இந்த ஆண்டு ஐசிசி 'ஹால் ஆப் ஃபேம்' பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர்கள் யாரும் இடம்பெறவில்லை என்றாலும், ஒரு இந்தியர் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை லிசா ஸ்தலேகரே அவர்.
புனேவில் பிறந்த லிசாவை அவரது தந்தை ஹரேன் ஸ்தலேகர் மற்றும் ஸு ஸ்தலேகர் இருவரும் 3 வாரக் குழந்தையாகத் தத்தெடுத்துள்ளனர். கிரிக்கெட்டின் மீது ஆழ்ந்த காதல் கொண்ட ஹரன் மும்பையைப் பூர்விகமாகக் கொண்டவர். அவர் சிறு வயதிலேயே லிசாவுக்கு கிரிக்கெட் சொல்லித்தர 8 – 9 வயது முதலே அவர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய திறமையால் ஜொலித்த லிசாவுக்கு 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. பந்து வீச்சாளராக தன் பயணத்தைத் தொடங்கிய லிசா விரைவில் முன்னணி பேட்ஸ்வுமனாகவும் வளர்ந்தார்.
அதனால் கேப்டன் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது. பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையை 4 முறை ஆஸ்திரேலிய அணி வென்றபோது லிசா அதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல் 54 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
பெண்கள் கிரிக்கெட் உலகில் முக்கியமாக ஆல்-ரவுண்டராக விளங்கிய லிசா பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 1,000 ரன்கள் அடித்து பந்து வீச்சில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் சாதித்தவர்களைப் பட்டியலிடும் ஐசிசி ‘ஹால் ஆப் ஃபேம்’ பட்டியலில் அவர் ஓய்வு பெற்ற சில நாட்களிலேயே இடம்பெற்றுள்ளார்.