இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இதனால் அனைத்து அணிகளின் வீரர்களும் வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்கஸ் அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான பந்துவீச்சாளர்களில் ஒருவரான டிரெண்ட் போல்ட் துபாய் சென்றடைந்து வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.
அவ்வாறு அவர் வலைபயிற்சியில் ஈடுபடும்போது பவுலிங் செய்து ஸ்டம்புகளை தகர்க்கும் காட்சிகள் கொண்ட வீடியோவை அந்த அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹிளா ஜெயவர்தனா மேற்பார்வையில் போல்ட் பந்து வீசுகிறார்.
அப்போது அவர் வீசிய பந்து சரியாக மிடில் ஸ்டம்பை அடித்துத் தகர்க்கிறது. இதில் அந்த மிடில் ஸ்டம்ப் இரண்டாகப் பிளக்கிறது. இந்த வீடியோவை பகிர்ந்து, போல்ட் வந்துவிட்டார் என்ற வாசகத்துடன் அந்த ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக விளங்கிய லசித் மலிங்கா இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஆடவில்லை. ஆனாலும் அந்த அணிக்கு வலு சேர்க்க ஜஸ்பிரித் பும்ரா, மிஷெல் மெக்லெனாகன், டிரெண்ட் போல்ட் உள்ளிட்டோர் களம் இறங்க உள்ளனர்.