விளையாட்டு

கண்ணீர் விட்ட சச்சின்.. தமிழக ரசிகர்கள் ஆற்றிய அந்தச் செயல்.. 1999 #IndvPak டெஸ்ட் போட்டி சுவாரஸ்யங்கள்!

சச்சினின் வாழ்க்கையில் மிக முக்கியமான இன்னிங்ஸ் இது. வென்றே தீர வேண்டும் என்ற வெறியோடு களமிறங்கி ஆடியிருந்தார்.

கண்ணீர் விட்ட சச்சின்.. தமிழக ரசிகர்கள் ஆற்றிய அந்தச் செயல்.. 1999 #IndvPak டெஸ்ட் போட்டி சுவாரஸ்யங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

20 வருடங்களுக்கு முன்பு இதேநாளில் சென்னை சேப்பாக்கத்தில் வைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஒரு மகத்தான டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தற்போதைய இந்திய அணி காபாவில் செய்ததை போல எந்த சாதனைகளும் நிகழ்த்தப்படவில்லை. ஏன் இந்திய அணி அந்தப் போட்டியில் வெற்றியைக் கூட பெறவில்லை. இருப்பினும் காலம்காலமாக நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு பல சம்பவங்கள் அந்தப் போட்டியில் நடந்தது.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1999 -ல் பாகிஸ்தான் அணி இந்தியா வந்திருந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு எற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.

பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியால் 238 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் சார்பில் முகம்மது யூசுப்பும் மோயின் கானும் மட்டுமே அரைசதம் எடுத்திருந்தனர். இந்தியா சார்பில் அனில் கும்ப்ளே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அட்டாகசப்படுத்தியிருந்தார்.

இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி பலமிக்க பௌலிங் லைன் அப்பையே கொண்டிருந்தது. வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், சக்லைன் முஷ்டக், நதீம் கான், அஃப்ரிடி என பாகிஸ்தான் வலுவான பௌலர்களை கொண்டிருந்தது. எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் பௌலர்கள் சிறப்பாக வீசினர். இந்தியா சார்பிலும் கங்குலியும் ட்ராவிட்டும் மட்டுமே அரைசதம் அடித்தனர். ஆஸ்தான வீரரான சச்சின் அவர் சந்தித்த மூன்றாவது பந்திலேயே டக் அவுட் ஆனார்.

சக்லைன் முஷ்டக் வீசிய ஒரு தூஷ்ராவில் இறங்கி வந்து லாங் ஆனில் அடிக்க முயன்று எட்ஜ்ஜாகி கேட்ச் கொடுத்திருப்பார். சச்சினிடமிருந்து 3வது பந்திலேயே இப்படி ஒரு மோசமான ஷாட்டை யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்திய அணியும் 254 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெறும் 16 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இந்திய அணிக்கு 271 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கண்ணீர் விட்ட சச்சின்.. தமிழக ரசிகர்கள் ஆற்றிய அந்தச் செயல்.. 1999 #IndvPak டெஸ்ட் போட்டி சுவாரஸ்யங்கள்!

மூன்றாவது நாளில் கடைசி ஒரு மணி நேரத்தில் இந்திய அணி பேட் செய்ய ஆரம்பித்தது. சடகோபன் ரமேஷும் லெக்ஷ்மணும் வந்த வேகத்தில் வெளியேற இந்திய அணி 6-2 என்ற மோசமான நிலையில் இருந்தது. இந்த சமயத்தில் சச்சினும் ட்ராவிட்டும் நின்று மெதுவாக அந்த செஷனை மேலும் விக்கெட் விடாமல் முடித்துவிட்டனர்.

நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. சச்சின் ஒரு பக்கம் உறுதியாக ஆடிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தன. ட்ராவிட், அசாருதீன், கங்குலி ஆகியோர் சீக்கிரமாக வெளியேறிவிட 80-90 ரன்களுக்குள்ளேயே இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆட்டம் முழுமையாக பாகிஸ்தான் பக்கம் இருந்தது.

முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன விரக்தியில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் ஆட செல்லும்போது வெற்றி பெறாமல் வெளியே வரக்கூடாது என்கிற உறுதியோடுதான் சச்சின் சென்றிருக்கிறார். விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தாலும் சச்சின் மட்டும் அந்த உறுதியை கடைசி வரை கைவிடவில்லை. 'நயன் மோங்கியாவிடம் பெரிய ஷாட்டுக்கு முயற்சிக்க வேண்டாம். நின்று ஆடுங்கள்.' என்று கூறிவிட்டேன் என தனது சுயசரியையில் குறிப்பிட்டிருக்கிறார் சச்சின்.

சச்சினின் வழிகாட்டுதலில் நயன் மோங்கியாவும் சிறப்பாக ஆட ஆட்டம் மெதுமெதுவாக இந்தியா பக்கம் திரும்பத் தொடங்கியது. இந்நேரத்தில் மற்றுமொரு பிரச்சனையாக சச்சினுக்கு பயங்கரமான முதுகுவலி ஏற்பட்டது. நிமிர்ந்து கூட நிற்கமுடியாமல் அவதிப்பட்டிருக்கிறார் சச்சின். இந்த நேரத்தில் அரைசதம் கடந்த நிலையில் மோங்கியா தேவையே இல்லாமல் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயற்சி செய்து அவுட் ஆனார். பாகிஸ்தானின் கை மீண்டும் ஓங்கத் தொடங்கியது. சச்சினுக்கு முதுகுவலி இன்னமும் அதிகரிக்க தொடங்கியது.

