விளையாட்டு

“பிட்ச் கோளாறா... இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கோளாறா?” - இன்றைய ஆட்டத்தில் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்!

இன்றைய ஆட்டத்திற்கான பிட்சில் அப்படி ஸ்பின்னுக்கென்று பிரத்யேகமாக ஒத்துழைக்கும் அளவுக்கு எதுவும் இல்லை. அப்படியிருந்தும் இங்கிலாந்து அணி மிக மோசமாக பேட்டிங் ஆடி சொதப்பியிருக்கிறது.

“பிட்ச் கோளாறா... இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கோளாறா?” - இன்றைய ஆட்டத்தில் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

சென்னையில் டெஸ்ட் தொடர் தொடங்கியதிலிருந்தே இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பிட்ச் குறித்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். அகமதாபாத் பிட்ச்செல்லாம் கிரிக்கெட் ஆடுவதற்கே தகுதியற்ற பிட்ச் என்கிற லெவலுக்கு விமர்சனங்களை அள்ளி வீசியிருந்தனர். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பிட்ச் ஸ்பின்னுக்கு பெரிதாக ஒத்துழைத்ததால் அந்த விமர்சனங்களில் ஏதோ குறைந்தபட்சம் லாஜிக் இருந்ததாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இன்றைய ஆட்டத்திற்கான பிட்சில் அப்படி ஸ்பின்னுக்கென்று பிரத்யேகமாக ஒத்துழைக்கும் அளவுக்கு எதுவும் இல்லை. அப்படியிருந்தும் இங்கிலாந்து அணி மிக மோசமாக பேட்டிங் ஆடி சொதப்பியிருக்கிறது. உண்மையிலேயே பிட்ச்சில் பிரச்சனை இருக்கிறதா இல்லை இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் டெக்னிக்கில் பிரச்சனை இருக்கிறதா?

கடந்த போட்டி இரண்டே நாளில் முடிந்ததில் பி.சி.சி.ஐ கூட கொஞ்சம் அப்செட்டாகத்தான் இருந்தது. 'கடைசி டெஸ்ட் போட்டிக்கு இதே மாதிரியான பிட்ச் பயன்படுத்தப்படாது. பேட்டிங்குக்கும் சாதகமாக 5 நாட்களும் ஆட்டம் நடைபெறும் அளவுக்கான பிட்ச்சே பயன்படுத்தப்படும்' என கூறப்பட்டிருந்தது. அதேபோல், இன்று பிட்ச்சிலும் சில மாற்றங்கள் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

கடந்த போட்டியில் இரண்டு எண்டிலும் குட் லென்த்திலிருந்து பேட்ஸ்மேனுக்கு முன்பு வரை நிறைய தூசி படிந்திருந்தது. இந்த இடங்களில் பந்து பிட்ச் ஆகும்போது ஸ்பின்னர்களுக்கு பந்து நன்றாகத் திரும்பியது. இன்றைய ஆட்டத்திற்கான பிட்ச்சில் அப்படி அதிக தூசி நிறைந்த பகுதி பெரிதாக இல்லை. இதுவே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஒரு அம்சமாகப் பார்க்கப்பட்டது.

இதனாலேயே இன்று பந்து பெரிதாக திரும்பவில்லை. ஆனாலும், அக்ஷர் படேல் தான் வீசிய முதல் இரண்டு ஓவர்களிலும் விக்கெட் வீழ்த்தினார். இந்த இரண்டு விக்கெட்டுகளுக்கும் பிட்ச் ஒரு காரணமே இல்லை. இரண்டாவது பந்திலேயே சிப்லேவை வீழ்த்தியிருந்தார். இது எந்தவித ஸ்பின்னும் இல்லாமல் நேராக வந்த டெலிவரி. இதை சரியாக மீட் செய்யாமல் இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டம்பை பறிகொடுத்தார் சிப்லே.

இந்த விக்கெட்டைப் பார்த்தவுடனே நான்-ஸ்டிரைக்கர் எண்டில் இருந்த க்ராலி பதற்றமடைந்துவிட்டார். இத்தனைக்கும் கடந்த போட்டியில் க்ராலி ஸ்பின்னை சிறப்பாக எதிர்கொண்டிருந்தார். ஆனால், இன்று அக்ஷரின் ஸ்பின்னுக்கு பயந்து க்ரீஸை விட்டு இறங்கி இறங்கி வந்து ஆடமுற்பட்டார். ஒரு பௌண்டரி கிடைத்தாலும் நான்காவது பந்திலேயே இறங்கி வந்து தூக்கி அடித்து மிட் ஆஃப் திசையில் கேட்ச் ஆனார். இதற்கும் எந்தவிதத்திலும் பிட்சைக் காரணம் கூற முடியாது.

