விளையாட்டு

சூர்யகுமாரின் அதிரடி பேட்டிங்.. ஷர்துல் தாகூரின் சிறப்பான பவுலிங்.. தொடரை சமன் செய்த இந்திய அணி!

இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி கடைசி நிமிடம் வரை போராடி வென்று தொடரை 2-2 என சமன் செய்துள்ளது.

சூர்யகுமாரின் அதிரடி பேட்டிங்.. ஷர்துல் தாகூரின் சிறப்பான பவுலிங்.. தொடரை சமன் செய்த இந்திய அணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்த நிலையில், கட்டாயம் வென்றே ஆக வேண்டிய போட்டியில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டு வென்றுள்ளது.

இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் டாஸை வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். கடந்த 3 போட்டிகளிலும் சேஸ் செய்த அணிதான் வெற்றி பெற்றிருந்தது. அதன்படி, இந்தியாவுக்கு இந்த டாஸ் முடிவு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. ஆனாலும், இந்திய கேப்டன் கோலி இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நேர்மறையான எண்ணத்தோடு பேட்டிங்குக்கு அணியை தயார்படுத்தினார்.

தசைப்பிடிப்பு காரணமாக இஷான் கிஷன் வெளியேற, அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல், பௌலிங்கில் சஹாலுக்கு பதில் ராகுல் சஹார் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த 3 போட்டிகளிலுமே சொதப்பியிருந்த கே.எல்.ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கோலி வழங்கியிருந்தார். ரோஹித் சர்மாவும் கே.எல்.ராகுலும் ஓப்பனர்களாக களமிறங்கினர்.

பவர்ப்ளேயில் இந்திய அணி குறைவான ரன்களை அடிப்பதே, கடந்த போட்டிகளில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்திய அணி வீரர்களும் அதை உணர்ந்து இந்த போட்டியில் அதை சரி செய்ய முற்பட்டனர். அடில் ரஷீத் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தையே ரோஹித் ஷர்மா லாங் ஆஃபில் சிக்சராக்கினார். அந்த ஓவரில் இன்னொரு பவுண்டரியும் கிடைக்க, முதல் ஓவரிலேயே 12 ரன்கள் அடித்து நன்றாக தொடங்கியது இந்திய அணி.

சூர்யகுமாரின் அதிரடி பேட்டிங்.. ஷர்துல் தாகூரின் சிறப்பான பவுலிங்.. தொடரை சமன் செய்த இந்திய அணி!

ரோஹித் இலகுவாக சிறப்பாக ஷாட்களை ஆடினாலும், ராகுலால் அந்தளவுக்கு நன்றாக ஆட முடியவில்லை. ஒருவித இறுக்கத்துடனேயே ஆடிக்கொண்டிருந்தார். இந்நிலையில், நான்காவது ஓவரை வீசிய ஆர்ச்சர் ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆர்ச்சர் வீசிய அந்த ஓவரின் முதல் பந்து 120+ கி.மீ வேகத்தில் வந்தது. அடுத்த இரண்டு பந்துகளும் 140+ வேகத்தில் வந்தவை. ரோஹித் அவுட் ஆன நான்காவது பந்து மீண்டும் வேகம் குறைந்து 120+ இல் வந்தது. அதை ஸ்ட்ரைட்டாக ஒரு பன்ச் செய்ய முயன்று ஆர்ச்சரிடமே கேட்ச் ஆனார் ரோஹித். அந்த பந்து மட்டும் 140+ கி.மீ வேகத்தில் வீசப்பட்டிருந்தால் ரோஹித்தின் பவருக்கு அது நிச்சயம் பவுண்டரியாகியிருக்கும். இப்படி வேகமாறுபாட்டை இங்கிலாந்து பௌலர்கள் ஒரு யுக்தியாகவே இந்த தொடர் முழுவதும் கையாளுகின்றனர்.

ரோஹித் அவுட் ஆனவுடன் நம்பர் 3 இல் கேப்டன் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இறக்கப்பட்டார். கோலியின் இடத்தில் சூர்யகுமாரா என நமக்குள் குழப்பமான கேள்வி எழும் முன்னே, வந்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து சூர்யகுமார் யாதவ் அசத்தினார். ஆர்ச்சர் ஷாட்டாக வீசிய அந்த பந்தை அற்புதமாக ஒரு ஹூக் ஷாட் ஆடி சிக்சராக்கினார்.

ஆர்ச்சர், ஜோர்டன், ஸ்டோக்ஸ், சாம் கர்ரன் ஆகியோரின் வேகமாறுபாடு யுக்தியாகட்டும், ஷாட்பால் தந்திரமாகட்டும், அடில் ரஷீத்தின் கூக்ளியாகட்டும் எல்லாவற்றையும் எதிர்கொள்ள சூர்யகுமார் யாதவிடம் தனித்தனியாக ஒரு ப்ரத்யேக ஷாட் இருக்கவே செய்தது. பௌலர்கள் எந்த யுக்தியை பயன்படுத்தி எப்படி வீசினாலும் சூர்யகுமார் அடித்து துவம்சம் செய்து கொண்டிருக்க, இன்னொரு முனையில் ராகுல், கோலி என அடுத்தடுத்து விக்கெட்டுகளும் வரிசையாக விழுந்தன.

