விளையாட்டு

இந்திய அணியினரின் பந்துவீச்சை வெளுத்தெடுத்த ஜோ ரூட், ஸ்டோக்ஸ்... இன்னிங்ஸ் வெற்றிக்கு இலக்கு? #INDvENG

இன்றைய நாளில் பும்ராவின் இந்த ஒரு யார்க்கர் மட்டுமே ஸ்டோக்ஸை தடுமாற செய்தது. மற்றபடி மிகச்சுலபமாக இந்தியாவின் பௌலிங் அட்டாக்குக்கு கவுன்ட்டர் அட்டாக் கொடுத்து ஆடிக்கொண்டிருந்தார் ஸ்டோக்ஸ்.

இந்திய அணியினரின் பந்துவீச்சை வெளுத்தெடுத்த ஜோ ரூட், ஸ்டோக்ஸ்... இன்னிங்ஸ் வெற்றிக்கு இலக்கு? #INDvENG
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான சேப்பாக்கம் டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. இந்திய அணி சில விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், இன்றைய நாளிலும் இங்கிலாந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இன்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 555/8 என்ற நிலையில் இருக்கிறது.

நேற்று சதமடித்திருந்த கேப்டன் ரூட்டும், புது பேட்ஸ்மேனான பென் ஸ்டோக்ஸும் இன்றைய நாளை தொடங்கினர். பிட்ச்சில் பௌலர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் ஒன்றுமே இல்லை என்பது நேற்றே தெரிந்துவிட்டது. பௌலர்களே எதாவது அசாத்தியமாக செய்து விக்கெட் எடுத்தால்தான் உண்டு என்ற நிலையே இருந்தது. இதனால் நியூபாலாக இருந்த போதிலும் ஆரம்பத்திலேயே தனது பிரதான ஆயுதமான யார்க்கரை கையில் எடுத்தார் பும்ரா. ஸ்டோக்ஸுக்கு இவர் வீசிய ஒரு யார்க்கரில் நிச்சயமாக ஸ்டம்புகள் தெறித்திருக்கும். அதிர்ஷ்டவசமாக ஸ்டோக்ஸ் அந்த யார்க்கரிலிருந்து தப்பித்தார். இன்றைய நாளில் பும்ராவின் இந்த ஒரு யார்க்கர் மட்டுமே ஸ்டோக்ஸை தடுமாற செய்தது. மற்றபடி மிகச்சுலபமாக இந்தியாவின் பௌலிங் அட்டாக்குக்கு கவுன்ட்டர் அட்டாக் கொடுத்து ஆடிக்கொண்டிருந்தார் ஸ்டோக்ஸ்.

ஸ்டோக்ஸை இதுவரை 7 முறை அவுட் ஆக்கியிருக்கிறார் அஸ்வின். அதனால், பும்ராவுடன் முதல் ஸ்பெல்லிலேயே அஸ்வினை அறிமுகம் செய்தார் கோலி. 7 முறையில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் ஃபுல் லெந்தில் மிடில் மற்றும் ஆஃப் சைடில் திரும்பிச் செல்லும் பந்திலேயே அவுட் ஆகியிருக்கிறார். இதே லைன் & லெந்த்தை குறிவைத்துதான் அஸ்வின் வீசினார். ஆனால், பிட்ச்சில் பெரிதாக ஒன்றுமே இல்லாததால் அஸ்வினால் பந்தை திருப்பவே முடியவில்லை. சில டெலிவரிகள் நேராகச் சென்றது சில டெலிவரிகள் லெக் ஸ்பின்னரை போல ஆங்கிள் கிரியேட் ஆகி, மிடில் லெக் ஸ்டம்பை தாக்கும் வகையில் சென்றது.

அஸ்வின் இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு எப்போதுமே சிறப்பாக வீசுவார். அவரின் விக்கெட் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் இடக்கை பேட்ஸ்மேன்கள்தான் இருப்பர். ஆனால், இங்கே அவரால் இடக்கை பேட்ஸ்மேனுக்கு இயல்பாக ஆஃப் ஸ்பின்னர் ஏற்படுத்தும் ஸ்பின்னை கூட ஏற்படுத்த முடியவில்லை. இதனால், ஸ்டோக்ஸ் சிரமமேயின்றி அஸ்வினை எதிர்கொண்டார். இறங்கி வந்து லாங் ஆஃபில் சிக்சர் அடித்தார். ஸ்வீப் ஆடி பவுண்டரி அடித்தார்.

