விளையாட்டு

திணறி மீண்ட நியூசி; தாக்கம் ஏற்படுத்திய ரோஹித் விக்கெட் - முதல் நாள் ஆட்டம் எப்படியிருந்தது? #WTCFinals

நல்ல தொடக்கத்துக்கு பிறகு சொதப்பலாக ரோஹித்தும் கில்லும் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இந்திய அணியின் கை ஓங்கியிருக்கும்

திணறி மீண்ட நியூசி; தாக்கம் ஏற்படுத்திய ரோஹித் விக்கெட் - முதல் நாள் ஆட்டம் எப்படியிருந்தது? #WTCFinals
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

நேற்று முன் தினம் தொடங்க வேண்டிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி மழை காரணமாக தடைபட்டு நேற்றுதான் தொடங்கியது.

பெரிய அளவில் மழை இல்லாமல் போட்டி நடைபெறுவதற்கான சூழலே இருந்தது. நேற்று முழுவதும் மழை பெய்து மைதானம் கொஞ்சம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸை வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் இருந்தது. 'டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்து இந்த ஓவர்காஸ்ட் கண்டிஷனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என கவாஸ்கரும் ப்ரீ மேட்ச் ஷோவில் பேசியிருந்தார். இதனால் டாஸின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு உண்டானது.

டாஸை நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனே வென்றார். அனைவரின் எதிர்பார்ப்புக்கேற்ப பௌலிங் செய்யப் போவதாகவே அறிவித்தார். டாஸில் தோற்றதால் கோலி கொஞ்சம் அப்செட்டாகவே இருந்தார். 'டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்துதான் வீசியிருப்போம்' என கூறியிருந்தார். நியுசிலாந்தின் அணித் தேர்வும் மிரட்டலாக இருந்தது. சவுதி, போல்ட், ஜேமிசன், வேக்னர் + க்ராண்ட்ஹோம் என முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே வில்லியம்சன் ப்ளேயிங் லெவனில் எடுத்திருந்தார். நேற்று பெய்த மழை அஜாஸ் படேலின் தேர்வை நிராகரிக்க செய்திருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு 20 மணி நேரம் முன்பாகவே இரண்டு ஸ்பின்னர்களோடு அணியை அறிவித்து வைத்திருந்தது இந்தியா. டாஸுக்கு முன்பாக இதில் மாற்றம் செய்யப்படலாம் என கணிப்புகள் வெளியானது. ஆனால், 'எங்கள் வீரர்கள் திறமையானவர்கள் அவர்கள் எங்கே வேண்டுமானாலும் சிறப்பாக ஆடுவார்கள்' அணித்தேர்வுக்கு பிட்ச்சை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவே இல்லை என கோலியும் ரவிசாஸ்திரியும் உறுதியாக கூறியிருந்தனர்.

திணறி மீண்ட நியூசி; தாக்கம் ஏற்படுத்திய ரோஹித் விக்கெட் - முதல் நாள் ஆட்டம் எப்படியிருந்தது? #WTCFinals

டாஸ் வெற்றி...5 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு என ஆரம்பமே நியுசிலாந்துக்கு சாதகமாக இருப்பது போல தோன்றியது. ஆனால், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்த எண்ணம் மாறியது. ஓப்பனர்களான ரோஹித் மற்றும் சுப்மன் கில் மீது பெரிய நம்பிக்கையெல்லாம் யாருக்கும் இருந்திருக்கவில்லை. காரணம், இருவரும் டெஸ்ட்டை பொறுத்தவரை அவ்வளவு பெரிய வீரர்கள் இல்லை. போல்ட் மற்றும் சவுத்தியின் முதல் ஸ்பெல்லுக்கு இருவரும் தப்பித்தாலே போதும் என்கிற நிலைதான் இருந்தது. ஆனால், இருவரும் யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக ஆடினர்.