சூர்யகுமாரின் அதிரடி பேட்டிங்.. ஷர்துல் தாகூரின் சிறப்பான பவுலிங்.. தொடரை சமன் செய்த இந்திய அணி!
Pankaj Nangia

அடில் ரஷீத் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்தார். ஆடிய இரண்டாவது போட்டியிலேயே அரைசதத்தை அடித்து அசத்தியிருக்கிறார் சூர்யகுமார் யாதவ். அவர் ஆடிய முதல் போட்டியில் அவருக்கு பேட்டிங்கே கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ், சாம் கர்ரனின் ஓவரில் முட்டி போட்டு ஃபைன் லெக்கில் ஒரு சிக்சரை அடித்தார்.

அதற்கடுத்த பந்திலும் அதே மாதிரி ஒரு சிக்சருக்கு முயல, இந்த முறை ஃபைன் லெக் ஃபீல்டரான மலானிடம் கேட்ச் ஆனார். ஆனால், மலான் அந்த கேட்ச்சை சரியாக பிடிக்காதது ரீப்ளேவில் தெரிந்தது. அப்படியிருந்தும் களநடுவரின் முடிவுப்படி அவுட் என மூன்றாவது நடுவரும் அவுட் கொடுத்தார். சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 57 ரன்களை எடுத்த நிலையில் வெளியேறினார்.

இதன்பிறகு, பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கொஞ்சம் அதிரடி காட்ட இந்திய அணியின் ஸ்கோர் 185-ஐ தொட்டது. 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. கடந்த போட்டிகளை சிறப்பாக சேஸ் செய்து வென்றிருப்பதால் நம்பிக்கையுடனே இங்கிலாந்து வீரர்கள் களமிறங்கினர்.

இந்திய அணியின் சார்பில் புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். சிறப்பாக ஸ்விங் செய்த புவனேஷ்வர் முதல் ஓவரை மெய்டனாக்கினார். இரண்டாவது ஓவரை வீசுவதற்கு ஹர்திக் பாண்ட்யாவை அழைத்தார் கேப்டன் கோலி. அவரும் இந்த ஓவரை சிறப்பாக வீசி 2 ரன்கள் மட்டுமே கொடுக்க, இங்கிலாந்து அணி மீது அழுத்தம் அதிகரித்தது. இந்த அழுத்தத்தின் விளைவாக, புவனேஷ்வர் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்சரும் பவுண்டரியும் வந்திருந்தாலும் பட்லரின் விக்கெட்டும் கிடைத்தது.

சூர்யகுமாரின் அதிரடி பேட்டிங்.. ஷர்துல் தாகூரின் சிறப்பான பவுலிங்.. தொடரை சமன் செய்த இந்திய அணி!

பெரிய ஷாட்டுக்கு முயற்சி செய்து மிட் ஆஃபில் நின்ற ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பிறகு, ராயும் டேவிட் மலானும் கூட்டணி போட்டனர். ராய் தனது வழக்கமான அதிரடியில் கலக்கினார். கடந்த இரண்டு போட்டிகளில் தன்னுடைய விக்கெட்டை வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஓவரை இந்த முறை அடித்து துவம்சம் செய்தார் ராய். பவர்-ப்ளேயின் கடைசி ஓவராக வாஷி வீசிய அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் வந்தது.

ஆனாலும், இந்த கூட்டணி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 8 வது ஓவரில் ராகுல் சஹார் மலானையும், 9வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா ராயையும் வீழ்த்தினர். தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இந்திய அணி கொஞ்சம் நல்ல நிலையில் இருப்பதாக தோன்றியது. ஆனால், அடுத்து வந்த பேர்ஸ்ட்டோ-ஸ்டோக்ஸ் கூட்டணி அதிரடி காட்டி மிரட்டி இந்திய அணிக்கு தோல்வி பயத்தை காட்டினர்.

இவர்கள் இருவர் மட்டும் அடுத்த 6 ஓவர்களில் 65 ரன்களை சேர்த்து இங்கிலாந்து எளிமையாக வெல்லும் நிலைக்கு கொண்டு வந்தனர். ஆனால், இதன்பிறகு இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டனர். ராகுல் சஹார் பேர்ஸ்ட்டோவை காலி செய்ய, 17வது ஓவரில் ஷர்துல் தாகூர் ஸ்டோக்ஸையும் மோர்கனையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்தார்.

இறுதியில், கடைசி ஓவரில் ஆர்ச்சர் சிக்சர் அடித்து கொஞ்சம் டென்ஷன் ஆக்கினாலும், ஷர்துல் தாக்கூர் அந்த ஓவரை சிறப்பாக வீசி இந்திய அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்தார். கட்டாயம் வென்றாக வேண்டிய வாழ்வா?சாவா?? போட்டியில் இந்திய அணி வென்றிருப்பதன் மூலம் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. இதனால், தொடரின் முடிவை தீர்மானிக்கப்போகும் கடைசி டி20 போட்டியின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

- உ.ஸ்ரீராம்

banner

Related Stories

Related Stories