"டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் முகமது கைஃப், சிட்னி டெஸ்ட்டில் நேற்று ரிஷப் பன்ட் ஆடிய ருத்ரதாண்டவம் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
ரிஷப் பன்ட் நம்பர் 5–ல் இறக்கி விடப்பட்டதில் ஆச்சர்யம் இல்லை. அவர் அந்த இடத்தில் இறங்கி வெற்றிக்காக போராடியதால்தான், நம்மால் போட்டியை டிரா செய்ய முடிந்தது. அவர் பேட் செய்ய சென்றபோது, என் நினைவு ஐ.பி.எல் போட்டிகளுக்குத் திரும்பியது. அன்று இரவு அவர் டக் அவுட்டில் இருக்கும்போது, கோச்சிங் குழுவில் இருக்கும் நாங்கள் பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசித்தோம். முடிவில், ரிஷப் பன்ட்டை அவது இயல்பான இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. ஏனெனில் அதற்கு முன் அவர் பின்வரிசையில் இறங்கிக் கொண்டிருந்தார். அந்த இடத்தில் அவர் பெரிதாக ரன் குவிக்கவும் இல்லை.
அது உடனடியாக எடுக்கப்பட்ட முடிவு. பேசி முடித்து திரும்பவும் டக் அவுட் வந்தோம். தலைமை பயிற்சியாளர் ரிக்கி பான்டிங், 'பேடைக் கட்டிக்கொள், நீதான் அடுத்து இறங்க வேண்டும்' என்றார். 'நானா' என புருவம் உயர்த்தவில்லை; அவர் முகத்தில் பதற்றமோ, ஆச்சர்யமோ துளியும் இல்லை. 'சரி' என தலையசைத்துக் கொண்டு, பேடைக் கட்டினார். பின் வழக்கம்போல, பக்கத்தில் இருப்பவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். களமிறங்கிய பின் அந்த டோர்னமென்ட்டின் அவரது பெஸ்ட் இன்னிங்ஸை ஆடினார்.
சில பேட்ஸ்மேன்களுக்கு மன ரீதியாக தங்களை தயார்படுத்திக்கொள்ள குறைந்தது ஒரு நாளாவது வேண்டும். ஆனால், ரிஷப் பன்ட்டுக்கு சில நிமிடங்கள் போதும். 'இதெல்லாம் ஒரு விஷயமா' என டீல் செய்வார். களமிறங்குவார்; செட்டிலாக சில பந்துகள் எடுத்துக்கொள்வார். பின் வெளுத்து வாங்குவார். சிட்னி டெஸ்ட்டில் நேற்று அதுதான் நடந்தது.
அவர் ஐந்தாவது நாளில் பேட் செய்ய களமிறங்குகிறார். நாதன் லயன் எப்படியாவது விக்கெட் எடுக்க வேண்டும் என தீவிர முனைப்பில் இருக்கிறார். ஆனால், இதைப்பற்றியெல்லாம் பன்ட்டுக்கு கவலையில்லை. ஆஸி பெளலர்களுக்கு எதிராக கட் ஷாட், புல் ஷாட் என மிரட்டினார். பெளலரையோ, பிட்ச்சையோ நான் டாமினிட் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்ற மெசேஜை பாஸ் செய்தார். என்ன நினைத்தாரோ அதைச் செய்தார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியை நினைவுகூர விரும்புகிறேன். ஜஸ்ப்ரித் பும்ரா பந்தில் அட்டகாசமாக ஒரு ஸ்வாட் ஃப்ளிக் செய்தார் பன்ட். பந்து ஸ்கொயர் லெக் மேல் பறந்துகொண்டே இருந்தது. இதற்கு முன் பும்ரா பந்தை வேறு யாரும் இப்படி அடித்து நான் பார்த்ததில்லை. பன்ட் அடித்தார். ஏனெனில் அவரால் முடியும். இது அகந்தை அல்ல; ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தங்களிடம் இருக்க நினைக்கும் ஒருவிதமான ஈகோ. 90 ரன்களில் இருப்பதற்காக அவர் சிங்கிள் தட்ட மாட்டார். பும்ரா என்பதற்காக அவர் டிஃபன்ஸ் செய்ய மாட்டார். என் இயல்பான ஆட்டத்தை ஆடுகிறேன் என ஆடுவார்.
பன்ட் ஒரு ஸ்பெஷல் பேட்ஸ்மேன். சிலர் அவர் கன்சிஸ்டன்ட்டாக விளையாடுவதில்லை என நினைக்கலாம். ஆனால், முதிர்ச்சி அடையும்போது அந்த கன்சிஸ்டென்ஸியும் வந்துவிடும். அவருக்கு இப்போது 23 வயதுதான் ஆகிறது. ஆனால், அவரால் ஒவ்வொரு நான்கு இன்னிங்ஸில் இப்படியொரு ஆட்டத்தை ஆட முடியும்.
ஐ.பி.எல் முடிந்து ஒரு மாதமாக அவர் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவில் சக வீரர்கள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைத்ததும் பயிற்சிப் போட்டியில் சதம் அடித்தார். முதல் டெஸ்ட்டில் இடம்பெறவில்லை. இரண்டாவது டெஸ்ட்டில் 29 ரன்கள் எடுத்தார். அவர் வந்த பிறகே ரஹானேவின் ஆட்டமும் சூடுபிடித்தது. அதன்பின் சிட்னி டெஸ்ட். என்னைப் பொருத்தவரை, பன்ட்டுக்கு டெஸ்ட் ஃபார்மட் பொருத்தமாக இருக்கிறது. ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் சராசரி 50 வைத்திருக்கிறார். ஒரு முச்சதம் அடித்திருக்கிறார். இந்திய அணிக்கு இதுவெல்லாம் தெரியும். அதனால்தான் அவருக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
முன்கூட்டியே இறக்கியதில் எப்படி ஆச்சர்யமில்லையோ, அதேபோல, அவர் அவுட்டானதிலும் ஆச்சர்யமில்லை. இக்கட்டான சூழ்நிலையோ, சதமோ எனக்கு பெரிய விஷயமில்லை; நான் என் இயல்பான ஆட்டத்தை ஆடுவேன் என எதிரணிக்கு சொல்வதற்காகவே அந்த நேரத்தில் அப்படியொரு ஷாட் ஆடினார். ஒன்று மட்டும் உறுதி. இன்னும் இதுபோன்ற இன்னிங்ஸ்களை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம். தன் அட்டாக்கிங் அணுகுமுறையில் அவர் சமரசம் செய்துகொள்ளப்போவதில்லை. அவர் மாறமாட்டார். அவரைச் சுற்றி இருப்பவர்கள்தான் அவரைப் பற்றி புரிந்துகொண்டு, அவரது இயல்பை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடும் அவரால் இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுத் தர முடியும்."