போல்ட் மற்றும் சவுத்தியின் திட்டமிடலே இல்லாத துல்லியமற்ற தாக்குதலும் இதற்கு காரணமாக அமைந்தது. சவுத்தியெல்லாம் எதோ டி20 யில் வீசுவதை போல ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு லைன் & லெந்த்தில் வீசி கடுப்பேற்றி கொண்டிருந்தார். சவுத்தி அளவுக்கு சொதப்பவில்லையென்றாலும் போல்ட்டும் சுமாராகவே வீசியிருந்தார். இருவரும் ஒரு சீரான லைன் & லெந்த்தை பிடிக்கவே இல்லை. இருவரும் ஒருவரை ஒருவரை காம்ப்ளீமெண்ட்டும் செய்து கொள்ளவில்லை. இதெல்லாம் இந்திய ஓப்பனர்களுக்கு சாதகமாக அமைந்தது.

ரோஹித் மற்றும் கில் இருவருமே ஏதுவான பந்துகளை ஷாட் ஆடுவதில் உறுதியாக இருந்தனர். குறிப்பாக, ஷாட் பால்களையும் ஃபுல் லெந்த்களையும் விடாமல் பவுண்டரியாக்கினர். ரோஹித்தை இன்னொரு எண்ட்டில் வைத்துக் கொண்டு அட்டகாசமாக புல் ஷாட் ஆடி காண்பித்தார் கில். சகட்டுமேனிக்கு பந்துகளை லீவ் செய்யாமல் பாசிட்டிவ் இண்டண்ட்டோடு ஆடியதால் ரன்னும் கூடியது. குறிப்பாக, சுப்மன் கில் ஸ்ட்ரைட் பேட்டில் மிட் ஆன் மிட் ஆஃபில் தொடர்ந்து நன்றாக ஆடினார். இப்படி ஆடும்போதி எட்ஜ் ஆவதற்கான வாய்ப்பு குறையும். ரன்கள் சேர்வதால் பேட்ஸ்மேனின் நம்பிக்கையும் கூடும். இதைத்தான் இன்று சுப்மன் கில் செய்து கொண்டிருந்தார். ரோஹித் இன்னொரு பக்கம் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசப்பட்ட ஃபுல் லெந்த் டெலிவரிக்களுக்கி தைரியமாக பேட்டை விட்டு கவர் ட்ரைவ்களையும் ஆடினார்.

டிம் சவுதி சொதப்பியதால் சீக்கிரமே ஜேமிசனையும் க்ராண்ட்ஹோமையும் அழைத்து வந்தார் வில்லியம்சன். இவர்களையும் ரோஹித் கில் கூட்டணி சிறப்பாக எதிர்கொண்டது. ஜேமிசனின் ஸ்விங்கை சமாளிக்க கில் இறங்கி வந்து ஆடிக்கொண்டிருந்தார். ஒரு தடவை ஹெல்மெட்டில் வாங்கியிருந்தாலும் இது ஒர்க் அவுட் ஆனது.

ஒரு கட்டத்தில் ஓடிஐ போல ரோஹித் செட்டில் ஆகி கியரை மாற்ற தயாரானார். பவுண்டரிக்களுடன் வேகமாக ரன்களையும் சேர்த்தார். இந்த சமயத்தில் வில்லியம்சன் ஒரு ஸ்லிப்பை குறைத்து டீப் கவரில் ஃபீல்டை வைத்து டிஃபன்ஸிவ்வாக யோசிக்க ஆரம்பித்தார். இது போட்டியில் இந்தியாவின் கை ஓங்குவதற்கான சமிக்ஞையாக தெரிந்தது. ஆனால், ஜேமிசன் வீசிய அடுத்த ஓவரிலேயே ரோஹித் அவுட் ஆகி ஏமாற்றினார்.

திணறி மீண்ட நியூசி; தாக்கம் ஏற்படுத்திய ரோஹித் விக்கெட் - முதல் நாள் ஆட்டம் எப்படியிருந்தது? #WTCFinals

சரியான ஃபுட் ஒர்க் இல்லாமல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை டிஃபன்ஸ் ஆட முயன்று எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். 68 பந்துகளை சந்திருந்த ரோஹித் 34 ரன்களில் வெளியேறினார். இதுதான் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. விக்கெட் எடுக்கும் முனைப்பிலிருந்து ரன்னை கட்டுப்படுத்தும் டிஃபன்ஸிவ்வான மனநிலைக்கு சென்ற நியுசிலாந்து மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தது. வில்லியம்சன் மீண்டும் 3 ஸ்லிப்களை கொண்டு வந்தார். முக்கிய ஆயுதமான நீல் வேக்னரை இறக்கினார்.

