அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை டி20 போட்டி அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான அணிகளின் பிரிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. பிரிவு 1ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், சவுத் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும், பிரிவு 2 ல் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நியுசிலாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
உலகக்கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கிளப்பியுள்ளது. சாதாரண இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்கள் வெறித்தனமாக இருப்பார்கள். உலகக்கோப்பை போட்டியென்றால் சொல்லவே வேண்டாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஆவலும் உச்சத்திலேயே இருக்கும்.
இப்போதே இணையங்களில் கோலி ரசிகர்களும் பாபர் அசாம் ரசிகர்களும் குடுமிப்பிடி சண்டையை தொடங்கிவிட்டனர். உலகக்கோப்பை மாதிரியான ஐ.சி.சி யின் பெரிய தொடர்களை பொறுத்தமட்டில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் இந்தியாவின் கையே ஓங்கியிருக்கிறது.
சொல்லிக்கொள்ளும்படி 2017 சாம்பியன்ஸ் ட்ராஃபியை மட்டுமே இந்தியாவை தோற்கடித்து வென்றிருந்தது பாகிஸ்தான் அணி. மற்றபடி எல்லா தொடர்களிலும் இந்தியாவின் கையே ஓங்கியிருக்கிறதி. 2007 டி20 உலகக்கோப்பையையே இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியே வென்றிருந்தது. கடைசியாக 2019 உலகக்கோப்பையிலும் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியிருந்தது.
இதனால் வரவிருக்கும் உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணியே வெல்லும் என பெரும் நம்பிக்கையில் இருக்கின்றனர் இந்திய ரசிகர்கள். இரண்டு பிரிவையும் ஒப்பிட்டு பார்த்தால் இந்தியா இடம்பெற்றிருக்கும் இரண்டாம் பிரிவு கொஞ்சம் எளிமையானதாகவே இருக்கிறது. பிரிவு 1 ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், சவுத் ஆப்பிரிக்கா என பெரிய அணிகளாக இருப்பதால் கடும் போட்டி நிலவும்.
இரண்டு பிரிவுகளிலுமே இன்னும் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று வரும் இரண்டு அணிகள் இணையும் என்பதால் இந்திய அணி எளிமையாக அரையிறுதி வரை முன்னேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுடன் நியுசிலாந்தும் ஒரே பிரிவில் இருப்பதை கவனிக்க வேண்டும். கடைசியாக 2019 உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்றவற்றில் இந்திய அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்திருந்தது நியுசிலாந்து. இந்த முறை ஒரே பிரிவில் இரண்டு அணிகளும் இருப்பதால் இந்திய அணி நியுசிலாந்தை பழி தீர்க்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
ஒரு விறுவிறுப்பான பரபரப்பான உலகக்கோப்பை தொடர் காத்திருக்கிறது என்பதை இந்த அணிகளின் பிரிவு அறிவிப்பு மேலும் ஒரு முறை உறுதி செய்துள்ளது.
-உ.ஸ்ரீ