ஜோகனஸ்பர்க் மைதானத்தில் அன்றைய ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் அப்போதுதான் முடிந்திருந்தது. தென் ஆப்ரிக்க அணி வீரர்கள் ஒவ்வொருருவர் முகத்திலும் சோகம் கலந்த பயம் காணப்பட்டது. நடந்து முடிந்த முதல் இன்னிங்ஸில் அத்தனை தென் ஆப்ரிக்க வீரர்களின் பந்து வீச்சையும் கிழித்து தொங்க விட்டிருந்தார் ரிக்கி பான்டிங். தென் ஆப்ரிக்க அணி சார்பில் சிறந்த பந்து வீச்சாளரே கிரீம் ஸ்மித் தான். அவரின் நான்கு ஓவர்களில் தான் ஆஸ்திரேலிய அணி வெறும் 29 ரன்கள் மட்டும் எடுத்து எக்கானமி 7.25 என விட்டுக் கொடுத்திருந்தது. மற்ற அத்தனை பந்து வீச்சாளர்களின் எக்கானமியும் 7.25 க்கு மேல் தான். அப்படி ஒரு கருணையற்ற சம்பவத்தை நிகழ்த்தி நிம்மதியாக டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்தார் பான்டிங். ஆனால் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் நிலையோ அப்படி இல்லை. அவர்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
"கமான் பாய்ஸ்... இதை நாம் சேஸ் செய்யலாம். இது 450 ரன்கள் அடிக்க வேண்டிய பிட்ச். ஆனால் 434 தான் அடித்திருக்கிறார்கள். 16 ரன்கள் நமக்கு லாபம் தான்" என்று ஒரு குரல் கேட்டது. இமய மலையை நம்மால் தூக்கி வேறு இடத்தில் வைக்க முடியும் என்று ஒருவர் சொன்னால் நாம் எப்படி அவரை பார்ப்போமோ அதேபோலத்தான் தென் ஆப்ரிக்க வீரர்கள் அவரைப் பார்த்தனர். அவர் வேறு யாருமில்லை... அன்றைய ஆட்டத்தில் வெறும் ஆறே ஓவர்கள் வீசிய காலிஸ் தான் அந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர். அத்தனை வீரர்களும் அவரைத் திரும்பி பார்த்த போது கூட, "பந்து வீச்சாளர்களின் வேலை முடிந்துவிட்டது. இப்போது நம் வேலை" என்று மிகவும் தன்னம்பிக்கையுடன் பேசினார் காலிஸ். அப்போது பலருக்குப் புரியவில்லை அவை வெறும் வார்த்தைகள் அல்ல தீர்க்கதரிசனம் என்று. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய டிப்பெனர் மற்றும் ஸ்மித் களத்திற்குள் சென்றனர்.
பயிற்சியாளர் மிக்க ஆர்தர் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் போது 25 ஓவர்களில் நாம் 180 ரன்கள் அடித்தகருக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பியிருந்தார். துவக்க வீரர் டிப்பெனர் ஏழு பந்துகளை பிடித்த பின்பு வெறும் ஒரு ரன்களில் வெளியேறினார். ஆனால் பின்பு இணைந்த கிப்ஸ் மற்றும் ஸ்மித் ஜோடி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தர்ம யுத்தத்தை தொடங்கினர். ப்ரெட் லீ பந்துகளில் இரண்டு கவர் டிரைவுகளுடன் ஆரம்பித்தார் ஸ்மித். 25 ஓவர்களுக்கு வெறும் 180 என்பதெல்லாம் எங்களுக்கு பத்தாது என்பது போல அடித்து வெளுக்க ஆரம்பித்தனர் இருவரும். 23வது ஓவரில் 190 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிரீம் ஸ்மித் அவுட் ஆனார்.
55 பந்துகளில் 90 ரன்கள் என்று ஸ்மித் ஆட்டமிழந்தாலும் இன்னமும் ஒரு மலையை ஏறி இறங்க வேண்டியது போல இருந்தது ஆஸ்திரேலிய அணி அமைத்த டார்கெட். இது குறித்து ஜான்டி ரோட்ஸ் பேசும்போது, "மழை எதுவும் வந்து ஆட்டம் தடைபட்டு விடாதா என்று கூட நான் நினைத்தேன். நாங்கள் ஓவருக்கு ஒன்பது ரன்கள் என்று போய்க் கொண்டிருந்தாலும் தேவையான ரன் ரேட் அதே ஒன்பதில் தான் இருந்தது. அவ்வளவு சிக்கலான டார்கெட் இது" என்று கூறினார். இந்த சிக்கலான டார்கெட்டை எட்டிப் பிடிக்க ஸ்மித்தின் இன்னிங்ஸ் மட்டும் போதாது. மற்றொருவர் கண்டிப்பாக தங்கள் வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை ஆடி ஆக வேண்டும். அந்தப் பொறுப்பை கிப்ஸ் எடுத்துக் கொண்டார்.
