இந்த ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப் பலவீனமாக இருப்பதாக ஏளனம் செய்து பேசியவர்களுக்கு எல்லாம் பதிலடி தரும் வகையில் முதல் போட்டியிலேயே பலமான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது சி.எஸ்.கே. அந்தப் போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கர்ரன் பங்கேற்றார். அந்த போட்டி விளையாடுவதற்கு இரு நாட்கள் முன்புதான் இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தார். தான் விளையாடும் அணிக்காக எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் பங்கேற்றது சி.எஸ்.கே அணி கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் பிளெம்மிங்கை வியக்க வைத்துள்ளது.
ஐ.பி.எல் 2020 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு முன்பு வரை சி.எஸ்.கே அணியில் வயதான வீரர்கள் உள்ளது, சி.எஸ்.கே அணியில் ரெய்னா - ஹர்பஜன் சிங் விலகியது, மேலும் அனுபவமுள்ள ஆல் - ரவுண்டர் பிராவோ காயத்தால் முழு உடற்தகுதியுடன் ஆட முடியாத நிலை என்று சி.எஸ்.கே அணிக்கு பெரும் சரிவாகவே இருந்தது மேலும் இதைப் பற்றியே முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விமர்சகர்களும் பேசி வந்தனர்.
இதனையடுத்து மாற்றாக யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பமும் நீடித்துவந்த நிலையில் தான் இளம் வேகப் பந்துவீச்சாளர், ஆல் - ரவுண்டரான சாம் கர்ரன் தேர்வு செய்யப்பட்டார். 22 வயதான இவர் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டி20 தொடரை முடித்த கையோடு ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாட வந்துள்ளார்.
முதல் போட்டியிலேயே அசத்தலாகப் பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசியதில் 28 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் தீபக் சாஹர், லுங்கி நிகிடியை ஒப்பிடுகையில் குறைவான ரன்களையே கொடுத்து இருந்தார். அவரது இந்த அசத்தலான ஆட்டம் அப்போதே அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
பந்துவீச்சில் தான் அசத்தல் என்றால் அடுத்து சேஸிங்கில் சி.எஸ்.கே அணியின் ரன்ரேட்டை உயர்த்த அதிரடியாக விளையாடுமாறு பேட்டிங்கிற்கு இறக்கப்பட்டார் சாம் கர்ரன். கேப்டன் தோனி சொன்னதை அப்படியே செய்து 6 பந்துகளில் (1 ஃபோர், 2 சிக்ஸ்) 18 ரன்கள் குவித்தார். 18 ரன்கள் தான் என்றாலும் அது சி.எஸ்.கே அணிக்குச் சிரமம் இல்லாமல் சேஸிங்கை முடிக்க நன்றாக உதவியது.
சாம் கர்ரனின் அணிக்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து ஆடியதைப் பார்த்து கேப்டன் தோனி வியந்துபோய் உள்ளதாக சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் கூறி உள்ளார். குறிப்பாக பிராவோவின் அனுபவமுள்ள ஆட்டத்தை ஈடு செய்து சி.எஸ்.கே அணியைப் பலமான அணியாக மாற்றி இருப்பது தோனிக்கு மேலும் நம்பிக்கையைச் சேர்த்துள்ளது.
சி.எஸ்.கே பயிற்சியாளர் பிளெம்மிங் கூறியதாவது :
“சாம் கர்ரன் நீண்ட தூரம் சென்று அனுபவம் உள்ள வீரர்களின் இடத்தை நிரப்பி இருக்கிறார். முக்கியமான நேரத்தில் அவர் அணிக்கு உதவியது பாராட்டுக்குரியது.”
சி.எஸ்.கே அணி சாம் கர்ரனை தொடர்ந்து தங்கள் அணியில் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தோனியே “சாம் கர்ரன் ஒரு ”முழுமையான கிரிக்கெட் வீரர் “ என்றும் ”ஒரு சிறந்த ஆல் ரவுண்டர்” என்றும் கூறியுள்ளார்.
இதன் காரணமாகத்தான் நேற்றைய போட்டியில் ட்விஸ்ட்டாக சாம் கர்ரன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். அதற்கான பலனும் கிடைத்துள்ளது. மேலும் இந்த அதிரடி மாற்றம் இந்த சீசனில் சி.எஸ்.கே அணிக்கு ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தைத் தந்துள்ளது.
இதுவரை சாம் கர்ரன் சி.எஸ்.கே அணிக்காக 8 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் பிளெம்மிங் மற்றும் தோனிஅவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையானது அதிகமாகும். சாம் கர்ரனின் ஆட்டத்தைப் பார்க்கும்போது பென் ஸ்டோக்ஸ் போல் உள்ளது என்று கூறியுள்ளனர்.
மற்ற வீரர்கள் அனைவரும் ஒரு நிதானமான ஆட்டத்தை ஆடும்போது இவரது அதிரடி ஆட்டம் ”யாருடா இந்த சாம் கர்ரன்” என்று கேட்கும் அளவிற்கு ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.