அஸ்வினையே இப்படி அடித்தார் என்றால் ஷபாஸ் நதீமை சொல்லவா வேண்டும்? வெளுத்தெடுத்துவிட்டார். நதீமின் ஓவரில் தொடர்ந்து இரண்டு ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார். முதல் செஷன் முழுவதுமே ஸ்டோக்ஸ்தான் ஆதிக்கம் செலுத்தினார். ஜோ ரூட்டும் அவருக்கு செகண்ட் ஃபிடிலாகவே ஆடிக்கொண்டிருந்தார். முதல் செஷனில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 92 ரன்களை எடுத்தது. இதில் 63 ரன்களை ஸ்டோக்ஸே எடுத்திருந்தார். ரூட் 150 ரன்களை கடந்திருந்தார்.

முதல் செஷனில் அஸ்வின், புஜாரா இருவருமே ஸ்டோக்ஸுக்கு இரண்டு கடினமான கேட்ச்களை ட்ராப் செய்திருந்தனர். இன்னும் கொஞ்சம் முயன்று அந்த கேட்ச்களை பிடித்திருந்தால் ஆட்டம் முதல் செஷனிலேயே இந்தியா பக்கம் திரும்பியிருக்கும்.

இந்திய அணியினரின் பந்துவீச்சை வெளுத்தெடுத்த ஜோ ரூட், ஸ்டோக்ஸ்... இன்னிங்ஸ் வெற்றிக்கு இலக்கு? #INDvENG

இரண்டாவது செஷனிலும் தனது அதிரடியை தொடங்கிய ஸ்டோக்ஸின் விக்கெட்டை 82 ரன்களில் ஷபாஸ் நதீமே வீழ்த்தினார். லெக் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்தை முட்டி போட்டு தூக்கியடித்தார் ஸ்டோக்ஸ். அது ஸ்கொயர் லெகில் கேட்ச் ஆக மாறியது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஆடுகிறார்கள் என்பதால் டீப் ஸ்கொயர் லெகில் ஒரு ஃபீல்டரை கோலி எப்போதுமே நிறுத்தி வைத்திருந்தார். அதற்கான விளைவுதான் இந்த விக்கெட்.

ஸ்டோக்ஸ் 82 ரன்களில் அவுட் ஆனவுடன் போப் உள்ளே வந்தார். 200-ஐ நெருங்கிக்கொண்டிருந்த ரூட்டும் வேகமாக ரன்களை சேர்த்தார். அவருடைய பாணியிலேயே ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரிகளை அடித்துக்கொண்டிருந்தார். அஸ்வினின் ஓவரில் இதுவரை பெரிதாக ரிஸ்க்கே எடுக்காமல் ஆடிக்கொண்டிருந்த ரூட், அஸ்வினின் பந்தில் இறங்கி வந்து லாங் ஆனில் சிக்சர் அடித்து இரட்டை சதத்தை நிறைவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ரூட் அடிக்கும் 5–வது இரட்டை சதம். கடைசி 3 போட்டிகளில் இரண்டாவது இரட்டை சதம்.

ஜோ ரூட் இவ்வளவு பெரிய இன்னிங்ஸ் ஆடியதற்கு மிக முக்கிய காரணம் அவர் ஸ்பின்னை எதிர்கொண்ட விதம். ஸ்வீப், Front/Back foot ஷாட் அத்தனையையும் சிறப்பாக ஆடியிருந்தார். வேகப்பந்து வீச்சை விட ஸ்பின்னில்தான் அதிக ரன்களை அடித்தார். வேகப்பந்து வீச்சில் 3 பவுண்டரிகளை மட்டுமே அடித்திருந்த ரூட் ஸ்பின்னில் 16 பவுண்டரிகளை அடித்திருந்தார்.

இன்னொரு எண்டில் போப்பும் ஓரளவுக்கு நன்றாகவே ஆடிக்கொண்டிருந்ததால் இரண்டாவது செஷனில் இந்தியாவுக்கு ஸ்டோக்ஸின் விக்கெட் மட்டுமே கிடைத்திருந்தது. இரண்டாவது செஷனில் இங்கிலாந்து 99 ரன்களை சேர்த்தது.