ஸ்மித் அவுட் ஆன அடுத்த பந்தே ஸ்கொயர் லெக் திசையில் சிக்சர் அடித்து இந்த இன்னிங்ஸில் எப்படி ஆடப்போகிறேன் என்பதை அறிவித்தார் கிப்ஸ். பயிற்சியாளர் சொன்ன 25 ஓவர் முடிந்த போது 180 ரன்களுக்கு பதிலாக 229 ரன்கள் குவிந்திருந்தது தென் ஆப்ரிக்கா. கிப்ஸ் ஆடிய ஆட்டத்திற்கு அன்றைய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஒருவரிடத்திலும் பதில் இல்லை. எந்தளவு கொடூரமான ஆட்டம் அது என்பதை ஒரு சின்ன உதாரணம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தற்பொழுது Mr. 360 என்று வர்ணிக்கப்படும் டிவில்லியர்ஸ் உடன் இணைந்து 52 பந்துகளில் 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் கிப்ஸ். அதிரடி மன்னர் என்று அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் அதில் வெறும் 14 ரன்களே அடித்தார். அதுவும் 17 பந்துகளில். மிச்சமுள்ள 80 ரன்களை கிப்ஸ் மட்டுமே விளாசினார். வெறும் 35 பந்துகளில்!
டிவில்லியர்ஸ் அவுட் ஆன அடுத்த ஓவரிலேயே கிப்ஸ் அவுட் ஆக (175 ரன்களுக்கு) தென் ஆப்ரிக்க அணி மீண்டும் அந்த பழைய அழுத்தத்தை உணர்ந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சேசிங்கில் ஸ்மித் சேவாக் போல அதிரடியாக ஆடி விட்டார். கிப்ஸ் சச்சின் டெண்டுல்கரின் சதம் அடிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். இப்போது அந்த அணிக்கு தேவை ஒரு தோனி. கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு நேராக வழிநடத்தும் பொறுப்பு ஒன்று மட்டும் பாக்கி இருந்தது. அதையும் தென் ஆப்ரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பவுச்சர் எடுத்துக் கொள்ள முன் வந்தார்.
காலிஸ், கெம்ப் என இரண்டு விக்கெட்டுகளை வேகமாக எடுத்தது ஆஸ்திரேலியா. அதன் பிறகு களத்திற்குள் வந்த வான்டெர் வாத் மூன்று சிக்சர்கள் ஒரு பவுண்டரி என 18 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க தென் ஆப்ரிக்க அணியின் நம்பிக்கை மீண்டும் துளிர் விடத் துவங்கியது. பவுச்சர் கடைசி வரை பொறுமையாக இருந்து தோனி போல 48வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை பறக்க விட்டார். ஆட்டம் சூடு பிடித்து முக்கியமான கடைசி இரண்டு ஓவர்களுக்கு சென்றது.
நாதன் பிராக்கன் 49வது ஓவரை மிகவும் நேர்த்தியாக வீசினார். ஒரு பவுண்டரி கூட விடாமல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் இரண்டு விக்கெட்டுகள் தான் இருந்தன. முதல் பந்திலேயே பவுச்சர் ஒரு ரன் எடுத்து அந்தப் பக்கம் செல்ல, என்னடா இது என ஏமாற்றமடைந்த தென் ஆப்ரிக்க ரசிகர்களை ஒரு பவுண்டரி அடித்து உற்சாகப்படுத்தினார் நெல். ஆனால் அது தற்காலிக உற்சாகம் தான். அடுத்த பந்திலேயே நெல்லை வெளியேற்றினார் ப்ரெட் லீ. அதை விட பெரிய பிரச்சனை என்ன என்றால் பவுச்சர் அந்த பக்கத்துக்கு ஓடி வருவதற்குள் க்ளார்க் கேட்சை பிடித்து விட்டார். ஆக அடுத்த பந்தை மக்காயா நிட்னி எதிர்கொள்ள வேண்டும். 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் ப்ரெட் லீயின் பந்தை ஒரு டெய்லெண்டர் எதிர்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையில் போய் நிறுத்தியது கிரிக்கெட்.
டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து ஷான் பொல்லாக் ரன் அவுட் மட்டும் ஆகிவிடாதீர்கள் என்று கத்தினார். தென் ஆப்ரிக்க அணியின் வரலாறு அந்த மாதிரி. எளிதாக ஜெயிக்க வேண்டிய இடத்தில் எல்லாம் கோட்டை விட்டவர்கள் இதில் என்ன செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வம் பலருக்கு எழுந்தது. ப்ரெட் லீ யார்க்கர் சிறிது விலகிச் செல்ல அதை தேர்ட் மேன் திசையில் தட்டி விட்டு சிங்கிள் எடுத்தார் நிட்னி. ஒரு ரன் தேவை. அத்தனை பீல்டர்களும் பவுச்சரை சுற்றி நின்றனர். பவுச்சரோ மிகவும் கூலாக மிட் ஆன் திசையில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார். ஆஸ்திரேலிய அணி ஒன்றும் தோற்கடிக்கவே முடியாத அணி கிடையாது என்று உலக கிரிக்கெட்டுக்கு தென் ஆப்ரிக்க அணி உணர்த்திய தினம் இன்று!