'என்னால் நகரவே முடியவில்லை. உடம்பு முழுவதும் தசைப்பிடிப்பு உண்டானதை போல உணர்ந்தேன்' என சச்சின் இதைப்பற்றி குறிப்பிடுகிறார். அன்றைய நாள் முடிவதற்கு இரண்டு மணி நேரம் இருந்திருக்கிறது. ஆனால், அவ்வளவு நேரம் தன்னால் பேட்டிங் ஆட முடியாது என்பதை உணர்ந்த சச்சின் கவுன்ட்டர் அட்டாக் செய்ய முடுவெடுத்தார். 'இதற்கு மேல் என்னால் முடியாது. நான் பேட்டை சுற்றப் போகிறேன்' என சுனில் ஜோஷியிடம் கூறியிருக்கிறார் சச்சின். தொடர்ந்து பவுண்டரிகளை அடித்தார். அடுத்த 6 ஓவர்களில் மட்டும் 36 ரன்கள் வந்தது. ஆட்டம் முழுவதுமே இந்தியா பக்கம் வந்துவிட்டது. இந்தியா வெல்வதற்கு 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அந்நேரத்தில்தான் சக்லைன் முஷ்டக் வீசிய தூஷ்ராவில் சச்சின் மீண்டும் பெரிய ஷாட்டுக்கு முயல எட்ஜ்ஜாகி வாசிம் அக்ரமிடம் கேட்ச்சை கொடுத்தார். அவ்வளவு நேரம் ஒற்றை மனிதனாக முதுகு வலியோடு போராடிக்கொண்டிருந்த சச்சின் வெளியேறிவிட ஆட்டமும் முடிந்தது. பாகிஸ்தான் வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

'இன்னும் ஒரு விக்கெட் எடுத்துவிட்டால் வெற்றி நமக்கே' என சச்சின் ஆடும்போது வாஷிம் அக்ரம் தொடர்ந்து தனது பௌலர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

சச்சினின் வாழ்க்கையில் மிக முக்கியமான இன்னிங்ஸ் இது. வென்றே தீர வேண்டும் என்ற வெறியோடு களமிறங்கி ஆடியிருந்தார். 'Non Striker எண்ட்டில் இருக்கும்போது ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு வீசப்படும் பந்தை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதை பற்றிக்கூட யோசித்துக்கொண்டே இருந்தேன். முழுவதுமாக பேட்டிங்கை பற்றி மட்டுமே யோசித்ததால், என்னை சுற்றி எல்லாமே மங்கலாகவே தெரிந்தது. தோற்றவுடன் உலகம் இருண்டுவிட்டதை போல இருந்தது. தோல்வி வலியோடும் முதுகு வலியோடும் சேர, டிரெஸ்ஸிங் ரூமில் கண்ணீர் விட்டு அழுதேன்' என சச்சின் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

சச்சினின் முக்கியமான இன்னிங்ஸுக்காக மட்டுமில்லை; வெங்கடேஷ் பிரஷாத்தின் வெறித்தனமான ஸ்பெல்லுக்காகவும் இந்த போட்டி ஞாபகம் வைக்கப்பட வேண்டும். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் பௌலர்கள் இவரை அடித்து துவைத்திருப்பார்கள். ஒரு விக்கெட் கூட எடுத்திருக்கமாட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் 10 ஓவர் வீசி 5 ஓவரை மெய்டனாக்கி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியிருப்பார்.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் என்றாலே வீரர்கள் ஆடுவதை பல மடங்கு எனர்ஜியோடு அரசியல்வாதிகளும் புகுந்து விளையாடுவார்கள். இந்தப் போட்டிக்கு முன்பும் பாகிஸ்தான் இந்தியா வருவதற்கு எதிராக சிவசேனா போராட்டங்களை செய்தது. டெல்லி கிரிக்கெட் க்ரவுண்டுக்குள் இறங்கி பிட்ச்சில் குழிகளை தோண்டி சேதப்படுத்தியது. 'சென்னையில் போட்டி நடைபெற்றால் சிவசேனா தொண்டர்கள் கூட்டத்திற்குள் பாம்புகளை வீசுவார்கள்' என பகிரங்கமாகவே சிவசேனா மிரட்டல் விடுத்தது.

போட்டி நடைபெறும்போது வட இந்திய ரசிகர் கூட்டம், பாகிஸ்தானுக்கு எதிராக முழங்கியதால் வெளியேற்றப்பட்டதாகவும் செய்திகளை பார்க்க முடிந்தது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்காக தமிழக ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். ஒரு மேம்பட்ட அறிவைப் பெற்ற சமூகமாக, விளையாட்டின் ஆன்மாவை உணர்ந்து தமிழக ரசிகர்கள் ஆற்றிய அந்தச் செயல் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு போற்றப்படும்.

banner

Related Stories

Related Stories