நீல் வேக்னர் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார் கில். இவ்வளவு நேரம் ஸ்ட்ரைட் பேட்டில் அழகாக டிஃப்ன்ஸும் ஷாட்டும் ஆடிக்கொண்டிருந்த கில் இந்த முறை வேக்னர் ஓவர் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் க்ரியேட் செய்து வெளியே வீசிய பந்தை அக்ராஸாக ஆட முயன்று எட்ஜ் ஆனார். இதன்மூலம் 28 ரன்களிலேயே கில் வெளியேறினார்.

ரோஹித், கில் இருவரின் விக்கெட்டுமே ஏறக்குறைய அவர்களாகவே விட்டுக்கொடுத்து சென்றதை போல்தான் இருந்தது. ஆனால், போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு ரோஹித் மற்றும் கில் பற்றி இருந்த அவநம்பிக்கையை ஓரளவுக்கு போக்கும் வகையிலேயே இருவரும் ஆடிவிட்டு சென்றனர்.

இதன்பின் கேப்டன் கோலியும் புஜாராவும் கூட்டணி போட்டனர். வேக்னர் சூட்டோடு சூடாக ட்ரைவ் ஆடும் லெந்த்தில் வீசி கோலியை எட்ஜ் ஆக்கிவிடலாம் என்று வீச கோலியோ அதை வெறித்தனமாக கவர் ட்ரைவ் அடித்து மிரட்டினார். சாதாரண சூழல் என்றால் இந்த பந்தை கோலி தொட்டிருக்கவே மாட்டார். ஆனால், இரண்டு விக்கெட் விழுந்திருக்கும் நேரத்தில் எதிரணியை மேலும் ஏறியடிக்கவிட்டால் செட் ஆகாது. கவுண்டர் அட்டாக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதை மனதில் வைத்தே இந்த ஷாட்டை ஆடினார். இப்படியாக இரண்டு விக்கெட் இழப்போடு 69 ரன்கள் என்றிருந்த நிலையில் முதல் செஷன் முடிவுக்கு வந்தது.

டியுக் பால் கொஞ்சம் தாமதமாகவே ஸ்விங் ஆக தொடங்கும் என்பதால் சவுதி போல்ட் போன்றோர் இரண்டாவது செஷனின் தொடக்கத்திலேயே எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால், வில்லியம்சன் கொஞ்சம் வித்தியாசமாக வேக்னர் மற்றும் க்ராண்ட்ஹோம் இருவரையும் வைத்து அட்டாக்கை தொடங்கினார். இது ஒரு சிலரால் விமர்சிக்கப்பட்டது. ஆனால், வில்லியம்சனின் இந்த மூவ்க்கு ஒரு வேலிடான காரணம் இருப்பது போன்றே தோன்றியது.

புஜாரா 20+ பந்துகளை சந்தித்து ரன் கணக்கக் தொடங்காமலேயே இருந்தார். கோலி அப்போதுதான் க்ரீஸுக்கு வந்து இன்னும் முழுதாக செட் ஆகவில்லை. இந்நிலையில் இரண்டு முக்கிய பௌலர்களை வைத்து அட்டாக் செய்தால் இருவரும் சுதாரித்துக் கொண்டு ஒன்றுமே செய்யாமல் சும்மா நின்றே நேரத்தை ஓட்டிவிடுவார்கள். அப்படி நின்று செட்டிலாகிவிட்டால் அவர்களை அவுட் ஆக்குவது பெரிய சிரமமாகிவிடும். அதனால் அவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். அதற்கு அவர்களுக்கு ஷாட் ஆட ஆசையை தூண்டி ரிஸ்க் எடுக்க வைக்க வேண்டும். அதற்காகவே வேக்னரோடு க்ராண்ட்ஹோம் எனும் ஐந்தாவது பௌலரை வீச வைத்தார் வில்லியம்சன். வேக்னர் டைட்டாக வீச வேண்டும். அழுத்தம் ஏறி க்ராண்ட்ஹோமை ரன் வாய்ப்பாக பார்த்து அட்டாக் செய்ய முயன்று கோலி-புஜாரா வீழ வேண்டும். இதுதான் ப்ளான்.

