இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பிரிஸ்பேன் டெஸ்ட்டின் நான்காவது நாள் ஆட்டம் முடிவடைந்திருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய ஆஸிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் முகம்மது சிராஜ். அனுபவமற்ற பௌலிங் அட்டாக்கை வைத்துக்கொண்டு காபா மைதானத்தில் ஆஸி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஒன்றுமே செய்ய முடியாது என பரவலாக வைக்கப்பட்ட முன் விமர்சனங்களை பொய்யாக்கி சிராஜ் எப்படி சாதித்தார்?
ஐ.பி.எல் போட்டிகளின்போது, 'குட்டி உமேஷ்' 'குட்டி டிண்டா' என ட்ரோல் செய்யப்பட்டு ஒருவழியாக இந்த சீசனில் நியு பாலில் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு பெர்ஃபார்ம் செய்திருந்தார். உள்ளூர் போட்டிகளின் ரெக்கார்ட் மற்றும் இந்த ஐ.பி.எல் சீசனின் விளைவாக ஆஸி தொடருக்கான டெஸ்ட் அணியில் சிராஜின் பெயரும் இடம்பெற்றது. இஷாந்த், பும்ரா, உமேஷ் யாதவ், முகம்மது ஷமி என சீனியர் வீரர்கள் நிறைய பேர் இருந்ததால் சிராஜுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்கிற நிலையே இருந்தது. ஆனால், சீனியர் ப்ளேயர்கள் வரிசையாக காயமடைய, இரண்டாவது போட்டியிலேயே சிராஜுக்கு வாய்ப்பு கிடைத்தது. அறிமுகமான மெல்பர்ன் டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தொடரின் முடிவை நிர்ணயிக்கப்போகும் இந்த பிரிஸ்பேன் டெஸ்ட்டில் சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களின் கூடாரமே காயத்தால் காலியாகியிருந்தது. 'முடிஞ்சா பிரிஸ்பேன் வந்து ஜெயிச்சு பாருங்க' என்கிற அளவுக்கு ஆஸியும் ஏகத்துக்கும் பில்டப் கொடுத்திருந்தது. கடந்த 32 வருடத்தில் இங்கே ஒரு போட்டியை கூட தோற்றதில்லை என ஆஸியின் பில்டப்களுக்கும், ஓரளவுக்கு வலுவான காரணம் இருக்கவே செய்தது.
மேலும், இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கும் நன்றாக ஒத்துழைக்கும் எனக் கூறப்பட்டது. இப்படிப்பட்ட மைதானத்தில்தான் இந்திய அணி பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், அஸ்வின் என எந்த சீனியர் பௌலருமே இல்லாமல் களமிறங்கியது. இந்த போட்டியின் சீனியர் பௌலர் என்று பார்த்தால், இரண்டே இரண்டு போட்டிகளில் ஆடியிருக்கும் சிராஜ்தான். அறிமுகமாகி 3–வது போட்டியிலேயே இந்திய அணியின் மெயின் பௌலர் என மிக முக்கிய பொறுப்பு சிராஜுக்கு கிடைத்தது. அதை மிகச்சரியாக உணர்ந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் சிராஜ்.
முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முக்கியமான இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார். இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸியின் ஹேசல்வுட் 5 விக்கெட் ஹால் எடுத்திருந்தார். இந்தியா சார்பில் இப்போது சிராஜ் 5 விக்கெட் ஹால் எடுத்துள்ளார்.
ஆஸியினர் இந்தியாவின் டெய்ல் எண்டர்களுக்கு ஷார்ட் பாலையும் பவுன்சரையும் வீசி கடுப்பேற்றினர். அப்படி பாடிலைனில் வீசப்பட்ட பந்துகளையும் கூட சிறப்பாக சமாளித்து அஸ்வின், விஹாரி, வாஷீ, ஷர்துல் தாகூர் ஆகியோர் சம்பவம் செய்தது வேறு கதை. இதே ஷார்ட் பால்களைத்தான் இன்று ஆஸியின் முக்கிய பேட்ஸ்மேன்களுக்கு எதிரான ஆயுதமாக திருப்பினார் சிராஜ்.
காபா பிட்ச்சில் நாள் செல்ல செல்ல வெடிப்புகள் உண்டாகும். அந்த வெடிப்புகள் உண்டான பகுதிகளில் பந்து பிட்ச் ஆகும் போது uneven பவுன்ஸ், அதாவது சில நேரங்களில் பந்து நன்கு எழும்பியும், சில நேரங்களில் தாழ்வாகவும் பவுன்ஸ் கிடைக்கும் என கூறப்பட்டது. இது ரெட் பால் ஸ்பெஷலிஸ்ட்டான சிராஜுக்கு வெகுவாக உதவியது. லபுஷேன், ஸ்மித், ஹேசல்வுட் என மூவருக்கும் வீசப்பட்ட பந்துகள் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் பவுன்ஸாகி வந்தவை. ஃபுல் லென்த் டெலிவரிகளையும் ஷார்ட் பிட்ச் டெலிவரிகளையும் மாற்றிமாற்றி வீசி செட் செய்து விக்கெட் எடுத்தார்.
