விளையாட்டு

36 ஆல் அவுட், மிஷன் மெல்பெர்ன், 300 சபாஷ், காபா டெஸ்ட்: டிரெஸ்ஸிங் ரூம் சுவாரஸ்யம் பகிர்ந்த ஸ்ரீதர்!

இந்த தொடர் மட்டுமில்லை இந்த ஆஸி தொடருக்கு இந்தியா கிளம்பிய கதையுமே ரொம்பவே பரபரப்பானதாகவே இருந்திருக்கிறது.

36 ஆல் அவுட், மிஷன் மெல்பெர்ன், 300 சபாஷ், காபா டெஸ்ட்: டிரெஸ்ஸிங் ரூம் சுவாரஸ்யம் பகிர்ந்த ஸ்ரீதர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் ட்ராஃபி தொடரின் போது நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் பேட்டி அளித்து வருகிறார். அவர் பேசியதிலிருந்து சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே..

இந்த தொடர் மட்டுமில்லை இந்த ஆஸி தொடருக்கு இந்தியா கிளம்பிய கதையுமே ரொம்பவே பரபரப்பானதாகவே இருந்திருக்கிறது.

'ஆஸ்திரேலியா செல்வதற்காக துபாயில் இருக்கும் போது, கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வீரர்களின் குடும்பங்களுக்கு அனுமதியில்லை' என ஆஸி கூறிவிட்டது. நிறைய வீரர்களின் குடும்பங்கள் ஆஸி செல்வதற்காக ஏற்கனவே துபாய் வந்துவிட்டதால் அந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. அந்த சமயத்தில்தான் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி 'வீரர்களுடைய குடும்பங்களை அனுமதிக்கவில்லையெனில் இந்த தொடரையே புறக்கணிப்போம்' என்று கறாராக சொல்லிவிட்டார்.

அதன் பிறகுதான், ஆஸி கிரிக்கெட் போர்டு இரவோடு இரவாக வீரர்களின் குடும்பங்களுக்கும் அனுமதி கொடுத்து, தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது என விவரிக்கும் ஸ்ரீதர், அடுத்ததாக போட்டியின்போது டிரெஸ்ஸிங் ரூமில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பேசினார்.

36 ஆல் அவுட், மிஷன் மெல்பெர்ன், 300 சபாஷ், காபா டெஸ்ட்: டிரெஸ்ஸிங் ரூம் சுவாரஸ்யம் பகிர்ந்த ஸ்ரீதர்!

'டிரெஸ்ஸிங் ரூமில் பயிற்சியாளர்களின் அறையில் என்னுடன் ரவி சாஸ்திரி, பரத் அருண், விக்ரம் ரத்தோர் ஆகிய நான்கு பேரும்தான் அமர்ந்து ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருப்போம். வீரர்கள் எப்போதாவதுதான் அந்த அறைக்கு வருவார்கள் எங்களுக்குள் பதற்றமாக இருந்தாலும் வீரர்கள் வரும்போது மட்டும் பதற்றத்தை வெளிப்படுத்தாமல் கூலாக இருப்பது போல் காட்டிக்கொள்வோம். அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் போது நான் ரிஷப் பன்ட்டை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த பிட்ச்சில் கீப்பிங் பயிற்சி கொடுக்க சென்றுவிட்டேன்.

ரிஷப்பும் நானும் பயிற்சியில் இருக்கும் போது திடீரென மைதானத்துக்குள் இருந்து ரசிகர்களின் சத்தம் அதிகமாகக் கேட்டது. எங்களுக்கு எதுவுமே புரியவில்லை. உடனே மைதானத்துக்கு திரும்பி வந்து பார்த்தால், இந்திய அணி ஆல் அவுட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள் அணி 36 க்கு ஆல் அவுட் ஆகிவிட்டது'

'அந்தப் போட்டியில் வீரர்கள் நிறைய கேட்ச்களை ட்ராப் செய்திருந்ததால் ஒரு ஃபீல்டிங் கோச்சாக எனக்கும் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. ஆனால், அந்த தோல்வியையும் சோர்வையும், அந்த டிரெஸ்ஸிங் ரூமோடு விட்டுவிட்டுதான் நாங்கள் கிளம்பினோம். வீரர்களை மேலும் அழுத்த்தில் தள்ளிவிடக்கூடாது என்பதற்காக மறுநாள் ப்ளான் செய்திருந்த பயிற்சியையும் ரத்து செய்துவிட்டோம். அன்றைய நாள் வீரர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து டீம் டின்னர் ஏற்பாடு செய்தோம். ஒரு சில கேம்களை நடத்தி வீரர்களை உற்சாகப்படுத்தினோம். ஒருபுறம் மற்ற வீரர்களை உற்சாகப்படுத்தினாலும் இன்னொருபுறம் பயிற்சியாளர் குழு, ரஹானே, கோலி எல்லாம் சேர்ந்து 'Mission Melbourne' என்னும் திட்டத்தை சீரியஸாக திட்டமிட்டிருக்கின்றனர்.

