ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதற்கான போட்டி கடுமையாகி உள்ளது. வெற்றி பெறுகிற அணி சென்னை அணியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடிக்கும் என்ற நிலையில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான நேற்றைய போட்டி நடைபெற்றது. கடைசி பந்து வரை நெருக்கமாக சென்ற இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது.
குஜராத்தின் அஹமதாபாத் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டே டாஸ் வென்றார். பனியின் தாக்கத்தை காரணம் காட்டி சேஸிங்கை தேர்வு செய்தார் பண்ட்.
இதன்படி, பெங்களூர் அணி பேட்டிங் செய்ய வேண்டியிருந்தது. இந்த சீசனின் ட்ரெண்டிங் வீரரான படிக்கலும் கேப்டன் கோலியும் ஓப்பனர்களாக களமிறங்கினர். முதல் மூன்று ஓவர்களில் நான்கு பவுண்டரிகளை அடித்து சிறப்பாகவே தொடங்கியது இந்த கூட்டணி. ஆவேஷ்கான் வீசிய நான்காவது ஓவரையும் பவுண்டரியோடு தொடங்கினார் கோலி. ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் இன்சைட் எட்ஜ்ஜாகி போல்டை பறிகொடுத்தார். கேப்டன் கோலி 12 ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
நம்பர் 3 ல் ரஜத் படிதர் வந்தார். கோலி அவுட் ஆன பிறகு இஷாந்த் சர்மா வீசிய அடுத்த ஓவரிலேயே படிக்கலும் வெளியேறினார். தொடர்ந்து குட்லெந்தில் வீசிய இஷாந்த் சர்மாவுக்கு சிறியதாக ஸ்விங்கும் கிடைக்க படிக்கலை 17 ரன்களில் போல்டாக்கினார். அதிரடி சூறாவளியான மேக்ஸ்வெல் நம்பர் 4 இல் வந்தார். முதல் நான்கைந்து பந்துகளை பார்த்து ஆடிவிட்டு அடுத்து பேட்டை வீச ஆரம்பித்தார் மேக்ஸ்வெல்.
அமித் மிஷ்ரா வீசிய ஓவரில் லாங் ஆஃபில் ஒரு சிக்சரை பறக்கவிட்டார். சிக்சர் அடித்த மேக்ஸ்வெல்லை அடுத்த ஓவரிலேயே பழிவாங்கினார் மிஷரா. இந்த முறையும் மிஷ்ராவின் பந்தை லாங் ஆனில் பெரிய சிக்சராக்க முயன்ற மேக்ஸ்வெல் ஸ்மித்திடம் கேட்ச் ஆகி வெளியேறினார். கோலி, மேக்ஸ்வெல் வெளியேறிய பிறகு பெங்களூருவின் கடைசி நம்பிக்கையாக டீவில்லியர்ஸ் மட்டுமே இருந்தார்.
பெங்களூர் அணியை மீண்டும் ஒரு முறை பள்ளத்திலிருந்து மீட்க வேண்டிய பொறுப்பு டீவில்லியர்ஸுக்கு ஏற்பட்டது. மெதுவாக நின்று பார்த்து ஆடிய டீவில்லியர்ஸ் டெத் ஓவர்களுக்கு சென்ற பிறகு பேட்டை சுழற்ற ஆரம்பித்தார். நன்கு செட்டில் ஆகியிருந்த இளம் வீரரான ரஜத் படிதர் ஒன்றிரண்டு பெரிய ஷாட்களை ஆடிவிட்டு 31 ரன்களில் வெளியேறினார். டெத் ஓவரில் டீவில்லியர்ஸின் அதிரடியால் கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் 43 ரன்கள் வந்தது.
குறிப்பாக, ஸ்டாய்னிஸ் வீசிய கடைசி ஓவரில் டீவில்லியர்ஸ் மூன்று சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். இந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் வந்தது. கடைசி வரை டீவில்லியர்ஸ் நாட் அவுட்டாக இருந்தார். 42 பந்துகளில் 75 ரன்களை சேர்த்திருந்தார் டீவில்லியர்ஸ். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 171 ரன்களை சேர்த்திருந்தது.
டெல்லி அணிக்கு டார்கெட் 172. அஹமதாபாத் பிட்ச்சின் தன்மைகள் இன்னும் முழுமையாக தெரியாததால் கொஞ்சம் குழப்பத்துடனேயே களமிறங்கியது டெல்லி அணி. அதற்கேற்றவாறு அந்த அணியின் டாப் ஆர்டரும் கடுமையாக சொதப்பியது. 6 ரன்களில் தவான் ஜேமிசன் பந்தில் கேட்ச் ஆக, 4 ரன்னில் ஸ்டீவ் ஸ்மித் சிராஜ் பந்தில் எட்ஜ்ஜாகி டீவில்லியர்ஸிடம் கேட்ச் ஆனார்.
ப்ரித்திவி ஷா மட்டும் ஒரு சில பவுண்டரிகளை அடித்து கொஞ்ச நேரம் நின்றார். அவரும் பவர்ப்ளே முடிந்தபின் ஹர்ஷல் படேல் வீசிய ஓவரில் பெவிலியனுக்கு திரும்பினார். ஹர்ஷல் படேல் வைடாக வீசிய பந்தை தேவையில்லாமல் அடிக்கப்போய் 21 ரன்களில் எட்ஜ் ஆகி வெளியேறினார் ப்ரித்திவி ஷா. டாப் ஆர்டர் சீக்கிரமே கிளம்பியதால், டெல்லியின் மிடில் ஆர்டர் மீது சுமை கூடியது. கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்டாய்னிஸ் இருவரும் விக்கெட் விடக்கூடாது என்பதற்காக மெதுவாக தட்டி ஆடிக்கொண்டிருந்தனர்.
இதனால் ரன்ரேட்டும் எகிற ஆரம்பித்தது. 22 ரன்களில் ஸ்டாய்னிஸ் அவுட் ஆகி வெளியேறினார். ஸ்டாய்னிஸுக்கு பிறகு ஹெட்மயர் உள்ளே வந்தார். இதன் பிறகே டெல்லி அணியின் சேஸிங் உயிர்பெற்றது. ஹெட்மயர் தனது வழக்கமான அதிரடியில் மிரட்டினார். ஜேமிசன் வீசிய 18 வது ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். 22 பந்துகளில் அரை சதத்தையும் கடந்தார். ஹெட்மயரின் அதிரடியால் டார்கெட் நெருங்கி வந்தது.
கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. இந்த முக்கியமான ஓவரை சிராஜ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை மட்டுமே ஹெட்மயர் எதிர்கொண்டார். மீதமிருந்த 5 பந்துகளையும் பண்ட்டே எதிர்கொண்டார். கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டு பவுண்டரிகளை மட்டுமே பண்ட்டால் அடிக்க முடிந்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் வென்றது. 46 பந்துகளில் அரை சதத்தை கடந்து பண்ட் நாட் அவுட் ஆக இருந்தார்.
கடைசி ஓவரில் ஹெட்மயர் ஸ்ட்ரைக்கில் இருந்திருந்தால் டெல்லி அணி வென்றிருக்கும் வாய்ப்புகள் அதிகம் இருந்திருக்கும். இந்த போட்டியை வென்றதன் மூலம் சென்னை அணியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது பெங்களூர்.