இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பேர்ஸ்ட்டோ மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் அதிரடியாக ஆடி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதால், பட்லர் இந்த போட்டியில் கேப்டம் பதவியை ஏற்றிருந்தார். டாஸ் வென்ற பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கடந்த போட்டியை போலவே, ரோஹித் சர்மாவும் தவானும் மெதுவாக இன்னிங்ஸை தொடங்கினர்.
ஆனால், இந்த முறை இந்த கூட்டணி நிலைத்து நிற்க தொடங்கும் முன்னே இங்கிலாந்து பௌலர்கள் இவர்களை பிரித்தனர். டாப்லே வீசிய 4வது ஓவரில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து தவான் வெளியேறினார். இதன்பின்னர், நம்பர் 3 இல் கேப்டன் கோலி களமிறங்கினார். ரன்விகிதம் ரொம்பவே குறைவாக இருந்ததால், ரோஹித் கொஞ்சம் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். டாப்லே வீசிய ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிக்களை அடித்து அசத்தினார். ஆனால், அடுத்த ஓவரிலேயே சாம் கர்ரன் வீசிய ஒரு பந்தில் அடில் ரஷீத்திடம் கேட்ச் ஆகி, 25 ரன்களில் வெளியேறினார்.
நம்பர் 4 இல் கே.எல்.ராகுல் இந்த முறை களமிறங்கினார். கேப்டன் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இந்த கூட்டணிதான் இந்திய அணியின் ஸ்கோரை அதிகரித்தது. இருவரும் மிகச்சிறப்பாக கூட்டணி போட்டு ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரி அடித்து இருவருமே அரைசதத்தை கடந்தனர். 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் கோலியின் விக்கெட்டை அடில் ரஷீத் வீழ்த்தினார். இதன்பிறகு, இந்திய அணி கொஞ்சம் தடுமாறும் என எதிர்பார்க்கையில், ரிஷப் பண்ட் களமிறங்கி சிக்சர்களாக அடித்து அசத்தினார். பண்ட் மட்டுமே 7 சிக்சர்களை அடித்து நொறுக்கினார். இடையே, கே.எல்.ராகுலும் சிறப்பாக ஆடி சதத்தை பூர்த்தி செய்து அவுட் ஆகியிருந்தார்.
பண்ட் 77 ரன்களில் டாம் கர்ரனின் பந்தில் ஜேசன் ராயிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, இறுதியில் பாண்ட்யா சகோதரர்கள் அதிரடியாக ஆடி இந்தியாவின் இன்னிங்ஸை முடித்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 336 ரன்களை எடுத்தது. 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
பேர்ஸ்ட்டோ மற்றும் ஜேசன் ராய் இருவரும் அதிரடியாக அதேநேரத்தில் ஜாக்கிரதையாகவும் ஆடி இங்கிலாந்தின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் சேர்ந்து கூட்டணியாக 100 ரன்களை சேர்த்தனர். அரைசதம் கடந்த நிலையில் ஜேசன் ராய் அவுட் ஆக, நம்பர் 3 இல் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். பேர்ஸ்ட்டோ-ஸ்டோக்ஸ் இந்த கூட்டணிதான் ஆட்டத்தை இந்திய அணியின் கையிலிருந்து பறித்தது.
குறிப்பாக, ஸ்டோக்ஸ் இந்திய அணியின் ஸ்பின்னர்களை எல்லா திசையிலும் சிதறடித்தார். குல்தீப் யாதவ்வின் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்த ஸ்டோக்ஸ், அடுத்து க்ரூணால் பாண்ட்யா ஓவரில் 3 சிக்சர்களை அடித்து மிரட்டினார். இன்னொரு புறம், பேர்ஸ்ட்டோவும் ஸ்டோக்ஸுக்கு ஆதரவாக ஆடி சதத்தை நிறைவு செய்தார். ஸ்டோக்ஸும் சதமடிப்பார் என நினைக்கையில், 99 ரன்களில் புவனேஷ்வர் குமாரின் ஓவரில் விக்கெட்கீப்பரான ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பேர்ஸ்ட்டோ-ஸ்டோக்ஸ் இருவரும் ஆட்டமிழந்தாலும், இந்திய அணியால் மீண்டும் ஆட்டத்திற்குள் வரமுடியவில்லை. 43.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி மிக எளிதாக டார்கெட்டை சேஸ் செய்து விட்டது. சதமடித்து இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவிய பேர்ஸ்ட்டோவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட தொடர் இப்போது 1-1 என சமநிலையில் இருக்கிறது. தொடரின் முடிவை தீர்மானிக்கப்போகும் இறுதிப்போட்டி நாளை நடைபெற இருக்கிறது.
- உ.ஸ்ரீராம்