டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து 11 பேர் தேர்வாகியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதியும் தேர்வாகியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் இருந்து பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் திறமையான வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கிற்கு தேர்வாகி வருகின்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தடகளம், வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப் படகு போட்டிகளில் தமிழ்நாட்டில் இருந்து இதுவரை 11 வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் பிறந்து வெவ்வேறு மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்த 3 வீரர் - வீராங்கனைகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
தடகள பிரிவில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீராங்கனைகள், 2 வீரர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். அந்த வகையில், மதுரையை சேர்ந்த ரேவதி வீரமணி, தற்போது ஒலிம்பிக்கில் 4 * 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ளத் தேர்வாகியுள்ளார்.
மேலும், திருச்சி தனலெட்சுமி, சுதா வெங்கடேசன் ஆகியோரும் 4 * 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்கின்றனர். 4 * 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆடவர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
மதுரையைச் சேர்ந்த 22 வயதான ரேவதி, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். 'ஷூ' கூட இல்லாமல் வெறும் காலில் பயிற்சி பெற்ற ரேவதி, விளையாட்டு வீரர்களின் உச்ச கனவான ஒலிம்பிக்கில் தடம் பதிக்க உள்ளார்.
தமிழ்நாடு தடகள சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு தடகள சங்கத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக 5 தடகள வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பங்குபெற தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இத்தனை வீரர்கள் தேர்வாகவில்லை. இது நமது தமிழ்நாட்டுக்கும், தடகள சங்கத்திற்கும் மிகவும் பெருமை அளிக்கக்கூடிய நிகழ்வு.
மேலும் இந்த சமயத்தில் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒலிம்பிக்கில் பங்குபெறுபவர்களுக்கு ரூ. 5 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவித்ததற்கும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றிற்கு முறையே ரூ. 3 , 2 மற்றும் 1 கோடி என்று பரிசுத் தொகையை உயர்த்தி அறிவித்ததற்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளனர்.