விளையாட்டு

“இனி திருப்பி அடிக்க எங்க பக்கமும் ஆள் இருக்கு” : ஆஸி. மண்ணில் சச்சின் பொளந்து கட்டிய 5 இன்னிங்ஸ்கள் !

"ஆஸ்திரேலியா என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா" என்று தன்னுடைய ஃப்ளைட்டை சிட்னி, பெர்த், மெல்போர்ன் என பல மைதானங்களில் இயக்கியவர் சச்சின்.

“இனி திருப்பி அடிக்க எங்க பக்கமும் ஆள் இருக்கு” : ஆஸி. மண்ணில் சச்சின் பொளந்து கட்டிய 5 இன்னிங்ஸ்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

90 களில் வெளிநாட்டு தொடர்களில் இந்தியா ஆடுகிறது என்றால் இந்திய பேட்ஸ்மேன்கள் பலர் களத்திற்குள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். இந்திய துணைக்கண்ட மைதானங்களில் சீறிப் பாய்ந்தவர்கள் எல்லாம் வெளி நாட்டு மைதானங்களில் ஆக்ரோஷத்தை எல்லாம் ஓரமாக வைத்து விட்டு கப் சிப் என்று அமைதி ஆகிவிடுவர்.

ஆனால், ஒருவர் மட்டும் இதில் விதிவிலக்கு. அத்தனை பேட்ஸ்மேன்களும் திணறிக் கொண்டிருக்கும்போது தனி ஆளாக பல பவுலர்களுக்கு தண்ணி காட்டியவர் நம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் ரிங் மாஸ்டருக்கு கட்டுப்படும் சர்கக்ஸ் சிங்கம் போல கட்டுப்பட்டு நிற்கும்போது, பத்து மத யானைகளை தனியாக எதிர்க்கும் கஷிரங்கா காட்டு சிங்கம் போல எதிர்த்து நின்றவர் சச்சின்.

ஆஸ்திரேலியா என்றாலே அடி வாங்குவது சகஜம் தானப்பா என்று இருந்த காலத்தில் "ஆஸ்திரேலியா என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா" என்று தன்னுடைய ஃப்ளைட்டை சிட்னி, பெர்த், மெல்போர்ன் என பல மைதானங்களில் இயக்கியவர் சச்சின். அப்படி சச்சின் ஆஸ்திரேலியாவில் பொளந்து கட்டிய ஐந்து அற்புதமான இன்னிங்ஸ்கள் இதோ.

“இனி திருப்பி அடிக்க எங்க பக்கமும் ஆள் இருக்கு” : ஆஸி. மண்ணில் சச்சின் பொளந்து கட்டிய 5 இன்னிங்ஸ்கள் !

91 - ப்ரிஸ்பேன், 2008

2008 - T20 ஃபார்மட் அறிமுகமாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்த காலமாக இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் தரத்தை அது குறைக்காத காலம். மைதானத்தின் தன்மை மற்றும் அணியின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு எப்படி ஆடுவது என்று பலருக்கு சச்சின் பாடம் எடுத்த போட்டி இது. ப்ரெட் லீ உச்சகட்ட வேகத்தில் பந்து வீச ஆரம்பித்தார். சச்சின் அசரவில்லை. முதல் ஐந்து ஓவரில் வெறும் 14 ரன்கள்தான். 25 பந்துகள் பிடித்த பின்பு தான் முதல் பவுண்டரி அடித்தார் சச்சின்.

பத்து ஓவர் கழிந்த பின்னர் தன்னுடைய வழக்கமான கண்கவர் பவுண்டரிகளை ஆரம்பித்து வைத்தார். கிளார்க், ஜான்சன், லீ என ஒரு பந்து வீச்சாளர் கூட அன்று அவருக்கு தொல்லை கொடுக்கவில்லை. அத்தனை பவுலர்களையும் எளிதாக சமாளித்தார். 121 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த சிக்கலான மைதானத்தில் வேறு எந்த இந்திய வீரரும் அரை சதம் கடக்க வில்லை.

பிரவீன் குமார் துல்லியமாக பந்து வீச இறுதியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காமன்வெல்த் பேங்க் தொடரை இந்தியா கைப்பற்றியது. பார்ப்பதற்கு அதிக பந்துகளை சச்சின் எடுத்துக் கொண்டது போல் தெரிந்தாலும், 2011 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 85 ரன்களை போல மதிப்பு மிக்கது இந்த இன்னிங்ஸ்.

“இனி திருப்பி அடிக்க எங்க பக்கமும் ஆள் இருக்கு” : ஆஸி. மண்ணில் சச்சின் பொளந்து கட்டிய 5 இன்னிங்ஸ்கள் !

116 & 52 - மெல்போர்ன், 1999

1998–ம் ஆண்டு சச்சினின் ஆண்டு. எந்த பந்து வீச்சாளராலும் அவரை எதிர்த்து நிற்க முடியாத அளவுக்கு அவரது ஆட்டம் வெறித்தனமாக இருந்தது. அதே ஃபார்ம் 1999-ம் ஆண்டும் தொடர்ந்தது. ஆனால், இந்த முறை மெக்ராத் மற்றும் வார்னே எனும் இரண்டு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஜொலிக்க ஆரம்பித்தனர். ஒரு பக்கம் பேட்டிங் மேஸ்ட்ரோ - அந்த பக்கம் அக்யூரசி அரசன் மெக்ராத் மற்றும் சுழல் சூறாவளி வார்னே.

