப்? தேவையில்லை என்று முடிவெடுத்தோம்.
தடகளத்தில் மட்டுமல்ல வெளியேயும் நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் எப்போதும் விளையாடுவோம். இப்போது கனவு நனவாகியுள்ளது. இதுதான் உண்மையான ஸ்பிரிட், ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்.
இதனை நாங்கள் செய்தியாக ஒலிம்பிக்கில் வெளியிட்டுள்ளோம். தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டோம்" எனத் தெரிவித்துள்ளார். இது தான் உண்மையான Sportsmanship என நெட்டிசன்கள் இவர்கள் இருவரையும் பாராட்டி வருகிறார்கள்.