மூன்றாவது செஷனின் தொடக்கத்திலேயே அஸ்வினின் பந்துவீச்சில் போப் lbw ஆகி வெளியேறினார். பந்து திரும்பும் என நினைத்து இவர் ஆட பந்து நேராகச் சென்றதால் lbw ஆனார். போப் 34 ரன்களில் வெளியேறியவுடன் பட்லர் வந்தார். போப் வெளியேறிய கொஞ்ச நேரத்திலேயே கேப்டன் ஜோ ரூட்டும் lbw ஆகி வெளியேறினார்.

நதீம் ஃபுல் லெந்தில் வீசிய ஒரு டெலிவரியை மடக்கி ஆட முற்பட்டு காலில் வாங்கியிருப்பார். கொஞ்சம் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் ட்ராக்காக இருந்திருந்தால் கூட இது லெக் ஸ்டம்பை மிஸ் ஆக்கியிருக்கும். ஆனால், பிட்ச்சில் ஒன்றுமே இல்லாததால் ரிவியூவிலும் ரூட்டால் தப்பிக்க முடியவில்லை. 218 ரன்களில் ரூட் வெளியேறினார்.

நதீமை அடித்து துவைத்த ரூட், ஸ்டோக்ஸ் இருவருமே அவரின் டெலிவரிலேயே அவுட் ஆனது வினோதம்.

போதுமான அளவுக்கு ரன்கள் சேர்த்துவிட்டதால் இனிமேல் அடித்து ஆடி டிக்ளேர் செய்துவிடுவார்கள் என எதிர்பார்க்கையில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தனர்.

பட்லர், இஷாந்த் சர்மாவிடம் 4 முறை அவுட் ஆகியிருக்கிறார். அந்த 4 விக்கெட்டுமே இன்கம்மிங் டெலிவரிகளில் வந்தவை. எனவே இஷாந்தை அழைத்த கோலி அப்படியே வீச வைத்தார். நியூபாலை எடுக்காமல் பழைய பந்தையே வைத்திருந்ததால் பந்தும் ரிவர்ஸ் ஸ்விங்குக்கு ஒத்துழைத்தது. பட்லரை குட் லெந்தில் ஸ்விங் ஆக்கி, டாப் ஆஃப் தி ஆஃப் ஸ்டம்பில் வீழ்த்தினார் இஷாந்த். அடுத்த பந்திலும் இதேமாதிரி ரீவைண்ட் செய்தது போல ஆர்ச்சரையும் போல்டாக்கினார்.

டெய்ல் எண்டர்களான ஜேக் லீச்சும் டாம் பெஸ்ஸும் சீக்கிரம் வீழ்ந்துவிடுவார்கள் என நினைக்கையில் அவர்கள் நின்று நிதானமாக ஆடி கடுப்பேற்றி வருகின்றனர். வாஷியின் ஓவரில் டாம் பெஸ் ரோஹித்துக்கு ஒரு எளிய கேட்ச்சை கொடுக்க, அதை ரோஹித் ட்ராப் செய்திருப்பார். வாஷி பட்லருக்கும் ஒரு எட்ஜ் ஆக்கியிருப்பார் அதையும் அம்பயர் அவுட் கொடுக்க தவறியிருப்பார். இரண்டு விக்கெட்டுகளுக்கான வாய்ப்பு வாஷிக்கு மிஸ் ஆனது.

கடைசி வரை ஜோ ரூட்டும் டிக்ளேர் செய்வது போல தெரியவில்லை. 600–க்கு மேல் தாண்டுவதுதான் ரூட்டின் இலக்காக இருக்கிறது. 555/8 என்ற நிலையில் இருக்கிறது இங்கிலாந்து. நாளை முதல் செஷனில் முடிந்தவரை ஆடிவிட்டுத்தான் இந்தியாவுக்கு முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து கொடுக்கும் என தெரிகிறது.

இந்தியாவை இன்னிங்ஸ் வெற்றி அடைந்துவிடலாம் என ஜோ ரூட் நினைப்பதாக தெரிகிறது. ரூட்டின் கனவு பலிக்குமா என்பது நாளை இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை வைத்தே தெரியவரும்.

banner

Related Stories

Related Stories