தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதற்காக, அப்போதைய ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஓராண்டு தடை விதித்திருந்தது. தடை முடிந்து அவர்கள், 2019 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றபோது, இங்கிலாந்து ரசிகர்கள் இருவருக்கு எதிராகவும் 'boo' செய்தனர்.
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியின்போதும், பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக இந்திய ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதை களத்தில் பேட் செய்து கொண்டிருந்த விராட் கோலி கவனித்தார். உடனே ரசிகர்களை நோக்கி, 'என்ன இது, இப்படியெல்லாம் நடந்துகொள்ளக்கூடாது. அவரை அங்கீகரிக்க வேண்டும். அவரை கைதட்டி பாராட்டுங்கள்' என இந்திய ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். தனக்கு சாதகமாக பேசிய விராட்டை, ஸ்மித் தோளில் தட்டிக் கொடுத்தார். போட்டி முடிந்தபின் நடந்த பிரஸ் மீட்டில் கோலியிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.
"செய்த தவறுக்கு வருந்தி, அதற்கு தண்டனை அனுபவித்துவிட்டு, இருவரும் தங்கள் நாட்டுக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர். எங்களுக்குள் இதற்கு முன் பிரச்னைகள் இருந்திருக்கலாம். அதற்காக, அவர்கள் ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும்போதும், அதே பிரச்னையைச் சொல்லி சொல்லி அவமதிப்பது நல்லதல்ல. இந்திய ரசிகர்கள் ஸ்மித்துக்கு எதிராக நடந்துகொண்ட விதம் ஏற்கத்தக்கதல்ல. boo செய்யும் வகையில் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. வெறுமனே கிரிக்கெட் ஆடுகிறார். அவ்வளவுதான். செய்த தவறுக்கு வருந்தி, மன்னிப்பு கேட்ட பின், எனக்கு எதிராக இப்படி நடந்தால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதனால்தான், ரசிகர்கள் சார்பில் நான் வருந்துவதாக அவரிடம் தெரிவித்தேன்." என விராட் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் ஐ.சி.சி கடந்த பத்து ஆண்டுகளில் களத்தில் கண்ணியமாக நடந்துகொண்ட, சிறந்த ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்டர் யார் என ஓட்டெடுப்பு நடத்தியது. அதில், ஸ்மித்துக்கு ஆதரவாக நின்ற விராட்டே, சிறந்த ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்டர் என தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக, ஐ.சி.சி சமூகவலைதளத்தில் தெரிவித்திருந்தது.
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு டெஸ்ட் அரங்கின் தலைசிறந்த இரண்டு பேட்ஸ்மேன்களான கோலி, ஸ்மித் இருவரும் தங்கள் கிரிக்கெட் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசினர். அப்போது, 'உலகக் கோப்பையின்போது ரசிகர்கள் எனக்கு எதிராக boo செய்தபோது என்னை ஆதரித்ததற்கு நன்றி. உங்களுக்கு எப்படி அப்படியொரு எண்ணம் தோன்றியது?" என ஸ்மித் கேட்டார்.
அதற்கு கோலி, "என்ன நடந்ததோ, அதற்குரிய தண்டனையை அனுபவித்து நீங்கள் மீண்டும் களத்துக்கு திரும்பியிருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை. தனிப்பட்ட முறையில் ஒருவரை டார்கெட் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. என்னதான் நாம் இருவரும் எதிரெதிராக விளையாடியிருந்தாலும், மனிதாபிமான முறையில் பார்த்தால், போட்டி முடிந்த பின் நாம் இருவரும் பேசியாக வேண்டும். ஐ.பி.எல் போட்டிகளின்போது பேசினோம். இதோ பேசிக்கொண்டிருக்கிறோம். ஆம், களத்தில் மோதிக்கொள்கிறோம். ஆனால், தனிப்பட்ட முறையில் நாம் அடிக்கடி முகம் பார்த்து பேசியாக வேண்டும். அதனால், இதுபோன்ற சிறிய விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது எனத் தோன்றியது. நீண்ட கால பயனின் அடிப்படையில், எல்லா விஷயங்களையும் கருத்தில் கொண்டே அந்த முடிவை எடுத்தேன்" எனப் பதிலளித்தார்.