“பிட்ச் கோளாறா... இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கோளாறா?” - இன்றைய ஆட்டத்தில் சொதப்பிய பேட்ஸ்மேன்கள்!

பெரும்பாலும் எல்லா பேட்ஸ்மேன்களுமே இப்படி அவர்களாகவே தவறு செய்துதான் ஆட்டமிழந்தனர். பிட்சிலிருந்து எந்த பூதமும் கிளம்பி வந்து விக்கெட்டை பிடுங்கிவிடவில்லை. தொடர்ந்து வெளியே வீசப்பட்ட பந்துகளுக்குப் பிறகு சிராஜ் வீசிய ஒரு இன்கம்மிங் டெலிவரியில் ரூட் lbw ஆனார். பேர்ஸ்ட்டோவும் இதேமாதிரியான ஒரு டெலிவரியில் தான் அவுட் ஆனார். ஸ்டோக்ஸ் ஆரம்பத்திலேயே ஒரு வழக்கமான ஷார்ட் பிட்ச் டெலிவரியில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் 'கேரி' ஆகாமல் தப்பித்திருந்தார். இதன்பிறகு, ஸ்டோக்ஸ் கொஞ்சம் ஜாக்கிரதையாக நன்றாகவே ஸ்பின்னை எதிர்கொண்டார். குறிப்பாக, அஷ்வினுக்கு எதிராக பேக் ஃபூட்டை ஊன்றி நின்று நன்றாக ஆடியிருந்தார். ஆனால், வாஷியின் சின்ன தந்திரத்தில் ஸ்டோக்ஸ் வீழ்ந்து போனார். தொடர்ந்து பிட்ச் ஆக்கி பந்தை வெளியில் எடுத்து வாஷி ஒரு பந்தை திருப்பாமல் நேராக உடம்புக்குள் வீசியிருப்பார் அதை எதிர்பார்க்காத ஸ்டோக்ஸ் டர்னுக்கு ஆடி lbw ஆனார். இதிலும் பிட்ச்சை குறை கூற ஒன்றுமே இல்லை. வாஷியின் மைண்ட் கேம் தான் இங்கே வென்றது.

போப் முதலில் Back/front foot இரண்டிலுமே ஒழுங்காக வராமல் தட்டுத்தடுமாறினார். அதன்பிறகு, கொஞ்சம் Back foot இல் ஆடி சமாளித்தார். டேன் லாரன்ஸ் Front foot இல் சில ஷாட்களை ஆடி ரன் சேர்த்தார். க்ரீஸிலிருந்து இறங்கி வந்து பவுண்டரிகளையும் அடித்தார். இப்படி இறங்கி வந்து ஒரு பெரிய ஷாட்டுக்கு முயலும் போதுதான் ஸ்டம்பிங் ஆனார்.

தொடரைத் தோற்றால் மொத்தமாக பிட்ச்சின் மீது பழிபோட காத்திருந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கே இங்கிலாந்தின் இன்றைய சொதப்பலான பேட்டிங் அதிர்ச்சியாக இருந்தது. வயல்வெளியில் பேட்டிங் செய்வது போல பிட்ச்சை ட்ரோல் செய்து கொண்டிருந்த மைக்கேல் வானே இங்கிலாந்தின் பேட்டிங்கை கழுவி ஊற்றத் தொடங்கிவிட்டார்.

பிட்ச் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்தான் ஆனால், இங்கிலாந்து ஆதரவாளர்கள் பழிபோடும் அளவுக்கு தாக்கம் செலுத்தாது என்பது இன்றைய ஆட்டத்தின் மூலம் தெரிந்துவிட்டது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் டெக்னிக்கில்தான் பெரிய பிரச்சனை இருக்கிறது. இன்றைய ஆட்டத்தின்போது All India Radio வில் கமெண்ட்ரி செய்துக்கொண்டிருந்தவர் 'இங்கிலாந்து வீரர்கள் ஒரு சம்மர் முழுவதையும் ஸ்பின்னை எதிர்கொள்வது குறித்த பயிற்சியில் ஈடுபட வேண்டும்' எனப் பேசியிருந்தார். அதுதான் நிதர்சனம்!

banner

Related Stories

Related Stories