"இன்று அப்பா போய் விட்டார்... அடுத்து ஒருநாளில் நானும் நீயும் போய்த்தான் ஆக வேண்டும். நீ இந்தியாவுக்கு ஆட வேண்டும் என்பதுதான் அப்பாவின் மிகப்பெரிய ஆசை. அதை நிறைவேற்று!". அம்மாவிடம் இருந்து வந்த இந்த வார்த்தைகள் சுக்கு நூறாக உடைந்து இருந்த முகமது சிராஜின் இதயத்தை சீர்படுத்த தொடங்கியது.
கேப்டன் விராட் கோலியும் சிராஜ் அருகில் சென்று பதற்றப்படாமல், 'உன் தந்தையின் கனவை நிறைவேற்று!' என்று ஆறுதல் சொல்ல, சிராஜ் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தார். கண் இமைக்கும் நேரத்திற்குள்ளே இஷாந்த் விலகல், ஷமி காயம் என வரிசையாக நடக்க, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பு முகமது சிராஜுக்கு கிடைத்தது.
முகமது சிராஜ் இவ்வளவு தூரம் கடந்து வந்த பாதையில் பூக்கள் கிடையாது. வறுமை, நிராகரிப்பு, அவமானங்கள் என்று எத்தனையோ கொடுமைகளைக் கடந்துதான் இந்திய அணிக்கு தேர்வாகி இருந்தார் சிராஜ். ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது இடியென வந்து இறங்கியது, அவரது தந்தையின் மறைவு செய்தி.
சிராஜின் தாயார் கூட குடும்ப சூழ்நிலையில் கிரிக்கெட் அவசியமா என்று கேள்வி எழுப்பியபோது அவரது தந்தைதான் சிராஜின் மேல் முழு நம்பிக்கை வைத்து கிரிக்கெட் விளையாட ஒத்துழைப்பு தந்தார். பள்ளிக்கூடத்தை கட் அடித்து விட்டு கிரிக்கெட் ஆடினால் கூட சிராஜின் தந்தையிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வந்ததில்லை. இந்த கிரிக்கெட் ஒருநாள் நிச்சயம் நம் வாழ்வை மாற்றும் என்பது அவரது நம்பிக்கை.
18 வயதில் மபூப் என்பவர் நடத்தி வந்த கிரிக்கெட் க்ளபில் இணைகிறார் சிராஜ். 'எங்கள் க்ளபில் இணைந்து அவர் ஆடிய முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்' என்று இப்போது மகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார் மபூப். சிராஜிடம் அத்தனையும் இருந்தது. வேகம், வேரியேஷன், ஸ்விங் என எல்லாமே இருந்தது, பணத்தைத் தவிர.
ஒருமுறை அத்தனை வீரர்களும் செகந்தராபாத்தில் நடைபெற்ற ஃபிட்னஸ் கேம்ப்பில் பங்குபெற்ற போதும் சிராஜை மட்டும் காணவில்லை. என்ன காரணம் என்று மபூப் விசாரித்தபோது, 'ஹைதராபாத்தில் இருந்து செகந்தரபாத் வந்து செல்வதற்கு என்னிடம் பணம் இல்லை. என் தந்தையும் எவ்வளவுதான் எனக்கு தருவார்!' என்று பரிதாபமாக கேட்டுள்ளார் சிராஜ். அந்தளவு வறுமை!
புயல் காற்று மட்டுமே வீசிக் கொண்டிருந்த சிராஜின் வாழ்க்கையில் மெல்ல வசந்தம் எட்டிப் பார்க்க தொடங்கியது. புயல் காற்று தென்றலாக மாறியது போல, மாற்றங்கள் வர ஆரம்பித்தன. 2015-ம் ஆண்டு ஐதராபாத் அணிக்காக ரஞ்சி போட்டிகளில் ஆட ஆரம்பித்தார் சிராஜ். இப்போது இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் பரத் அருண்தான் அப்போதைய ஐதராபாத் அணியின் பயிற்சியாளர்.
140 கிமீ வேகத்தில் துல்லியமாக பந்து வீசும் சிராஜை செதுக்க தொடங்கினார் பரத். அதன் பயனாக அடுத்த ரஞ்சி தொடரில் 9 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி, ஐந்து ஆண்டுகள் கழித்து முதன்முதலாக ஐதராபாத் அணி ரஞ்சி நாக் அவுட் ஆட்டங்களில் நுழைய முக்கிய காரணம் வகித்தார் சிராஜ்.
