ஐந்தாவது நாளில் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது இந்தியா. 98 ஓவர்கள், மூன்று இன்னிங்ஸ், 8 விக்கெட்டுகளே இருக்கிறது, ஆஸி பெளலிங் அட்டாக் அதைவிட வலுவாக இருக்கிறது. இந்தியா வெற்றிபெறுவது சிரமம் என்றே கணிக்கப்பட்டது. ரிக்கி பான்டிங், இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்கள் எடுப்பதே சிரமம் என்றார். அதற்கேற்ப ரஹானேவும் முதல் செஷனிலேயே அவுட்டாகிவிட்டார்.
ஆனால், இந்தியா சமயோசிதமாக ஹனுமா விஹாரிக்குப் பதிலாக ரிஷப் பன்ட்டை இறக்கிவிட்டது. அவரும் ஆரம்பத்தில் பொறுமை காத்தார். பின் இது என் நேச்சுரல் கேம் அல்ல என புரிந்து, ஆஸி பெளலிங்கை அட்டாக் செய்யத்தொடங்கினார். குறிப்பாக, ஆஸி யாரை வைத்து புஜாராவை கட்டம் கட்ட நினைத்ததோ, அந்த பெளலரை குறிவைத்தார் பன்ட். ஆம், நேதன் லயன் பந்தில் டவுன் தி லைன் வந்து பவுண்டரிகள் விளாசினார்.
கிட்டத்த, ஒன்டே மோடுக்கு வந்து வெளுத்துக் கட்ட, ரன்ரேட்டும் உயர்ந்தது. வழக்கம் போல, புஜாரா ஆங்கர் இன்னிங்ஸ் ஆடினார். அதனால் மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 206/3 ரன்கள் எடுத்தது. புஜாரா 41 (147), பன்ட் 73 (97) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் செஷன் முடிந்ததும் வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பினர். ரிஷப் பன்ட் கிளவுஸ் மற்றும் ஹெல்மட்டைக் கழற்றி, பிட்ச்சிலேயே வைத்து விட்டு பேட்டை மட்டும் கையில் எடுத்துச் சென்றார். கிட்டத்தட்ட எல்லா வீரர்களும் பெவிலியன் திரும்பி விட்டனர்.
ஆனால், ஸ்டீவ் ஸ்மித் மட்டும் களத்தில் நின்று ஒரு காரியம் செய்தார். அதாவது, பன்ட் பேட்டிங் பொசிஷனில் நிற்பதற்காக Guard எடுத்திருந்தார். பன்ட் குறித்து வைத்திருந்த அந்த லைனை ஸ்டீவ் ஸ்மித், கால்களால் மண்ணைத் தள்ளி அழித்துவிட்டார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இடைவேளை முடிந்ததும், அந்த கோடு அழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த பன்ட், எதுவும் சட்டை செய்யாமல், மீண்டும் கார்டு எடுத்து ஆட்டத்தைத் தொடர்ந்தார். ஆனால், அந்த செஷனின் முதல் ஓவரின் இரண்டவாது பந்தையே, ஸ்டார்க் பன்ட்டின் தலையை குறிவைத்து வீசினார்.
அதிர்ஷ்டவசமாக அது ஹெல்மட்டில் பட்டது. பன்ட் கன்கசன் சப் முறையில் வெளியேறிவிடுவாரோ என்ற அச்சம் இருந்தது. நல்லவேளை அவர் ஆட்டத்தைத் தொடர்ந்தார். ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வதற்காக ஆஸி வீரர்கள் எந்த லெவலுக்கும் போவார்கள் என்பது மீண்டும் நிரூபனமாகி உள்ளது. அதுவும், சேண்ட்பேப்பர் சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடை விதிக்கப்பட்ட பின்பும் ஸ்டீவ் ஸ்மித் திருந்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. என்னதான், இந்தியா அவர்களை மதிப்புடன் நடத்தினாலும், அவர்கள் தங்கள் இயல்பிலிருந்து ஒரு இஞ்ச் கூட மாறவில்லை என்பது மீண்டும் நிரூபனமாகி உள்ளது.