மேத்யூ வேட், குட் லென்த்துக்கும் ஃபுல் லென்த்துக்கும் இடைப்பட்ட லெந்தில் பிட்ச்சான பந்திலும், ஸ்டார்க் ஃபுல் லென்த்தில் பிட்ச்சான பந்திலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கேமரூன் க்ரீனும் ஒரு ஃபுல் லென்த் டெலிவரியில் சிராஜிடமே கேட்ச்சை கொடுத்தார். அதை சிராஜ் டிராப் செய்யாவிடில் கூடுதலாக ஒரு விக்கெட்டும் கிடைத்திருக்கும்.
அனுபவமே இல்லாத பௌலிங் அட்டாக்கை முன்நின்று வழிநடத்தி சிறப்பாக பெர்ஃபார்ம் செய்து மிரட்டியிருக்கிறார் சிராஜ்.
இந்திய அணிக்கே இந்த தொடர் இதுவரை பார்த்திராத சவால்களை கொடுத்த தொடர். ஆனால், அதைவிடவும் அதிகமான சவால்களும் சிரமங்களும் சிராஜுக்கே உண்டானது. ஆஸியில் பயிற்சியில் இருக்கும்போதுதான் சிராஜின் தந்தை உயிரிழந்தார். அந்த துக்கத்தையும் அடக்கிக்கொண்டு, இந்திய அணிக்காக ஆட வேண்டியிருந்தது. கடந்த போட்டியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது தன் தந்தையின் நினைவினால் கண்ணீர் விட்டிருந்தார் சிராஜ். இதை உலகமே பார்த்து நெகிழ்ந்தது. ஆனால், மனிதாபிமானமற்ற சிலர் அதே டெஸ்ட்டில் சிராஜ் மீது இனவெறி தாக்குதலில் ஈடுபட்டு சிராஜை மேலும் உளவியல்ரீதியாக அசைத்துப்பார்க்க முற்பட்டனர். இந்த டெஸ்ட்டிலும் கூட இந்த இழிசெயல் தொடர்ந்ததாகவே தெரிகிறது. இது அத்தனையையும் தாண்டித்தான் 5 விக்கெட் ஹால் எடுத்து சிராஜின் கைகள் இன்று ஓங்கியிருக்கிறது.
தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடி வருகிறார். முதலில் வாஷிங்டன் சுந்தர் நெட் பௌலராகத்தான் சென்றிருந்தார், மேலும் அஸ்வினுக்கு அடுத்த இடத்தில் குல்தீப் யாதவ்தான் இருந்தார் என்பதால் வாஷீ டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆவார் என்ற நம்பிக்கை யாருக்குமே இருக்கவில்லை. ஒரே ஒருவரை தவிர, அது வாஷியின் அப்பா. ஐ.பி.எல் தொடரிலிருந்து நேராக ஆஸிக்கு வாஷிங்டன் சுந்தர் பறக்கும்போதே, இந்த முறை அவன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவான் பாருங்கள் என தனது குடும்பத்தினர் அனைவரிடமும் கூறியிருக்கிறார். ஸ்குவாடிலேயே இல்லாத நெட் பௌலராக சென்றிருக்கும் ஒரு வீரரை அணியில் இடம்பிடிப்பார் என்று சொல்லுமளவுக்கான நம்பிக்கை யாருக்கு வரும்? இது தந்தைகளுக்கு மட்டுமே வாய்க்கப்பெற்ற நெஞ்சுரம்.
தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்ட செய்தியைச் சொல்லும்போதே நம்மை ஒரு VAO ஆகவோ, பேங்க் மேனஜராகவோ கற்பனை செய்யத் தொடங்கும் நம்பிக்கை இந்த உலகத்தில் தந்தையரை தவிர வேறு யாரிடமிருந்து வெளிப்பட முடியும்? பிள்ளைகளின் கனவு அவர்களுடையது மட்டுமல்ல அது என்னுடையதும் கூட என அக்கனவை சுவீகரித்துக்கொண்டு அல்லும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கும் தந்தையருக்கு, அந்த கனவை நிஜமாக்கி தந்தையரின் காதுபட நாலு பேர் நம்மைப்பற்றி வாழ்த்துப்புராணம் பாடுவதை நிகழ்த்திக்காட்டுவதை தவிர பிள்ளைகள் வேறு என்ன கைம்மாறு செய்துவிட முடியும்? சிராஜ் அதைத்தான் இன்று தன் தந்தைக்கு செய்திருக்கிறார்.
உங்களின் தோளோடு தோளாக நின்று இந்த வெற்றியை அனுபவித்து கொண்டாட ஒரு உருவமாக இவ்வுலகில் உங்களின் தந்தை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரின் ஆன்மா இந்த வெற்றியை பார்த்து, இதுவரை அடைந்திடாத பெரும் அகமகிழ்வை அடைந்திருக்கும்.
வாழ்த்துகள் சிராஜ்!