ரஞ்சியில் ஜொலித்ததுமே ஐ.பி.எல் வாய்ப்பு தேடி வந்தது. 2.6 கோடி ரூபாய்க்கு சிராஜை வாங்கியது சன்ரைசர்ஸ் அணி. ஆறு ஆட்டங்களில் பத்து விக்கெட்டுகள் எடுத்தாலும், அவரது பந்து வீச்சில் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் எடுக்க ஆரம்பித்தனர். அடுத்ததாக பந்து வீச்சில் பலம் குன்றிய பெங்களூரு அணிக்காக ஆடினார் சிராஜ். அங்கும் அதே நிலைதான். விக்கெட் வீழ்த்தினாலும் ரன்களை வாரி இறைத்துக் கொண்டே இருந்தார்.
என்ன தான் IPL தொடரில் சொதப்பினாலும் உள்ளூர் ஆட்டங்களில் தொடர்ந்து ஜொலித்தார். ரஞ்சி, விஜய் ஹசாரே, இந்தியா 'ஏ' என தான் ஆடிய அத்தனை அணிகளுக்கும் தன்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்கினார். 2018 விஜய் ஹசாரே தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் சிராஜ்தான். அந்த ஆண்டில் மட்டும் 10 முதல் தர ஆட்டங்கள் விளையாடி 55 விக்கெட்டுகளை அள்ளிக் கொண்டு வந்தார். அதிலும் குறிப்பாக தென் ஆப்ரிக்கா 'ஏ' அணிக்கு எதிராக ஒரே ஆட்டத்தில் 10 விக்கெட்டுகுள். ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகள் என்று அசத்திக் கொண்டிருந்தார்.
இது எதுவுமே தெரியாமல் அவரின் IPL ஆட்டத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு, சிலர் மோசமாக விமர்சித்து வந்தனர். அவர் ரன் மெஷின், அவர் இருந்தால் பெங்களூரு அணி ஜெயிக்காது என்றெல்லாம் கிண்டல் செய்தார்கள். ஆனால், அதையும் கூட இந்தமுறை உடைத்துக் காட்டினார் சிராஜ். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் முடிவதற்குள்ளேயே கொல்கத்தா அணி நான்கு விக்கெட்டுகளை இழந்தது. அதில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியவர் சிராஜ்.
2018–ம் ஆண்டு கேப்டன் விராட் மற்றும் சிலர் இணைந்து சிராஜ் வீட்டிற்கு சென்று ஐதராபாத்தின் சிறப்பான பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர். பாக்ஸிங் டே டெஸ்ட்டில் அறிமுகமாகி, தன் முதல் போட்டியில் ஆஸியின் மெயின் பேட்ஸ்மேனான லபுஷேன் விக்கெட்டை வீழ்த்தியதைப் பார்த்ததும், சிராஜ் குடும்பம் ஆனந்தக் கண்ணீர் வடித்தது. ஆம், அவர் தந்தை நினைத்தது போலவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆடிவிட்டார். ஆனால், அதைப் பார்க்கத்தான் அவரது தந்தைக்குக் கொடுத்து வைக்கவில்லை!
சிராஜின் சகோதரரான இஸ்மாயில் கனத்த இதயத்தோடு, 'அப்பா இன்று இருந்திருக்கலாம்' என்கிறார். அந்த அளவு அப்பா பாசம் சிராஜுக்கு. சிராஜ் கூட IPL வாய்ப்பு வந்தவுடன், 'இனிமேல் அப்பா ஆட்டோ ஓட்ட தேவையில்லை!' என்று சந்தோஷமாகக் கூறினார். தந்தையின் மீது இவ்வளவு நேசம் வைத்திருக்கும் ஒரு மகனைத்தான், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாமல் செய்துவிட்டது காலம். லபுஷேனை அவுட் ஆக்கியதும் முதல் ஆளாக கை தட்டி இருப்பார் சிராஜின் தந்தை. இனி எடுக்கப் போகும் அத்தனை விக்கெட்டுகளும், சிராஜ் தன் தந்தைக்கு செலுத்தும் மரியாதைதான்!