விளையாட்டு

“பயிற்சிக்காக தினமும் அதிகாலையில் 3 மணி நேர பயணம்” - மிடில் ஆர்டரில் சாதிக்க காத்திருக்கும் சூப்பர் ஹீரோ!

பன்ட்டின் திறமை மீது சந்தேகக்கண் கொண்டு பார்த்தவர்கள் கூட, இனி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பன்ட்டே தொடர வேண்டும் என கூறி வருகின்றனர்.

“பயிற்சிக்காக தினமும் அதிகாலையில் 3 மணி நேர பயணம்” - மிடில் ஆர்டரில் சாதிக்க காத்திருக்கும் சூப்பர் ஹீரோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

சிட்னியிலும் காபாவிலும் நான்காவது இன்னிங்ஸில் ஆடிய ஆட்டத்தின் மூலம் பன்ட் ஒரு சூப்பர் ஹீரோவாக உருவெடுத்துவிட்டார். பன்ட்டின் திறமை மீது சந்தேகக்கண் கொண்டு பார்த்தவர்கள் கூட, இனி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பன்ட்டே தொடர வேண்டும் என கூறி வருகின்றனர். ஒரு 23 வயது இளைஞனாக இருந்துகொண்டு இந்திய அணிக்கு அசாத்தியமான வெற்றிகளை பெற்றுத்தரும் அளவுக்கு இன்று அவர் உயர்ந்திருக்கிறார். இந்த இடத்திற்கு வருவதற்கு ஆரம்பகாலத்தில் அவர் செய்த முயற்சியும் உழைப்பும் மிகப்பெரியது.

"காபாவில் கடைசி நாள் ரன் சேஸின் போது பன்ட் காட்டிய அதிரடியையும், வெளிப்படுத்திய குணாதிசயத்தையும் நாங்கள் 2014–ல் ஒரு உள்ளூர் போட்டியிலேயே அவரிடம் பார்த்தோம். 19 வயதுக்குட்பட்டோருக்கான U19 அணிக்கும், டெல்லி அணிக்கும் நடைபெற்ற போட்டி அது. அதில் 133 பந்துகளில் 186 ரன்களை எடுத்திருப்பார் ரிஷப். எட்டு சிக்சர்களை விளாசித்தள்ளினார். அவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் இருந்தது. இயற்கையாகவே வலுவாக பவரான ஷாட்டுகளை அடிக்கும் திறன் உடையவராக இருந்தார்" என்கிறார் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான கீரன் மோர்.

பன்ட் செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கிடையாது. அவருடைய அப்பா ஹீரோ ஹோண்டாவில் மேனேஜராகவும், அம்மா ஒரு ஆசிரியையாகவும் இருந்தனர். உத்ரகாண்ட் மாநிலத்திலுள்ள ரூக்ரி எனும் நகரில்தான் இவர்கள் வசித்து வந்தனர். 5 வயதிலிருந்தே கிரிக்கெட்டின் மீது ஆர்வம் கொண்டு விளையாட தொடங்கி பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளிலும் பங்கேற்க தொடங்கியிருக்கிறார்.

பன்ட்டுக்கு 12 வயது இருக்கும்போது டெல்லியில் உள்ள அவரது உறவினர்கள் மூலம் Sonnet கிரிக்கெட் அகாடெமியில் U14 வீரர்களுக்கான தேர்வு நடக்கிறது என்கிற செய்தி தெரிய வந்திருக்கிறது. இந்த கிரிக்கெட் அகாடெமி மிகவும் பிரபலமானது. 1969–ல் இந்த அகாடெமி தொடங்கப்பட்டதிலிருந்து இங்கே பயிற்சி பெற்ற நிறைய வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியிருக்கின்றனர்.

அதிகாலை 3 மணிக்கே ரூக்ரியிலிருந்து தனது அம்மாவுடன் பேருந்தில் கிளம்பி 6 மணி நேர பயணத்துக்கு பிறகு டெல்லியை அடைந்து Sonnet கிரிக்கெட் அகாடெமிக்கு சென்ற பன்ட், அங்கே சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். 'அவரின் திறமை என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. பன்ட்டை தொடர்ந்து பயிற்சிக்கு அழைத்து வாருங்கள்' என அவரது அம்மாவிடம் கூறியிருக்கிறார் Sonnet பயிற்சியாளர் தரக் சின்ஹா.

டெல்லியில் தங்கியிருந்தபடி Sonnet–ல் நடந்த 45 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்றிருக்கிறார் பன்ட். அதன்பிறகு தொடர் பயிற்சிகளின்போது இரவு நேரம் தங்கவேண்டியிருந்தால் ஒரு குருத்வாராவில் பன்ட்டும் அவரது அம்மாவும் தங்கியிருந்து பயிற்சிக்கு சென்றிருக்கின்றனர். வார இறுதி நாட்களில் மட்டும் சொந்த ஊருக்கு வந்து வீட்டில் தங்கியிருக்கின்றனர். Sonnet–ல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடுமையான பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

'இந்தியாவில் பேருந்தில் பெண்கள் இரவு நேர பயணம் செய்வது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை. ஆனாலும், என் அம்மா என்னுடன் எனக்காக பேருந்தில் வருவார். பேருந்தில் என்னை தூங்கச் சொல்லிவிட்டு என் அம்மா தூங்காமல் இருப்பார்' என அந்த நாட்களை பற்றி நினைவுகூர்கிறார் ரிஷப்.

