பெண் நடுவர் ஒருவரை பந்தால் தாக்கிய குற்றத்திற்காக நோவாக் ஜோகோவிச் அமெரிக்க ஓப்பன் தொடரிலிருந்து தடை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
ஸ்பெயினின் பாப்லோ கேரென்னோ பஸ்டாவுக்கு எதிரான போட்டியில் 5-6 என்ற செட் கணக்கில் பின்னடைவைச் சந்தித்த ஜோகோவிச் விரக்தியில் பந்தை பக்கவாட்டில் பேட்டால் ஓங்கி அடித்தார். அந்தப் பந்து எதிர்பாராத விதமாக கோட்டுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த பெண் நடுவரின் குரல்வளையில் பட்டது. பந்து பட்டவுடன் அந்தப் பெண் நடுவர் கீழே விழுந்து வலியால் துடித்துப்போனார்.
உடனே அவரை நோக்கிச் சென்ற ஜோகோவிச் அவரிடம் மன்னிப்புக் கேட்டார். சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட அந்த பெண் நடுவர் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பி பின்னர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து களத்துக்கு வந்த தொடரின் நடுவர், போட்டி நடுவருடன் 10 நிமிடங்கள் கலந்தாலோசித்தார். அதன் பின் ஜோகோவிச் தோல்வியுற்றதாகவும், கேரென்னோ பஸ்டா வெற்றிபெற்றதாகவும் அறிவித்தார்.
அமெரிக்க ஓப்பன் விதிகளின் படி ஜோகோவிச் தொடரிலிருந்து தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் அவர் இதுவரை இத்தொடரில் வென்ற 2,50,000 அமெரிக்க டாலர்களும் அவரிடமிருந்து அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன் பின் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய ஜோகோவிச் ஒரு நீண்ட இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டு மன்னிப்புக் கோரியுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் எந்த உள்நோக்கத்திலும் நடைபெறவில்லை என்றும், எதிர்பாராத விதமாக நடந்த தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொடரில் வெற்றி பெற்றால் ஜோகோவிச் 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருப்பார். ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால் இருவருமே இத்தொடரில் கலந்துகொள்ளவில்லை என்பதால், அவருக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. இதுவரை ஜோகோவிச் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், நடால் 19 பட்டங்களையும், ஃபெடரர் 20 பட்டங்களையும் வென்றுள்ளனர்.
மூன்று முக்கிய வீரர்களும் இல்லாத நிலையில் இந்த ஆண்டு அமெரிக்க ஓப்பன் தொடரை வெல்வதற்கு ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெர்வுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.