ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3வது போட்டி இன்று கான்பெரா மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக களமிறங்கினார் ‘யார்க்கர் நாயகன்’ நடராஜன்.
இந்தியாவுக்கான முதல் ஆட்டத்திலேயே தனது அபார பந்து வீச்சின் மூலம் தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்திருக்கிறார் நடராஜன். முதல் 2 போட்டிகளிலும் 25 ஓவர்கள் வரை விக்கெட் வலையில் விழாமல் இருந்தனர் ஆஸ்திரேலியாவின் ஓப்பனர்கள்.
ஆனால் இன்றைய ஆட்டத்தின் போது இந்தியாவுக்காக நடராஜன் வீசிய பந்தில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். நடராஜன் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலேயே 2 விக்கெட் வீழ்த்தி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுவரை சுமார் 900 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் இந்திய கிரிக்கெட்டின் இத்தனை வருட வரலாற்றில் மொத்தமாகவே 10 இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்தான் இந்திய அணிக்காக ஆடியுள்ளனர். நடராஜன் தான் 11 வது வீரர்.
கர்ஷன் கௌரி, ரஷீத் படேல், ஆர்.பி.சிங் என பழங்கால வீரர்கள் சிலர் இருந்தாலும் 2000ம் வருடத்தை சுற்றிதான் இந்திய அணிக்குள் தொடர்ச்சியாக இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் வரத்தொடங்கினர். நெஹ்ரா 1997ம் ஆண்டே அறிமுகமாகியிருந்தாலும் தொடர் காயங்கள் காரணமாக ஏற்ற இறக்கமான கரியரைத்தான் கொண்டிருந்தார் நெஹ்ரா.
2011 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவியிருந்தார். எதிரணியை மிரட்டும் வகையில் இந்தியாவின் கையிலிருந்த ஒரே இடக்கை பௌலர் ஜாஹிர் கான் தான். 2011 உலகக்கோப்பையில் 21 விக்கெட்டுகளை அடுத்து இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
ஆர்.பி.சிங், இர்ஃபான் பதான் ஆகியோரெல்லாம் 2007-11 காலகட்டத்திற்கு பிறகு பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. இவர்களுக்கு பிறகு வந்த உனத்கட் மற்றும் கலீல் அஹமது கூட வழக்கமான இடக்கை பௌலர்களாகத்தான் அறியப்பட்டனர். இந்த இடத்திலிருந்துதான் அணிக்குள் நடராஜனின் தேவையை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இந்திய அணிக்கு இப்போது எதிரணியை மிரட்டும் வகையில் ஒரு இடக்கை பந்து வீச்சாளர் தேவைப்படுகிறார். அந்த தேவையை நடராஜன் தனது யார்க்கர்கள் மூலம் நிறைவேற்றுவார் என்பதே இந்திய அணியின் எதிர்பார்ப்பு.
2007 டி20 உலகக்கோப்பையை வென்ற போதும் சரி, 2011 உலகக்கோப்பையை வென்ற போதும் சரி, இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் ஆர்.பி.சிங்கும் ஜாஹிர்கானும்தான். எனவே, அடுத்து வரும் டி20 உலகக்கோப்பையில் நடராஜன் இந்தியாவின் துருப்புச்சீட்டுகளில் ஒருவராக இருப்பார் என்பது தெளிவாகிறது.