69 கிலோ எடைப்பிரிவான வெல்டர் வெயிட் பிரிவில் இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வாகியிருந்தார் லவ்லினா. முதல் சுற்றில் இவர் எதிர்த்து ஆட வேண்டிய வீராங்கனை ஒலிம்பிக்கிலிருந்து விலகியதால் நேரடியாக அடுத்த சுற்றுக்கு தகுதிப்பெறும் வகையில் பை (bye) வழங்கப்பட்டது.
காலிறுதிக்கு முந்தைய அந்த சுற்றில் ஜெர்மானிய வீராங்கனையான நதீம் அபெட்சை எதிர்கொண்டார் லவ்லினா. இந்த போட்டியில் மிகச்சிறப்பாக ஆடிய லவ்லினா நதீம் அபெட்சை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதி போட்டியை வென்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டாலே பதக்கம் உறுதி என்ற நிலையில், பலத்த எதிர்பார்ப்புடன் காலிறுதி போட்டி தொடங்கியது.
காலிறுதி போட்டியில் சீன தைபே வீராங்கனையான நியன் ஜின் ஜேனை எதிர்கொண்டார் லவ்லினா. எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையிலேயே மிகச்சிறப்பாக ஆடிய லவ்லினா ஜின் ஜேனை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்துவிட்டார். இதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா.
ஒரு சந்தேகம் உண்டாகலாம். அதாவது அரையிறுதியில் நான்கு பேர் ஆடுவார்களே, ஆனால் பதக்கம் மூன்றுதானே உண்டு? எப்படியும் ஒருவருக்கு பதக்கம் இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறதே. அந்த ஒருவராக லவ்லினா இருக்கலாம் என தோன்றலாம். சரியான சந்தேகமே அது. ஆனால், பாக்ஸிங்கை பொறுத்தவரையில் அரையிறுதியில் ஆடும் நான்கு பேருக்குமே பதக்கம் உண்டு. ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் வழங்கப்படும். அதனாலயே லவ்லினா பதக்கத்தை உறுதி செய்துவிட்டார் என கூறப்படுகிறது.
லவ்லினா அசாமில் கோலகட் எனும் பின் தங்கிய கிராமத்தை சேர்ந்தவர். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர். சிறுவயதிலிருந்தே பல விளையாட்டுகளிலும் ஆர்வமாக இருந்திருக்கிறார். மைக் டைசனின் ரசிகையான இவரது அம்மா பாக்ஸிங் பற்றிய கதைகளை சொல்லும் போது, ஒருமுறை முகமது அலி பற்றி கூறியிருக்கிறார். அப்போதிருந்தே முகமது அலி மீதும் பாக்ஸிங் மீதும் லவ்லினாவுக்கு அதிக ஈர்ப்பு உண்டானது. அப்போதிருந்தே பாக்ஸிங்கில் மிகத்தீவிரமாக பயிற்சியில் இறங்கினார். இந்திய விளையாட்டு ஆணையம் இவரது திறமையை சரியான நேரத்தில் கண்டுபிடித்து உயர்தர பயிற்சிகளை வழங்கியது. தொடர்ந்து பாக்ஸிங்கில் கலக்கியவர் இப்போது டோக்கியொவிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார்.
அசாம் மாநிலத்திலிருந்து ஒலிம்பிக்கிற்கு சென்றிருக்கும் முதல் பெண் என்பதால் அந்த மாநிலமே அவரை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மாவும் எதிர்க்கட்சியான காங்கிரஸுமே பகையெல்லாம் மறந்து ஒன்றாக இணைந்து "Go for Glory Lovlina' என சைக்கிள் பேரணியை நடத்தி ஆச்சர்யப்படுத்தியிருந்தது.
சமீபமாக வடகிழக்கு மாநில மக்கள் சந்தித்து வரும் இன்னல்களுக்கு அளவே இல்லை. பிரிவினைவாத சட்டங்களால் அவர்களின் குடியுரிமையே கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மற்ற மாநில மக்கள் ஒரு இனவெறி சார்ந்த கேலியான தொனியோடு வடகிழக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மீராபாய், லவ்லினா என ஒலிம்பிக்கில் உலகளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியிருப்பவர்கள் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கான அங்கீகாரத்தையும் மரியாதையையும் இனியாவது முறையாக வழங்க உறுதி செய்ய வேண்டும்.