ஆனால், வில்லியம்சன் விரித்த இந்த வலையில் இருவரும் விழவில்லை. பந்து வீசுவது யாராக இருந்தாலும் கொஞ்ச நேரம் பொறுமையாக இருப்பதே அணிக்கு நல்லது என்கிற புரிதல் இருவருக்கும் இருந்தது.

திணறி மீண்ட நியூசி; தாக்கம் ஏற்படுத்திய ரோஹித் விக்கெட் - முதல் நாள் ஆட்டம் எப்படியிருந்தது? #WTCFinals

இந்த வலையிலிருந்து தப்பித்த புஜாரா நீண்ட நேரம் நிற்காமல் சீக்கிரமே அவுட் ஆனது ஏமாற்றமாக அமைந்தது. வழக்கமாக அவர் திணறும் மிடில் & லெக் லைனில் வீசப்பட்ட ஒரு இன்ஸ்விங்கரில் lbw ஆகி வெளியேறினார். இதுவுமே ஒரு செட்டப்பின் மூலம் கிடைத்த விக்கெட்தான். இரண்டாவது செஷனில் 5-6 ஓவர்களை வீசியிருந்த வேக்னர் பெரும்பாலான பந்துகளை ஒரு இடக்கை பௌலருக்கு கிடைக்கும் நேச்சுரல் ஆங்கிளில் பிட்சாகி வெளியேதான் எடுத்திருந்தார். இன்ஸ்விங்கெல்லாம் செய்யவே இல்லை. இந்நிலையில்தான் திடீரென வேக்னரை கட் செய்துவிட்டு இன்னொரு இடக்கை பௌலரான போல்ட்டை அழைத்து வந்தார் வில்லியம்சன். இவர் பந்தை எடுத்தவுடனே இன்ஸ்விங் செய்ய தடுமாறிப்போன புஜாரா ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பிறகு, கேப்டன் கோலியிடன் ரஹானே கூட்டணி சேர்ந்தார். ரஹானே நல்ல டச்சில் இல்லாவிடிலும் எதோ விக்கெட் விடாமல் கொஞ்சம் சமாளித்தார். கோலி இன்னொரு எண்ட்டில் க்ளாஸான சில ஷாட்களை ஆடினார். இடையில் ஒன்றிரண்டு அப்பீல்களிலும் தப்பித்தார். இன்றைய நாள் தொடக்கத்தில் அப்பாவியாக இருந்த சவுத்தி கடைசியில் வெறித்தனமாக ஸ்விங் செய்தார். ஸ்விங்குக்கான மாஸ்டர் க்ளாஸ் போல இவரின் ஸ்பெல் அமைந்தது. சீமை கொஞ்சம் மாற்றி பிடிப்பதன் இன்ஸ்விங்கிலேயே சில வேரியேஷன்களை வீசியிருந்தார். அதிர்ஷ்டவசமாக சவுத்தியின் அட்டகாசமான ஸ்விங்குக்கு கோலி, ரஹானே கூட்டணி இரையாகமல் தப்பித்தது.

கருமேகங்களால் இருண்டு கொண்டே வந்ததால் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் மூன்று முறை தடைபட்டது. இறுதியாக 64.4 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் மீண்டும் தடைப்பட்டது. இத்தோடு இன்றைய நாளும் முடித்து வைக்கப்பட்டது. இந்திய அணி 146-3 என்ற நிலையில் உள்ளது. இன்றைய நாளில் இரண்டு அணிகளுமே சம அளவிலேயே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றனர்.

நல்ல தொடக்கத்துக்கு பிறகு சொதப்பலாக ரோஹித்தும் கில்லும் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இந்திய அணியின் கை ஓங்கியிருக்கும். நியுசிலாந்து அணியில் சவுத்தியும் போல்ட்டும் முதல் ஸ்பெல்லை முறையாக வீசியிருந்தால் நியுசிலாந்தின் கை ஓங்கியிருக்கும். இதுதான் இன்றைய நிலவரம். அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories