இங்கிலாந்து அணிக்காக மிக நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடி வருபவர் ஆண்டர்சன். வேகப்பந்து வீச்சாளரான இவர் 18 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் பிரதான பந்துவீச்சாளராக இருக்கிறார்.
உலகளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டை எடுத்திருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன்தான். இப்போது வரை 617 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இதுவே மிகப்பெரிய அசாத்திய சாதனை. இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு அசாத்தியத்தை நிகழ்த்தியிருக்கிறார். முதல்தர போட்டிகளில் தனது 1000 ஆவது விக்கெட்டை நேற்று வீழ்த்தியிருக்கிறார். சமகாலத்தில் யாருமே செய்திடாத மகத்தான சாதனை இது.
கிரிக்கெட்டை பொருத்தவரைக்கும் பேட்ஸ்மேன்களை போன்று பௌலர்கள் நீண்ட காலம் ஆட முடியாது. அதிலும் குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர்களின் ஆயுள் மிகக்குறைவே. காரணம், காயங்கள். அதிகப்படியான உடலுழைப்பு வேகப்பந்து வீச தேவைப்படும் என்பதால் எளிதில் காயமடைந்து விடுவார்கள். காயத்திலிருந்து மீண்டு வந்து பழைய ஃபார்மை தொடர்வது கடினம். அதனாலயே வேகப்பந்து வீச்சாளர்கள் மிகக் குறுகிய கரியரை கொண்டிருக்கின்றனர். ஆனால், ஆண்டர்சன் இதற்கு விதிவிலக்கு. இங்கிலாந்து அணிக்காக மட்டும் 18 ஆண்டுகள் வேகப்பந்து வீசியிருக்கிறார்.
இப்போது அவருக்கு வயது 39. இன்னமும் இங்கிலாந்து அணியின் பிரதான பௌலராக சிறப்பாக வீசி வருகிறார். ஆண்டர்சனுக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதிலிருந்து மீண்டு வந்து அசத்தியிருக்கிறார். தன்னுடைய கரியர் குறித்த ஆண்டர்சனின் தெளிவான திட்டமிடலே இதற்கு காரணம். டி20 யுகத்தில் எல்லா வீரர்கள் கோடிகளில் குளிக்க ஆண்டர்சன் மட்டும் டி20 பக்கம் திரும்பவே இல்லை.
ஐ.பி.எல் ப்ரீமியர் லீக் போட்டிகளில் பல கோடிகளுக்கு ஏலம் போக வாய்ப்பிருந்தும் அதையெல்லாம் தவிர்த்தார். 2015 உலகக்கோப்பையோடு லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் முழுமையாக ஓய்வு பெற்றார். இதனால் தன்னுடைய கவனம் மொத்தத்தையும் டெஸ்ட் கிரிக்கெட் மீதே அவரால் குவிக்க முடிந்தது. மேலும், அதிகப்படியான வேலைப்பளு இல்லாததால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஃபிட்டாக வந்து சேர்ந்துவிடுவார்.
தன்னுடைய வேகத்தையும் வயதுக்கேற்ப கொஞ்சம் குறைத்து ஸ்விங்கிலும் கட்டரிலும் முழுக்கவனம் செலுத்தினார். இதெல்லாம்தான் 1000 விக்கெட் எனும் இமாலய இலக்கை அவரை அடைய வைத்திருக்கிறது. லேங்சைர் அணிக்காக ஆடும் அவர் கெண்ட் அணிக்கு எதிராக இந்த மைல்கல்லை எட்டினார்.
கடந்த நூறாண்டுகளில் ஒரு சில வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இந்த சாதனையை செய்திருக்கின்றனர். அதிலும் 2000க்கு பிறகு கிரிக்கெட் ஆட ஆரம்பித்ததில் ஆண்டர்சன் மட்டுமே இதை செய்திருக்கிறார். எல்லாமே டி20 யுகமாக மாறிவிட்டதால் இனிமேல் இன்னொரு வீரர் இந்த சாதனையை செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே.
39 வயதாகும் ஆண்டர்சன் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஆஷஸோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நான் ஃபிட்டாக இருந்தால் தொடர்ந்து ஆடுவேன் என்றே ஆண்டர்சன் கூறியுள்ளார். இன்னும் எத்தனை சாதனைகள் படைக்கப் போகிறாரோ!..
-உ.ஸ்ரீ