'Wear this 36 like a badge. இந்த 36 தான் இந்த அணியை சிறப்பானதாக மாற்றப்போகிறது' என ரவிசாஸ்திரி தீர்க்கமாக கூறினார். அங்கே இருந்துதான் 'Mission Melbourne' திட்டம் தொடங்கியது. 36 ஆல் அவுட்டுக்கு பிறகு எல்லாரும் பேட்டிங்கை பலப்படுத்துவது குறித்து யோசிப்பார்கள். ஆனால், நாங்கள் கோலிக்கு பதில் ஜடேஜாவை உள்ளே கொண்டு வந்து பௌலிங்கை பலப்படுத்த முடிவு செய்தோம்'

'டாஸ் வென்று பேட்டிங்கைத்தான் எடுக்க வேண்டும் என மெல்பர்னில் நினைத்தோம். ஆனால், டாஸ் தோற்று பௌலிங் எடுக்க வேண்டியதாயிற்று. இருந்தாலும், பிட்சில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்ததால் பௌலிங் எடுபடும் என ரவி சாஸ்திரியிடம் கூறினேன். உடனே ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்ற ரவி சாஸ்திரி அஸ்வினை 10-வது ஓவருக்குள் பந்தவீச வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படியே அஸ்வின் வீசி விக்கெட்டுகளை எடுத்தார். ரஹானே அந்தப் போட்டியில் காலை நேரத்தில் ஆஸியின் பெஸ்ட் பௌலிங் அட்டாக்கை எதிர்கொண்டு அடித்த சதம் மிகச்சிறப்பானதாக அமைந்து, அந்தப் போட்டியை வென்றோம்'

'மெல்பர்னை விட்டு சிட்னி செல்லும்போது குவாரன்டைன் விதிமுறைகள் இன்னும் கடுமையாகியது. சவால்கள் இன்னும் அதிகமானது. 5 வது நாளில் முதல் நாளில் எப்படி பேட்டிங் ஆடுவோமோ அப்படியே ஆடுவோம். முடிவுகளை பற்றி பின்னால் யோசித்துக்கொள்ளலாம் என கூறிவிட்டோம். ஒரு கட்டத்தில் பன்ட் பேட்டிங் ஆடும்போது வெற்றியடைந்து விடலாம் என நினைக்கும்போதே அவர் அவுட் ஆகிவிட்டார்.

பன்ட் பேட்டிங் ஆடும்போது எதிரணிக்கு மட்டுமில்லை எங்களுக்குமே டென்ஷனாகத்தான் இருக்கும். அவர் எந்த நேரத்தில் எப்படி ஆடுவார் என்பதை கணிக்கவே முடியாது. ஆனால், அந்த அணுகுமுறைதான் அவரை சிறந்த வீரராக்கியிருக்கிறது. பன்ட்டின் அவுட்டிற்கு பிறகு, அஸ்வினும் விஹாரியும் ஆடும்போதுதான் உச்சகட்ட டென்ஷன் உருவானது. இருவரும் காயத்தோடு ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொரு பந்தை எதிர்கொண்டு முடிக்கும்போதும் ரவிசாஸ்திரி சபாஷ்... சபாஷ்... என சொல்லிக்கொண்டே இருந்தார். குறைந்தப்பட்சம் 300 முறையாவது சபாஷ் சொல்லியிருப்பார். அந்தப் போட்டியையும் நாங்கள் சிறப்பாக செய்தோம்'

'ஒரு அணியாக எங்களின் முழு ஒற்றுமையையும் இந்த தொடரில் வெளிப்படுத்தினோம். தனிப்பட்ட ஒரு வீரர் என்றில்லாமல் எல்லா வீரர்களுமே சிறப்பாக ஆடியிருந்தனர். குறிப்பாக, சிராஜ் மிகப்பெரிய இழப்புக்கு பிறகு மீண்டு வந்து சிறப்பாக செயல்பட்டார். அவர் இந்தியா-A ஆடும்போதே சார்... 'இப்போது இந்திய அணிக்கு வந்துவிடவா?' என ஒவ்வொரு சீரிஸின் போதும் ஆர்வமாக கேட்டுக்கொண்டே இருப்பார். இந்த முறை தேர்வாளர்களும் அவருக்கு சரியான வாய்ப்பை கொடுக்க, அதை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டார்.'

'நிதாஷ் ட்ராஃபியில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்சரின் போது நாங்கள் எல்லாம் மைதானத்துக்குள் ஓடிச்சென்று கொண்டாடினோம். அதன்பிறகு இந்த காபா டெஸ்ட்டில்தான் மைதானத்துக்குள்ளே ஓடிச்சென்று வெற்றியைக் கொண்டாடினோம்' என அசாத்தியமான வெற்றியின் பூரிப்பு விலகாமல் பேசி முடிக்கிறார் ஸ்ரீதர்.

banner

Related Stories

Related Stories