இந்த இரண்டும் மோதிக் கொண்டால் யார் பலசாலி என்று தெரிந்துவிடும். அதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது 1999ம் ஆண்டு, இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடந்த ஆட்டம். ஆஸ்திரேலியா 429 ரன்கள் எடுத்து பெளலிங்கில் மிரட்ட, இந்திய பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல தங்கள் வேலையைக் காட்ட, சச்சின் மட்டும் தனியாக நின்றார் அன்று.

மெக்ராத், ப்ரெட் லீ, பிளெமிங், வார்னே என்ற மெகா கூட்டணியை எதிர்த்து "வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்" என்பது போல நின்று கொண்டிருந்தார் சச்சின். எதற்கும் பயப்படாமல் வருவது வரட்டும் என்று எல்லா பந்துவீச்சாளர்களையும் வெளுத்து வாங்கினார். இந்திய அணியின் அத்தனை மேட்ஸ்மேன்களையும் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியால் சச்சினை திணற வைக்கக் கூட முடியவில்லை. சச்சின் ஒன்பதாவது ஆளாக அவுட் ஆனார்.

“இனி திருப்பி அடிக்க எங்க பக்கமும் ஆள் இருக்கு” : ஆஸி. மண்ணில் சச்சின் பொளந்து கட்டிய 5 இன்னிங்ஸ்கள் !

அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 212. அதில் சச்சின் மட்டும் 116 ரன்களை எடுத்திருந்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் சச்சின் மட்டுமே அரை சதம் கடந்தார். இந்திய அணி இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் ஆட்ட நாயகன் விருதை வென்றார் சச்சின்.

114 - பெர்த், 1992

உலகிலேயே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் பெர்த். பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆகும் பிட்ச் வேறு. இதில் ஒரு 19 வயது சிறுவனை ஆடச் சொன்னால் எப்படி? அதுவும் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்த பிறகு. இரண்டாம் வகுப்பு மாணவனிடம் இன்டகிரல் கால்குலஸ் கணக்கு போடச் சொல்வது போன்ற வேலை இது. ஆனால் சச்சின் இந்த கடினமான தேர்வை எதிர் கொண்டார்.

எதிர்கொண்டது மட்டுமில்லாது ஜெயித்தும் காட்டினார். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் போய் விட்டாலும் சச்சினும் கிரண் மோரும் இணைந்து அணியைத் தாங்கி பிடித்தார். சச்சின் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்த போட்டி இதுதான். இந்திய அணி தோல்வி அடைந்தாலும் "இனி திருப்பி அடிக்க எங்க பக்கமும் ஆள் இருக்கு" உலகிற்கு என அறிவித்த ஆட்டம் இது.

117 நாட் அவுட் - சிட்னி, 2008

ஆஸ்திரேலிய அணி வைத்த 240 என்ற இலக்கை துரத்தியது இந்திய அணி. நாதன் ப்ராக்கன் பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை ஆரம்பித்தார் சச்சின். டாப் ஆர்டர் வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்காத காரணத்தினால் மிடில் ஆர்டரில் ரோகித்துடன் இணைந்து ஆட ஆரம்பித்தார் சச்சின். விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டு அதே நேரத்தில் ரன் ரேட்டையும் அதிகரிக்க விடாமல் அற்புதமாக ஆடினர் இருவரும். ஜேம்ஸ் ஹோப்ஸ் பந்தை அழகாக தட்டி விட்டு சதம் கடந்தார் சச்சின். ஆஸ்திரேலியா மண்ணில், ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த ஒரே சதம் இதுதான். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் லிட்டில் மாஸ்டர்.

“இனி திருப்பி அடிக்க எங்க பக்கமும் ஆள் இருக்கு” : ஆஸி. மண்ணில் சச்சின் பொளந்து கட்டிய 5 இன்னிங்ஸ்கள் !

241 - சிட்னி, 2004

2003ம் ஆண்டு சச்சினுக்கு மோசமான ஆண்டு. உலகக்கோப்பையில் வெளுத்து வாங்கினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த ஆண்டின் அவருடைய ஆவரேஜ் 17 தான். அதுவும் 2003 இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த இரண்டு ஆட்டத்திலும் அவரால் அரைசதம் கூட கடக்க முடியவில்லை. கவர் ட்ரைவ் அடிக்க முயன்று நான்கு இன்னிங்சில் மூன்று முறை அவுட் ஆனார். அதற்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் அடுத்த ஆட்டத்தில் கவர் ட்ரைவ் மட்டுமல்ல... கவர்ஸ் திசையில் ஒரு ரன் கூட அடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இருந்தது மட்டுமல்ல... அதை சாதித்தும் காட்டினார். 29 பவுண்டரிகள் அடித்தார். ஒன்று கூட கவர்ஸ் திசையில் போகவில்லை.

சந்திரமுகி பட பாம்புக்கு கூட இரண்டு மூன்று காட்சிகளில் வேலை இருந்தது. ஆனால், அன்றைய ஆஸ்திரேலிய அணக்காக ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்தவர்களுக்கு சுத்தமாக வேலை இல்லாமல் செய்து விட்டார் சச்சின். அந்த தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்காத சச்சின் முதல் இன்னிங்சில் 241 ரன்கள் அடுத்த இன்னிங்சில் 60 ரன்கள் என்று எடுத்து இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தார். முதல் ஐந்து இன்னிங்சில் வெறும் 82 ரன்கள் அடித்திருந்தவர் தொடரை முடிக்கும் போது எடுத்த ரன்கள் 383.

banner

Related Stories

Related Stories