இந்த சீசனில் மீண்டும் ஒரு திக்திக் க்ளைமாக்ஸை கொண்ட ஆட்டம் நடைபெற்று முடிந்திருக்கிறது. பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே நடந்த இந்த போட்டியில் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த சீசனில் டாஸ் வென்றாலே முதல் பேட்டிங்கை தேர்வு செய்யும் வார்னர் இந்த சீசனில் பௌலிங்கை விரும்புவது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக கொரோனாவிலிருந்து மீண்டு வந்த தேவ்தத் படிக்கலும் கேப்டன் விராட் கோலியும் களமிறங்கினார்கள். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே அவரின் தலைக்கு மேலேயே ஒரு பவுண்டரியை விளாசி அசத்தினார் கோலி. தேவ்தத் படிக்கலும் ஒன்றிரண்டு பவுண்டரிகளை அடித்தார். இருவரும் நன்றாக ஆரம்பித்தாலும் இந்த கூட்டணி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 11 ரன்களில் புவனேஷ்வரின் ஓவரில் நதீமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் படிக்கல்.
இதன்பிறகு, கேப்டன் கோலியுடன் சபாஷ் அஹமது இணைந்தார். சபாஷ் நதீமின் ஓவரில் சபாஷ் அஹமது ஒரு சிக்சர் கூட அடித்தார். ஆனால், இவரும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன்பிறகு, நம்பர் 4 இல் மேக்ஸ்வெல் களமிறங்கினார். சபாஷ் நதீம் வீசிய 11 வது ஓவரில் இரண்டு சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் அடித்து மிரட்டினார் கோலி. கேப்டன் கோலியும் அந்த ஓவரில் ஒரு பவுண்டரி அடிக்க அது பெரிய ஓவராக அமைந்தது. ஹோல்டர் வீசிய அடுத்த ஓவரிலேயே இன்னொரு பெரிய ஷாட்டுக்கு முயன்று கேப்டன் கோலி அவுட் ஆனார். கோலி 33 ரன்களில் வெளியேறியவுடன் டீவில்லியர்ஸ் வந்தார். அவரும் வந்த வேகத்திலேயே ரஷீத்கானின் ஓவரில் வெளியேறினார்.
முக்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாரும் வெளியேறியதால் மேக்ஸ்வெல் மட்டுமே நின்று பெங்களூர் அணியை காப்பாற்ற வேண்டிய நிலை உருவானது. அவரும் அந்த பணியை சிறப்பாக செய்தார். நடராஜன், புவனேஷ்வர் குமார் போன்றோரின் ஓவர்களிலெல்லாம் பவுண்டரிக்களை அடித்து அசத்தினார். கடைசி ஓவரில் தனது அரை சதத்தையும் நிறைவு செய்து, அணியையும் கௌரவமாக 149 ரன்களை எடுக்க வைத்தார்.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. முந்தைய போட்டிகளில் இந்த 150 ரன்களே டிஃபண்ட் செய்யப்பட்டிருப்பதால் பெங்களுர் அணி கொஞ்சம் நம்பிக்கையுடனே களமிறங்கியது.
சன்ரைசர்ஸ் அணிக்கு வார்னரும் விருத்திமான் சஹாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விருத்திமான் சஹா நீண்ட நேரம் நிற்கவில்லை. சீக்கிரமே வெளியேறிவிட்டார். நம்பர் 3 இல் மணீஷ் பாண்டே களமிறங்கினார். வார்னர்-மணீஷ் பாண்டே இந்த கூட்டணிதான் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. மணீஷ் பாண்டே நிதானமாக ஆட, வார்னர் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறக்கவிட்டார். வார்னர் அரை சதத்தை கடக்க சன்ரைசர்ஸ் அணி 13 ஓவர்களில் 96-1 என இருந்தது. இதன்பிறகுதான் சன்ரைசர்ஸ் அணியின் வீழ்ச்சி ஆரம்பித்தது.
எளிதாக வென்றுவிடலாம் என்ற நிலையிலிருந்து ஆட்டத்தை பெங்களுருவிடம் கோட்டைவிட்டது. வார்னர் 54 ரன்களில் ஜேமிசன் ஓவரில் அவுட் ஆனார். கோலியின் புத்திசாலித்தனமான நகர்வுகள் சன்ரைசர்ஸை தடுமாற செய்தது. முக்கிய பௌலர்கள் இருக்க, திடீரென பகுதி நேர பந்து வீச்சாளரான சபாஷ் அஹமதை அழைத்து வந்து வீச வைத்தார் கோலி. அந்த ஒரு ஓவரில் மட்டும் மணீஷ் பாண்டே, பேர்ஸ்ட்டோ, அப்துல் சமத் என சன்ரைசர்ஸ் அணியின் மிடில் ஆர்டர் மொத்தமும் காலியானது.
இதன்பிறகு, சன்ரைசர்ஸ் அணியால் எழவே முடியவில்லை. கடைசிக்கட்டத்தில் ரஷீத்கான் மட்டும் ஒன்றிரண்டு பவுண்டரிக்களை அடித்தார். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சன்ரைசர்ஸால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
அரைசதம் அடித்து பெங்களூர் அணியின் வெற்றிக்கு உதவிய மேக்ஸ்வெல்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 'ஈ சாலே கப் நம்தே' என ரசிகர்களால் கிண்டலடிக்கப்படும் பெங்களூர் அணி இந்த சீசனின் தொடக்கத்திலேயே தொடர்ந்து இரண்டு போட்டிகளை வென்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.