'ஆட்டத்தின் எல்லா நுணுக்கங்களையும் கற்றுத்தேற வேண்டும் என்பதில் பன்ட் உறுதியாக இருந்தார். நீ சிறந்தவன் என்று உன்னை நீயே நம்பினால், நீ எப்போதும் சிறந்தவனாகத்தான் இருப்பாய்' என்பதை மட்டும்தான் நான் பன்ட்டுக்கு அறிவுரையாக கூறுவேன் என்கிறார் தரக் சின்ஹா.

Sonnet–ல் ரிஷப் சிறப்பாக கிரிக்கெட் ஆடியதால் அவருக்கு டெல்லியில் உள்ள ஏர் ஃபோர்ஸ் பள்ளியில் இடம் கிடைத்திருக்கிறது. இதற்காக, அவரின் குடும்பமே டெல்லிக்கு இடம்பெயர்ந்தது. ஆனால், அவரால் டெல்லி ஜுனியர் அணியில் இடம்பெற முடியவில்லை. தரக் சின்ஹாதான் அப்போது ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷனில் இயக்குநராக இருந்திருக்கிறார்.

“பயிற்சிக்காக தினமும் அதிகாலையில் 3 மணி நேர பயணம்” - மிடில் ஆர்டரில் சாதிக்க காத்திருக்கும் சூப்பர் ஹீரோ!

சின்ஹா மூலம் ராஜஸ்தான் அணிக்காக ஆடும் வாய்ப்பு பன்ட்டுக்கு கிடைத்துள்ளது. வேறு நகரத்தை சேர்ந்தவர் என்பதால் கொஞ்ச நாளிலேயே ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், இப்போது அவர் சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்திருந்ததால் டெல்லியின் U19 அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.

அப்படியே முன்னேறி U19 இந்திய அணிக்கும் தேர்வானார். உலகக்கோப்பையில் ஒரு ஆட்டத்தில் 28 பந்துகளில் 74 ரன்களை அடித்திருப்பார். அந்தப் போட்டி முடிந்த சில நாட்களிலேயே ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக ரூ.1.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். முதல்தர போட்டியிலும் முச்சதம் அடித்து மிரட்டினார். 19 வயதிலேயே அவருக்கு இந்திய டி20 அணியிலும் இடம் கிடைத்தது.

2017 ஐ.பி.எல் நடந்து கொண்டிருக்கும் போது பன்ட்டின் தந்தை நெஞ்சு வலியால் உயிரிழந்தார். தந்தையின் இறுதிச்சடங்கில் கூட கலந்துகொள்ளாமல் டெல்லி அணிக்காக ஆடினார் பன்ட். இரண்டு நாட்களுக்கு பிறகு நடந்த போட்டியில் பன்ட் ஒரு அரைசதம் அடித்திருப்பார். அதுதான் அவரின் தந்தைக்கு அவர் செய்த உண்மையான அஞ்சலியாக அமைந்தது.

2017 ஐ.பி.எல் க்கு பிறகு பெங்களூருவில் நேஷனல் கிரிக்கெட் அகாடெமியில் பண்ட் அதிக நேரத்தை செலவிட்டார். அப்போது பயிற்சியின்போது பன்ட்டுக்கு அம்பயராக நிற்க பயப்படுவார்கள். அவரின் அடி அப்படி இருக்கும். பன்னீர் பரோட்டாக்களை பன்ட் விரும்பி சாப்பிடுவார். ஆனால், NCA க்கு வந்த பிறகு அதையும் குறைத்துக்கொண்டார்.

2018 ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ்க்கு எதிராக 128 ரன்களை அடித்து மிரட்டியிருந்தார். அதே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமானார். அடில் ரஷித் வீசிய இரண்டாவது பந்திலேயே இறங்கி வந்து சிக்சர் அடித்து முதல் ரன்னை பதிவு செய்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3–வது டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் சதமடித்தார். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் சதமடித்தார். இந்தியாவின் வேறு எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத சாதனை இது.

இப்படியான சாதனைகளுக்குப் பிறகும் தேர்வாளர்கள் பன்ட்டின் குறைகள் மீதுதான் அதிக கவனங்களை செலுத்தினர். அவரின் கீப்பிங் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. திடிரென டெஸ்ட் போட்டிகளிலிருந்து கழட்டிவிடப்பட்டார். டி20 போட்டிகளிலிருந்து கழட்டிவிடப்பட்டார். இத்தனை தடைகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்திய அணி வெற்றி பெற காரணமாக அமைந்தார்.

2018 க்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் பன்ட்டின் ஆவரேஜ் 43.52. கீப்பர்-பேட்ஸ்மேன் லிஸ்டில் இது இரண்டாவது சிறந்த ஆவரேஜ். 'நீங்கள் பன்ட்டின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும். அவரை சிறந்த கீப்பர் பேட்ஸ்மேனாக மாற்ற வேண்டுமெனில் அவருக்கு எல்லா போட்டிகளிலும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும். அவர் ஆடம் கில்கிறிஸ்ட்டை போல நம்பர் 5-6 ல் இறங்கி பல மேஜிக்குகளை செய்வார்' என்கிறார் தரக் சின்ஹா.

banner

Related Stories

Related Stories