டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளான இன்றே இந்திய வீரர்/வீராங்கனைகளுக்கு சிலருக்கு போட்டிகள் தொடங்கிவிட்டது. குறிப்பாக, வில்வித்தை போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு பிரிவிக்குமே ரேங்கிங் சுற்று நடந்து முடிந்திருக்கிறது. பங்குபெறும் அத்தனை போட்டியாளர்களும் 72 அம்புகளை எய்ய வேண்டும். இதில் வீரர்கள் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் அவர்கள் தரவரிசைப் படுத்தப்படுவார்கள். இந்த தரவரிசையின் அடிப்படையில் அடுத்த சுற்றில் அவர்கள் எதிர்த்து ஆடவேண்டிய வீரர்கள் முடிவு செய்யப்படும்.
முதலில் பெண்களுக்கான ரேங்கிங் சுற்று நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் தீபிகா குமாரி பங்கேற்றிருந்தார். இவர் ஏற்கனவே லண்டன் மற்றும் ரியோ ஒலிம்பிக்ஸ்களில் ஆடியவர். மேலும், சமீபத்தில் உலகக்கோப்பை போட்டியில் மூன்று தங்கங்களை வென்றிருந்தார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இவர் மீது பெரிய நம்பிக்கை உருவாகியிருக்கிறது.
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வில்லேந்திய இவர் 663 புள்ளிகள் பெற்று 9வது இடம்பிடித்தார். முதல் பாதி முடிந்திருந்த போது நான்காவது இடத்தில் இருந்தவர் இரண்டாம் பாதியில் கொஞ்சம் சறுக்கினார். தீபிகாவின் தரவரிசைப்படி அவர் பூடானின் கர்மாவை எதிர்க்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்கள் பிரிவுக்கான ரேங்கிங் சுற்றில் அடானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகிய மூவர் பங்கேற்றிருந்தனர். அடானு தாஸின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது. மற்றவர்களும் சிறப்பாக செய்யக்கூடியவர்களாகவே இருந்தனர். ஆனால், இன்றைக்கு இந்த மூவருமே எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் ஏமாற்றியிருந்தனர்.
பிரவீன் ஜாதவ் 31 வது இடத்தையும் அடானு தாஸ் 35 வது இடத்தையும் தருண்தீப் ராய் 37 வது இடத்தையும் பிடித்தனர். தரவரிசை சுற்று என்பதால் இதில் பெரிய பிரச்சனையில்லை. ஆனால், அடுத்தடுத்த வெளியேற்றுதல் சுற்றிலும் இப்படியே ஆடினால் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
இப்போதைய நிலவரப்படி தீபிகா குமாரி பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். 27ஆம் தேதி முதல் அவருக்கு அடுத்தடுத்த வெளியேற்றுதல் சுற்றுகள் நடைபெற இருக்கின்றன. அதிலும் வென்று போடியத்தில் ஏறும் தீர்க்கத்தோடு இருக்கிறார் தீபிகா குமாரி.
-உ.ஸ்ரீ