ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனைக்குச் சொந்தக்காரரான உசேன் போல்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய 34வது பிறந்தநாளுக்கு நடந்த பார்ட்டியில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் கொண்டாடியதால் உசேன் போல்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி உசேன் போல்ட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் கொரோனா தொற்றுக்கான சோதனை செய்துகொண்டதாகவும், முடிவுகள் வருவதற்காக காத்திருப்பதாகவும் கூறினார். மேலும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், எல்லோரும் பாதுகாப்பாக இருக்குமாறும் அந்த வீடியோவில் போல்ட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு அடுத்த நாள் ஜமைக்கா நாட்டு சுகாதாரத்துறை உசேன் போல்டுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தன்னுடைய 34வது பிறந்தநாளை பெரும் விழாவாக போல்ட் கொண்டாடியதில், பல ஜமைக்கா நாட்டு முக்கிய பிரமுகர்கள் மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். அந்த பார்ட்டியில் போல்ட் எல்லோருடனும் சமூக விலகலை கடைப்பிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
அதன் பின் போல்ட் மிகச்றந்த பிறந்தநாள் என அவரது மகளுடன் உள்ள புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். அவருக்கும் அவரது தோழி கேசி பெனட்டுக்கும் கடந்த மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் போல்ட் மீண்டு வரவேண்டும் என அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதிவருகின்றனர்.
ஒலிம்பிக்கில் 100மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தொடர்ந்து மூன்று முறை தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே வீரர் போல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.